Published : 26 Dec 2020 02:24 PM
Last Updated : 26 Dec 2020 02:24 PM
திமுக ஆட்சி அமைந்ததும் கடற்கரைச் சாலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் கலைப்பிரிவு, திமுகவுக்குக் கோரிக்கைக் கடிதம் கொடுத்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்காகக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் குறித்து திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கருத்துக் கேட்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினரைச் சந்தித்த காங்கிரஸ் கலைப்பிரிவு மாநிலத் தலைவர் கே.சந்திரசேகரன், கீழக்கண்ட கோரிக்கைகளைத் திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வலியுறுத்தியுள்ளார்.
அதன் விவரம் வருமாறு;
“நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்து பல ஆண்டுகளாகியும், தமிழகத் தலைநகர் சென்னையில் அவருக்கு ஒரு சிலை அமைக்கப்படவில்லையே என்ற எண்ணம் லட்சோபலட்சம் ரசிகர்களுக்கு இருந்தது. அந்த வேதனையைப் போக்கும் வகையில், 2006-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தேர்தல் அறிக்கையில் நடிகர் திலகம் சிவாஜிக்குச் சிலை அமைக்கப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது.
சொன்னதைச் செய்வோம் என்பதை நிரூபிக்கும் வகையில், திமுக ஆட்சி அமைந்த 3 மாதங்களிலேயே, 2006-ம் ஆண்டு ஜுலை 21-ம் தேதி சென்னைக் கடற்கரை, காமராஜர் சாலையில், நடிகர் திலகம் சிவாஜிக்குச் சிலை அமைக்கப்பட்டு, அன்றைய முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப் பட்டது. ஆனால் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, ஏதோ காரணங்களைக் கூறி அந்தச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது.
அகற்றப்பட்ட கண்ணகி சிலை மீண்டும் நிறுவப்பட்டதுபோல, 2021 தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சியமைந்தவுடன், அகற்றப்பட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை, சென்னைக் கடற்கரை, காமராஜர் சாலையில், மகாத்மா காந்தி சிலைக்கும், பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கும் நடுவில் அமைக்கப்படவேண்டும்.
நடிகர் திலகம் சிவாஜி பிறந்த நாளை, ‘கலை வளர்ச்சி நாள்’ என அறிவித்துக் கொண்டாட வேண்டும். பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை, ‘கல்வி வளர்ச்சி நாளாக’ திமுக ஆட்சியில்தான் அறிவித்து, பெருந்தலைவருக்குப் பெருமை சேர்க்கப்பட்டது. அதுபோல, தமிழினத்தின் மாபெரும் கலைஞனாக, பெருந்தலைவரின் சீடராக இறுதிவரை வாழ்ந்து மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளான அக்டோபர் 1-ம் தேதியை ‘கலை வளர்ச்சி நாளாக’ அறிவித்துப் பெருமை சேர்க்கவேண்டும்.”
இவ்வாறு சந்திரசேகரன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT