Published : 25 Dec 2020 03:14 PM
Last Updated : 25 Dec 2020 03:14 PM
கிராம சபைக் கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்ற சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என, திமுக அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மாவுக்கு ஆர்.எஸ்.பாரதி இன்று (டிச. 25) எழுதிய கடிதம்:
"1. அரசியல் கட்சிகளால் கிராம சபை என்ற பெயரில் நடத்தப்படும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நேற்று (டிச. 24) சுற்றறிக்கை அனுப்பியுள்ளீர்கள்.
2. 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!' என்பது போல் இந்த சுற்றறிக்கை உள்ளது. மக்களை சென்றடைய திமுக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆளும் கட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி முடக்கப் பார்க்கிறது.
3. இது எதிர்க்கட்சியின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் அடக்குமுறையாகும். இத்தகைய நடவடிக்கை அரசியலமைப்புச் சடத்திற்கு புறம்பானதாகும். தமிழக அரசு சர்வாதிகாரத்துடன் செயல்படுகிறது. அவர்களின் கைகளில் ஒரு ஆயுதமாகவும் கைப்பாவையாகவும் இருக்க வேண்டாம். சட்டத்தின் ஆட்சியும் அரசியலமைப்பும் மேலோங்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
4. தமிழக கிராம சபை விதிகள், 1998, தமிழக பஞ்சாயத்து சட்டம், 1994 இன் கீழ் கிராமசபை கூட்டத்தை கூட்டி நடத்துவதற்கான நடைமுறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
5. கிராம சபை கூட்டத்தை நடத்துவதற்கான அடிப்படை நடைமுறைகள்:
- கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு 7 நாட்களுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும்.
- கிராமசபையின் மொத்த உறுப்பினர்களிடமிருந்து ஒரு கூட்டத்தை கூட்டுவதற்கு கோரப்பட்டிருக்க வேண்டும்.
- கிராம பஞ்சாயத்துடன் கலந்தாலோசித்து சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்துத் தலைவர் கூட்டத்தைக் கூடுவதற்கான நிகழ்ச்சி நிரலை தயாரித்திருக்க வேண்டும்.
- கூட்டங்களுக்கு ஒரு தலைமை அதிகாரி மற்றும் ஒரு பார்வையாளர் இருக்க வேண்டும்.
- கிராமசபையின் உறுப்பினர்களின் வருகை, வருகை பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.
- கிராமசபைக் கூட்டத்தின் நிகழ்ச்சிகள் 'மினிட்ஸ்' ஆக பதிவு செய்யப்பட வேண்டும்.
- இந்த பதிவு, கூட்டம் முடிந்து 3 நாட்களுக்குள் பஞ்சாயத்து இன்ஸ்பெக்டரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
6. மேற்கண்ட விதிகளுக்கு இணங்க நடத்தப்படும் கூட்டங்கள் மட்டுமே கிராம சபைக் கூட்டமாக ஏற்றுக்கொள்ளப்படும். வேறு எந்தக் கூட்டமும் இதே பெயரில் இருந்தாலும் கூட, கிராம சபைக் கூட்டமாகக் கருதப்படமாட்டாது. எனவே, திமுகவால், பொதுமக்கள் பங்கேற்புடன் நடத்தப்படும் கூட்டங்கள் மேற்கூறிய விதிகளின்படி அதிகாரப்பூர்வ கிராமசபைக் கூட்டமாக கருதப்படாது; பொதுமக்கள் முன்னிலையில் நடத்தப்படும் 'மாதிரி-கிராம சபை' (Mock-Grama Sabha) கூட்டமாகத் தோன்றுகிறது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொலைக்காட்சிகளில் மாதிரி-சட்டப்பேரவை, மாதிரி நாடாளுமன்றம் நாத்தப்படுகின்றன. 'மாதிரி நீதிமன்றங்கள்' (moot courts) நடத்தப்படுவதை நாங்கள் கண்டிருக்கிறோம், 'நீதிமன்றங்கள்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதால் இதுபோன்ற நிகழ்வுகளை சட்டவிரோதமாக்க முடியாது. அசல் கூட்டத்தை ஒத்த போலி கூட்டங்களை நடத்துவதற்கு சட்டரீதியான தடை இல்லை.வி கற்பிப்பதற்கும், வெளிப்படுத்துவதற்கும், அறிவூட்டுவதற்கும் வரையப்பட்டுள்ளன.
7. 23.12.2020 அன்று திமுக தலைவர் பிரச்சாரத்தைத் தொடங்கியபோது பெண்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட பொதுமக்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், ஆளும் அதிமுக கட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் மேற்கூறிய சுற்றறிக்கையை வெளியிட உங்களைத் தூண்டியுள்ளது, இது திமுகவுக்கு எதிரான அரசியல் ரீதியான நடவடிக்கை. ஆளும் அதிமுக கட்சிக்கு எதிராக பொதுமக்களின் குரலைக் கட்டுப்படுத்தும் முயற்சி இது. இது தமிழ்நாடு முழுவதும் பிரதான எதிர்க்கட்சியான திமுகவால் நடத்தப்படும் கூட்டங்களில் தானாக முன்வந்து பங்கேற்கும் மக்களுக்கு அச்சுறுத்தல் தவிர வேறில்லை.
8. அரசியல் கட்சிகள் அல்லது பொதுமக்கள் அமைதியான முறையில் மற்றும் ஜனநாயக வழியில் கூட்டங்களை நடத்துவதைத் தடுக்க அரசாங்கம் உட்பட யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19 (1) (அ) இல் வரையறுக்கப்பட்ட 'கருத்து சுதந்திரத்தை' எந்தவொரு சட்டமும், விதிகளும், அரசாங்க ஆணைகளும் அல்லது சுற்றறிக்கையும் ஒருபோதும் எடுத்துக்கொள்ள முடியாது.
9. மேற்கூறிய அடிப்படை உரிமைக்கு எதிரான எந்தவொரு கட்டுப்பாடும் அரசியலமைப்புக்கு முரணானது, எனவே நீங்கள் வழங்கிய சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
10. கூட்டங்களைத் தடைசெய்யும் எந்தவொரு சுற்றறிக்கையைக் கண்டும் நாங்கள் பயப்படவில்லை எனினும், தேர்தல் காலத்தில் அமைதியை நிலைநாட்ட, 'மக்கள் கிராம சபை' என்ற பெயரில் கூட்டங்களை தொடர திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
11. எனவே, அரசியலமைப்பின் கீழ் வரையறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் மேற்கூறிய சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெறுமாறு வலியுறுத்துகிறோம்".
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT