Published : 30 Oct 2015 04:36 PM
Last Updated : 30 Oct 2015 04:36 PM

பாதுகாப்பற்ற இறைச்சி உணவு விற்பனை: குமரியில் நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் இறைச்சி விற்பனை அதிகம். கேரளத்தை ஒட்டியுள்ள மாவட்டம் என்பதால் கோழி, ஆட்டு இறைச்சிகளுக்கு அடுத்தபடியாக மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சியும் இங்கு அதிகம் விற்பனையாகிறது.

இதில் ஏகப்பட்ட விதிமீறல்களால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பிரகாஷ் கூறும்போது, `தமிழகத்தில் 2012-13-ம் ஆண்டில் மட்டும் 30 லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் உணவுக்காக கொல்லப்பட்டுள்ளன. இதன் மூலம் 35 ஆயிரம் டன் இறைச்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இது 2009-ம் ஆண்டு கணக்கெடுப்போடு ஒப்பிடும் போது இரு மடங்கு அதிகரித்துள்ளது. குமரி மாவட்டத்தை பொறுத்தவரை 18-வது பண்ணை விலங்குகள் கணக்கெடுப்பின்படி 80,067 காளை மற்றும் பசுக்கள், 1,668 எருமைகள், 54,237 வெள்ளாடுகள், 75,824 செம்மறியாடுகள், 1,385 பன்றிகள், 15,930 கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1958-ன் படி உணவுக்காக விலங்குகளை கொல்ல தகுதி சான்று வேண்டும். தகுதி சான்றிதழ் 10 வயதுக்கு அதிகமான, வேலை செய்வதற்கும் சந்ததிகளை உருவாக்கவியலாத அல்லது குணமாக்க முடியாத வியாதி தொற்றிய விலங்கு களுக்கும் மட்டுமே வழங்கப்படும். இதில் விதிமுறை மீறல் இருப்பின் 3 ஆண்டு சிறை,1,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும். 1976-ம் ஆண்டு பசுக்களை கொல்வதற்கு தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

சட்டவிதிகளின்படி விலங்குகளை வதை செய்யப்படும் இறைச்சி கொட்டில்கள் மத்திய மற்றும் மாநில நகராட்சி துறைகளில் உரிமம் பெற்றிருக்க வேண்டும். எந்த ஒரு நபரும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு அங்கீகாரம் பெறாத இறைச்சி கொட்டில் மற்றும் சட்டவிதிமுறைக்குட்பட்ட அதிகார குழுவின் உரிமம் பெறாத நபர்கள் விலங்குகளை கொல்ல இச்சட்டத்தில் உரிமம் இல்லை.

இதே போல் சினையான விலங்குகள் மற்றும் மூன்று மாத குட்டிகளை உடைய விலங்குகளை கொல்வதற்கு உரிமை இல்லை. உணவுக்காக கொல்லப்படும் விலங்குகளுக்கு கால்நடை மருத்துவரிடமிருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இம்மருத்துவர் இந்திய கால்நடை மருத்துவக் கழகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அல்லது நகராட்சி கால்நடை மருத்துவராக இருக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 96 விலங்குகளுக்குத் தான் சான்றிதழ் வழங்க வேண்டும்.

அனுமதி வழங்கப்பட்ட விலங்குகள் 24 மணி நேரத்துக்கு பின்னரே கொல்லப்பட வேண்டும். வேறு விலங்குகளின் கண் எதிரே விலங்குகள் கொல்லப்படக் கூடாது. கொல்வதற்கு முன் விலங்குகளுக்கு வேறு எந்த வேதி பொருள்களோ, மருந்துகளோ, ஹார்மோன்களோ வழங்கக் கூடாது.

குமரி மாவட்டத்தில் இச்சட்ட விதிகள் பின்பற்றப்படுவதில்லை. நாகர்கோவில் நகராட்சிக்கு உரிய இறைச்சி கொட்டியில் எந்த சட்டவிதிகளும் பின்பற்றப் படுவதில்லை. கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள இந்நிலையத்தில் விலங்குகளை கொல்வதற்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. விலங்குகள் இறைச்சிக்காக குளக்கரைகளிலும், வீதிகளிலும் தகுதி சான்றிதழ் இன்றி அனுமதிக்கப்படாத இடங்களில் வெட்டப்படுகின்றன. சுகாதாரமில்லாத பகுதியில் விற்பனை செய்யப்படுகின்றன.

விலங்குகள் வழி மனிதர்களுக்கு பரவும் பல கொடிய நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன. சுகாதாரமற்ற முறையில் பல வழிகளில் விதிமுறைகளை மீறி பொதுமக்களிடம் விற்கப்படும் இந்த இறைச்சிகளால் நோய்கள் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இனியும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் மாமிச பிரியர்களுக்கு நோய் தொற்றும் வாய்ப்பு அதிகம்” என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x