Last Updated : 25 Dec, 2020 06:27 PM

 

Published : 25 Dec 2020 06:27 PM
Last Updated : 25 Dec 2020 06:27 PM

கரோனாவுக்கு பிந்தைய உடல்நல பாதிப்புகளுக்கு சிகிச்சை; கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் தனிப்பிரிவு தொடக்கம்

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள தனிப்பிரிவை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி. உடன், மருத்துவமனையின் டீன் நிர்மலா.

கோவை

கோவை சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை கரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அங்கு கரோனா தொற்றுக்கு பிந்தைய கவனிப்புக்கான தனிப்பிரிவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி இன்று (டிச. 25) திறந்துவைத்து பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:

"இஎஸ்ஐ மருத்துவமனையில் கோவை மட்டுமல்லாது திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 650 படுக்கை வசதிகளுடன்கூடிய கரோனா வார்டு செயல்பட்டு வருகிறது. இதுவரை 9,500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.

குணமடைந்து திரும்பியவர்களில் ஒரு சிலருக்கு மூச்சுத் திணறல், உடல் வலி, உடல் சோர்வு, வயிறு கோளாறுகள், படபடப்பு, தூக்கமின்மை, காய்ச்சல், தொடர் இருமல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

இதற்கு சிகிச்சை அளிக்க பிரத்யேகமாக தனி வெளிநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றுக்குப்பின் பாதிப்புகள் ஏற்படாத வகையில் நெஞ்சக நோய் துறை மருத்துவர்கள், மனநல மருத்துவர், இயன்முறை மருத்துவ நிபுணர்கள் ஆகியோர் இந்த சிறப்புப் பிரிவில் சிகிச்சை அளிப்பார்கள்.

இந்தப் பிரிவு காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும். ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி, பர்ஸ் லிப் சுவாசப் பயிற்சி, உதரவிதான சுவாசப்பயிற்சி, நெஞ்சகக்கூட்டு தசைகளை விரிவடைய வைக்கும் ஆழ்ந்த சுவாசப் பயிற்சி உள்ளிட்ட சுவாசத்தை மேம்படுத்தும் பயிற்சிகள் மற்றும் சிகிச்சைகள் இங்கு அளிக்கப்படும்".

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x