Published : 26 Dec 2020 01:52 PM
Last Updated : 26 Dec 2020 01:52 PM

வேலூரில் ஏர் கலப்பை சங்கமம்; மோடியின் விவசாய விரோத நிலையை அம்பலப்படுத்தும்: கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்

சென்னை

வேலூரில் நடைபெற இருக்கிற ஏர் கலப்பை சங்கமம் தமிழகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பாஜகவின் அவதூறு பிரச்சாரங்களையும், மோடியின் விவசாய விரோத நிலையையும் அம்பலப்படுத்துகிற வகையில் அமையும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (டிச.26) வெளியிட்ட அறிக்கை:

"மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த 30 நாட்களுக்கு மேலாக 96 ஆயிரம் டிராக்டர்கள், 20 லட்சம் விவசாயிகள் டிசம்பர் மாத கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தலைநகர் டெல்லியை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகளை முற்றுகையிடுகிற வகையில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேச விவசாயிகள் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இதுவரை 40 விவசாயிகள் மடிந்துள்ளனர்.

ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்கிற வகையில் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இல்லை. புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்று குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்கிற வகையிலும், கார்ப்பரேட்டுகளை வளர்க்கும் ஒப்பந்த விவசாயத்தை நீக்குகிற வகையிலும் புதிய சட்டம் கொண்டு வர வேண்டுமென்பதே விவசாயிகளின் ஒரே கோரிக்கை. இதை நிறைவேற்றுகிற வரை விவசாயிகளின் போராட்டம் ஓயப் போவதில்லை.

நேற்று மறைமலை நகரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசும்போது, 'தமிழகத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு இல்லை' என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்திருக்கிறார்.

சமீபத்தில் வள்ளுவர் கோட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பாக மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற வரலாறு காணாத உண்ணாவிரதப் போராட்டம் தமிழகத்தில் எத்தகைய எழுச்சியை ஏற்படுத்தியது என்பதை பிரகாஷ் ஜவடேகர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

பாஜக அரசின் வேளாண் சட்டங்களைத் தமிழகத்தில் விற்பனை செய்கிற ஜவடேகரின் முயற்சி, கொல்லன் தெருவில் ஊசி விற்கிற கதையாகத்தான் முடியும். தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரிகிற பாஜக எதிர்ப்புத் தீயை ஆயிரம் ஜவடேகர்கள் வந்தாலும் அணைக்க முடியாது.

புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்ப்பதற்கு நியாயமான காரணங்கள் நிறைய இருக்கின்றன. விவசாயிகள் நலனில் மோடி அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றுவோம், குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்குவோம் எனக் கூறிய பிரதமர் மோடி, புதிய வேளாண் சட்டத்தில் அதுகுறித்துக் குறிப்பிடாதது ஏன்?

குறைந்தபட்ச ஆதரவு விலையைக் குறிப்பிட்டால் விவசாயச் சந்தையை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்தமாகத் தாரை வார்க்க முடியாது என்பதுதான் காரணமாகும். அதனால்தான் ஒப்பந்த விவசாயத்தின்படி தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களை விவசாய விளைபொருட்களைக் கொள்முதல் செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதை அனுமதித்தால் பொது கொள்முதல் முறை முற்றிலும் அழிந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் அமல்படுத்துகிறபோது தனியார் வர்த்தகர்களும் அந்த விலைக்குக் குறைவாகக் கொள்முதல் செய்ய முடியாத நிலை இருந்தது. குறைந்தபட்ச ஆதரவு விலை மறுக்கப்பட்ட பிறகு, விவசாய உற்பத்தி சந்தைக்குழுக்கள் மூலம் நடைபெறும் கொள்முதல் ரத்து செய்யப்படும்போது, குறைந்தபட்ச ஆதரவு விலை முறையும் தானாக ரத்தாகிவிடும் என்பதே போராடும் விவசாயிகளின் அச்சமாக உள்ளது.

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடுகிற விவசாயிகள் பாஜகவின் ஒரே நாடு, ஒரே சந்தையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அதற்கு மாறாக, ஒரே நாடு, ஒரே குறைந்தபட்ச ஆதரவு விலை என்கிற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இதன்மூலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்பட்டால் அந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் வெளிச் சந்தையிலும், அதற்குக் குறைவான விலையில் தனியார் வர்த்தகர்கள் கொள்முதல் செய்ய முடியாது. இந்தப் பாதுகாப்பைத்தான் போராடி வருகிற விவசாயிகள் கேட்கிறார்கள்.

ஆனால், பாஜக அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை ஒழித்துவிட்டு, கார்ப்பரேட்டுகளுக்கு வழிவகுத்து அம்பானி, அதானி மூலமாக உணவு தானியக் கிடங்குகளைக் கட்டி, அங்கே தானியங்களை இருப்பு செய்து விவசாயிகளின் விளைபொருட்களைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் முடிவு செய்வதற்கு பாஜக அரசு வழிவகுத்திருக்கிறது.

இதன்மூலம் இந்தியாவின் பிரதமராக மோடி செயல்படுகிறாரா? அல்லது அம்பானி, அதானியின் தொழில் வளர்ச்சி மேலாளராகச் செயல்படுகிறாரா? என்கிற கேள்வி எழுகிறது. பிரதமர் மோடி ஆட்சியில் அதானியின் சொத்து மதிப்பு 230 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. இதன்படி, அதானியின் இன்றைய சொத்து மதிப்பு ரூபாய் 1 லட்சத்து 92 ஆயிரத்து 400 கோடி. நாட்டின் முதுகெலும்பாக இருக்கிற விவசாயிகளின் முதுகெலும்பை ஒடித்துவிட்டு, அதானியை வாழவைக்கும் பிரதமர் மோடியை விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள்.

பிரதமர் மோடி அறிவித்த கிசான் நிதியுதவி திட்டத்தின்படி ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு ரூபாய் 6,000 வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால், 2015-16 விவசாய சென்சஸ்படி 14.64 கோடி விவசாயிகள். இந்த விவசாயிகளுக்கு ரூபாய் 6,000 வீதம் ரூபாய் 88 ஆயிரம் கோடி வழங்கியிருக்க வேண்டும்.

ஆனால், மோடி அரசு வழங்கியதோ 2018-19இல் ரூபாய் 6,005 கோடி. 2019-20இல் ரூபாய் 49 ஆயிரத்து 196 கோடி. 2020-21இல் ரூபாய் 38 ஆயிரத்து 872 கோடி. நாட்டில் மொத்தமுள்ள 14.64 கோடி விவசாயிகளில் 9.24 கோடி விவசாயிகளுக்குத்தான் பிரதமரின் விவசாய நிதியுதவி திட்டம் பயனளித்திருக்கிறது. ஏறத்தாழ 5.40 கோடி விவசாயிகளுக்கு நிதியுதவி திட்டம் மறுக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி பேசுவதற்கும், செயல்படுத்துவதற்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா?

எனவே, இந்தியாவின் ஒட்டுமொத்த விவசாயிகளின் எதிரியாக இருக்கிற பிரதமர் மோடி தமது போக்கை மாற்றிக் கொண்டு, போராடுகிற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்து விவசாயிகளின் விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குகிற வகையில் புதிய சட்டம் கொண்டு வரவில்லையெனில் அதற்குரிய பாடத்தை விவசாயப் பெருங்குடி மக்கள் பாஜக அரசுக்குப் புகட்டுவார்கள்.

தமிழகத்தில் விவசாயிகளின் எதிர்ப்புக் குரலை ஒலிக்கிற வகையில் டிசம்பர் 28 அன்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வேலூரில் நடைபெற இருக்கிற ஏர் கலப்பை சங்கமம் தமிழகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பாஜகவின் அவதூறு பிரச்சாரங்களையும், மோடியின் விவசாய விரோத நிலையையும் அம்பலப்படுத்துகிற வகையில் அமையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x