Published : 26 Dec 2020 10:30 AM
Last Updated : 26 Dec 2020 10:30 AM
சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் அனைவரும் கரோனா 'நெகட்டிவ்' சான்றுடன் வரவேண்டும் என்ற வகையிலான துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் முடிவுகள் சரியானதுதான் என, பாஜக கருத்து தெரிவித்துள்ளது.
இது குறித்து, புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவர் எம்.அருள்முருகன் இன்று (டிச. 26) வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
"சனிப்பெயர்ச்சி விழா தொடர்பாக புதுச்சேரி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் முரண்பாடான, தவறான தகவல்களை தெரிவித்துள்ளார். சனிப்பெயர்ச்சி விழாவை தடை செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த திருநள்ளாறைச் சேர்ந்த எஸ்.பி.எஸ்.நாதன் என்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். திருநள்ளாறு தொகுதியைச் சேர்ந்த அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், ஏன் எஸ்.பி.எஸ்.நாதனை அழைத்துப் பேசி வழக்கை வாபஸ் பெறச் செய்யவில்லை? அதனால் திட்டமிட்டு இந்துக்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் செயல்படுவதாக பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
அந்த வழக்கை முடித்து வைக்கும் நோக்கில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தன்னை அந்த வழக்கில் தாமாக இணைத்துக் கொண்டு, நீதிமன்றம் சொன்னபடி வழக்கில் தொடர்புடையோர் பங்கேற்ற கூட்டத்தைக் கூட்டிப் பேசி சில முடிவுகளை எடுத்துள்ளார். காரைக்கால் மக்கள் நலனை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு ஆளுநர் செய்த செயலை காரைக்கால் மக்களாகிய நாங்கள் மனதார பாரட்டுகிறோம்.
கரோனா தொற்று இன்னும் முற்றிலும் அழிந்துவிடவில்லை. கரோனா பரவல் காலத்தில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில்தான் எந்தவொரு நிகழ்வும் நடக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
ஆனால், இந்துசமய அறநிலையத் துறையை தன் வசம் வைத்துள்ள புதுச்சேரி முதல்வர், இவ்விஷயத்தில் எவ்வித தலையீடும் செய்யாமல் இருக்கிறார். புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்த அனுமதிக்கக் கூடாது என ஆளுநர் கூறிய பின்னரும் கூட, அதற்கு தீர்மானமாக அனுமதி அளித்த முதல்வர் வி.நாராயணசாமி, ஏன் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா விஷயத்தில் தலையிடவில்லை? இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.
தங்களுடைய தவறுகளை மறைப்பதற்காக அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிவிட்டு, இதனை பாஜகவினர் உணர்ந்துகொள்ள வேண்டும் என புத்திமதி சொல்கிறார்.
ஒரு நல்ல சூழலை உருவாக்கியுள்ள துணைநிலை ஆளுநர் மீது குற்றம் சுமத்த எவ்வித முகாந்திரமும், தகுதியும் இல்லை. அமைச்சர் தனது துறையையே சரியாக கவனிக்கவில்லை.
சனிப்பெயர்ச்சி விழாவின்போது லட்சக்கணக்கானோர் வரும்போது அதில் கரோன தொற்றுடன் கூடிய சில ஆயிரம் பேர் வந்துவிட்டால் காரைக்கால் மக்கள் நிலை என்னவாகும் என்பதைத்தான் ஆளுநர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.
இது ஒரு நாள் விழா மட்டுமல்ல, 48 நாட்களுக்கு மக்கள் வந்து செல்வார்கள். அதனால் கோயில் ஊழியர்கள் உட்பட மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஆளுநர் விரும்புகிறார். அதனால்தான் கரோனா 'நெகட்டிவ்' சான்றுடன் வரவேண்டும் எனக் கூறுகிறார்.
மத்திய அரசு நல்ல எண்ணம் கொண்ட அருமையான ஆளுநரையே நியமித்துள்ளது. மக்களை பற்றி சிந்திக்காத காங்கிரஸ் அரசு தனது தோல்வியை ஒப்புக்கொண்டு அக்கட்சியினர் சனிபகவானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT