Last Updated : 01 Oct, 2015 02:23 PM

 

Published : 01 Oct 2015 02:23 PM
Last Updated : 01 Oct 2015 02:23 PM

தருமபுரியில் குட்டையில் மூழ்கி 5 சிறுமிகள் பலி: சேற்றில் சிக்கிய சிறுமியைக் காப்பாற்ற முயன்று மாண்ட பரிதாபம்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே குட்டையில் மூழ்கி 5 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் நலப்பரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி முனியம்மாள். இவர்களது இரட் டைக் குழந்தைகள் ராஜேஸ்வரி (14), புவனேஸ்வரி (14). இவர் கள் பி.அக்ரஹாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமிகாந்தன். இவரது மனைவி சுமதி. இவர்களது மகள்கள் அஞ்சலி (16), ஹரிணி (11). அஞ்சலி, 11-ம் வகுப்பும், ஹரிணி 5-ம் வகுப்பும் படித்து வந்தனர். அதே கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான சுப்பிரமணி, தேன்மொழி தம்பதி யரின் மகள் சரிதா (11). இவர், 7-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்களும் பி.அக்ரஹாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தனர்.

காலாண்டு விடுமுறை

தற்போது காலாண்டுத் தேர்வு விடுமுறை என்பதால் அனைவரும் வீட்டில் இருந்தனர். நலப்பரம்பட்டி கிராமத்தின் அருகே உள்ள சின்னபூம்பள்ளம் பகுதியில் குட்டை ஒன்று உள்ளது. இந்த குட்டையில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இப்பகுதியில் பெய்த மழை காரணமாக குட்டையில் தண்ணீர் தேங்கி இருந்தது.

இந்நிலையில் நேற்று ராஜேஸ் வரி, புவனேஸ்வரி, அஞ்சலி, ஹரிணி, சரிதா உள்ளிட்ட 9 பேர் சின்னபூம்பள்ளம் பகுதியில் உள்ள குட்டையில் குளிக்கச் சென்றனர். இதில் ராஜேஸ்வரி திடீரென சகதியில் சிக்கி நீரில் மூழ்கினார். அவரைக் காப்பாற்றும் முயற்சியில் புவேனஸ்வரி, அஞ்சலி, ஹரிணி, சரிதா ஆகியோர் முயன்றனர். ஆனால் அவர்களும் அடுத்தடுத்து சகதியில் சிக்கி நீரில் மூழ் கினர்.

இதைப்பார்த்த மற்ற 4 பேரும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பெற்றோருக்கும், கிராம மக்களுக்கும் தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் உதவியுடன் நீரில் மூழ்கிய 5 மாணவிகளின் சடலத்தை மீட்டனர். உடல்களைப் பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள், கிராம மக்கள் கதறி அழுதனர். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

இதுகுறித்து பென்னாகரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.

சாலை மறியல்

குட்டையில் மூழ்கி உயிரி ழந்த மாணவிகளின் சடலங்கள் பென்னாகரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்படும் என கூறப்பட்டதால் உறவினர்கள் அனைவரும் அங்கு சென்றனர். ஆனால், மாணவிகளின் சடலங்கள் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல் லப்பட்டதாக தகவல் அளிக்கப் பட்டது.

மாவட்ட தலைமை மருத்துவ மனையாக உள்ள பென்னாகரத்தில் பிரேத பரிசோதனை செய்யாமல் தருமபுரிக்கு கொண்டு சென்றதைக் கண்டித்து பொதுமக்கள் தருமபுரி - ஒகேனக்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸார், வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தருமபுரி மருத்துவமனை யில் நவீன வசதிகள் உள்ளதால், பிரேத பரிசோதனை விரைந்து முடித்து, சடலங்கள் ஒரே நாளில் ஒப்படைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

பெற்றோர் கண்காணிப்பு வேண்டும்

பள்ளி விடுமுறைக் காலங்களில் குவாரிகளிலும், குளம், குட்டைகளிலும் நிறையும் தண்ணீரில் சிறுவர்கள், சிறுமிகள் சகதியில் சிக்கி பலியாவது தொடர்ந்து வருகிறது. எனவே, விடுமுறைக் காலங்களிலும், மழைக்காலங்களிலும் குழந்தைகளை தங்கள் கண்காணிப்பில் பெற்றோர் வைத்துக்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x