Published : 17 Oct 2015 01:00 PM
Last Updated : 17 Oct 2015 01:00 PM

குற்றப்பின்னணி உள்ளவர்கள் இனி மலேசியா செல்ல முடியாது: கண்டுபிடிக்க மதுரையிலும் பயோ மெடிக்கல் மையம் தொடக்கம்

தென்மாவட்டங்களில் இருந்து மலேசியா செல்ல விரும்பும் தமிழர்கள், மதுரையில் அந்நாட்டு அரசின் அங்கீகாரம் பெற்ற 'பயோ மெடிக்கல்' மையத்தில் கைரேகை உள்ளிட்ட சோதனைகள் செய்த பிறகே செல்ல முடியும்.

தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஹோட்டல் வேலைக்காக ஆண்டுதோறும் மலேசியாவுக்கு அதி களவு செல்கின்றனர்.

இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு செல்லும் தொழிலாளர்களால் அந்நாட்டு அரசுக்குப் புதிய பிரச்சினைகள் ஏற்படுகிறதாம். மலேசியாவுக்கு வேலைக்காகச் சென்ற அவர்கள், அங்கு தங்கியிருக்கும்போது குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு சொந்த நாடுகளுக்கு தப்பி விடுகின்றனர். இவர்கள் மீண்டும் போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியாவுக்குள் நுழைவது அதிகரித்துள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீண்டும் மலேசியாவுக்கு வருவதைத் தடுக்கவும், குற்றச்செயல்களில் ஈடுபடாதவர்களை மட்டுமே மலேசியாவுக்குள் வர அனும திக்கவும் அந்நாட்டு அரசு வெளிநாட்டு தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பு மேலாண்மை மையம் என்ற புதிய கட்டமைப்பு முறையை உருவாக்கி உள்ளது.

அதன்படி, மலேசியா செல்லும் தொழிலாளர்களை முழு பரிசோ தனை செய்து விசாரித்து அனுப்புவதற்கு தமிழகத்தில் 'பயோ மெடிக்கல்' முறையில் மருத்துவப் பரிசோதனை செய்யும் 5 நிறுவனங்களுக்கு மலேசிய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இவற்றில் 4 நிறுவனங்கள் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளன.

தென்மாவட்டங்களில் இருந்து மலேசியா செல்வோருக்காக மதுரை கே.கே.நகரில் 'பயோ மெடிக்கல்' நிறுவனம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் உட்பட தென்மாவட்டங்களில் இருந்து மலேசியா செல்ல விரும்புவோர் 'பயோ மெடிக்கல்' பரிசோதனை நிறுவனத்தில் கைரேகை, ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே எடுத்து முழு உடல் பரிசோதனை செய்த பின்னரே விசா, பெர்மிட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இது குறித்து மதுரை கே.கே.நகர் அல் ஹைபா டயோக்னாஸ்டிக் 'பயோ மெடிக்கல்' மையத்தைச் சேர்ந்த யூனுஸ் 'தி இந்து'விடம் நேற்று கூறியதாவது:

முன்பு தனியார் ஏஜெண்டுகள் மூலம் போலியாக மருத்துவப் பரிசோதனை செய்து, எந்த விசாரணையும் இன்றி மலேசியாவுக்கு தொழிலாளர்கள் அனுப்பப்பட்டனர். அதனால், ஒரு பெர்மிட்டில் மலேசியா சென்றவர்கள், அங்கு வேறொரு நபரிடம் வேறொரு பெர்மிட்டில் வேலை செய்வார்கள். குற்றச்செயல்கள் நடப்பதற்கு இதுவே முதற்காரணம் என அந்நாட்டு விசாரணையில் தெரி யவந்தது. எனவே மலேசியா செல்ல விரும்பினால் முதலில் இந்த மையத்தில் முழு பரிசோதனை செய்ய வேண்டும். அவர்களுடைய கைரேகையை பதிவு செய்யும் நாங்கள், அதை அந்நாட்டு அரசின் தூதரக அலுவலகத்துக்கு அனுப்புவோம். அவர்கள், இவர்களுடைய கைரேகையை சோதனைக்குட்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபட்டவரா என்பதை ஆய்வு செய்வார்கள். குற்றப்பின்னணி இல்லாவிட்டால் மட்டுமே அவர்களுக்கு அடுத்தகட்ட மருத்துவப் பரிசோதனை செய்யச் சொல்வார்கள்.

அதன்பின், ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே உள்ளிட்ட சோதனை நடத்தி சம்பந்தப்பட்ட நபரை பற்றி ஒரு அறிக்கையாக மலேசியாவுக்கு அனுப்புவோம். அந்த நகலை மருத்துவப் பரிசோதனை செய்தவரிடம் வழங்குவோம். அதன் பின்னரே மலேசியா செல்ல விரும்புவோர் விசாவுக்கும், பெர்மிட்டுக்கும் விண்ணப்பிக்க முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x