Last Updated : 24 Dec, 2020 09:00 PM

 

Published : 24 Dec 2020 09:00 PM
Last Updated : 24 Dec 2020 09:00 PM

திருநள்ளாறு கோயிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு, கரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம்: காரைக்கால் ஆட்சியர் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில்.

காரைக்கால்

சனிப்பெயர்ச்சி விழாவையொட்டித் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருப்பதுடன், கரோனா நெகட்டிவ் சான்று பெற வேண்டியது அவசியம் என்று காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், கோயில் தனி அதிகாரியுமான அர்ஜூன் சர்மா தெரிவித்துள்ளார்.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில், சனி பகவானுக்குத் தனி சன்னதியுடன் கூடிய தர்பாரண்யேஸ்வரர் கோயிலில், டிச.27-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான், தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பிரவேசிக்கிறார். இதில் நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் ஏற்கெனவே பல்வேறு முன்னெச்சரிக்கை நடைமுறைகளை அறிவித்திருந்தன.

இந்நிலையில் கரோனா பரவும் அபாயம் இருப்பதால் சனிப்பெயர்ச்சி விழாவின்போது பக்தர்களை அனுமதிக்கும் முடிவுக்குத் தடை விதிக்கக் கோரி, கோயிலின் ஸ்தானிகர்கள் சங்கத் தலைவர் எஸ்.பி.எஸ்.நாதன் (எ) அமிர்தீஸ்வர நாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். கரோனா தடுப்பு நடைமுறைகளைப் பின்பற்றி விழாவை நடத்தலாம் என அனுமதித்து நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

இந்நிலையில் சனிப்பெயர்ச்சி விழாவில் பக்தர்கள் பங்கேற்பது தொடர்பாகப் புதிதாக எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா இன்று (டிச.24) இரவு ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

”நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ், இந்து சமய அறநிலையத் துறைச் செயலர் எஸ்.டி.சுந்தரேசன், வழக்குத் தொடுத்த எஸ்.பி.எஸ்.நாதன் (எ) அமிர்தீஸ்வர நாதன் ஆகிய 5 பேர் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் புதிதாக எடுக்கப்பட்டுள்ளன.

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவுக்காக அமைக்கப்பட்டுள்ள வரிசை வளாகம்.

அதன்படி சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்குள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கோயிலுக்குள் வரக்கூடிய பக்தர்கள் உள்ளிட்ட எவர் ஒருவரும், ஆர்.டி.பி.சி.ஆர் அல்லது ஆண்டிஜன் முறையில், 48 மணி நேரத்துக்கு முன்பு பெறப்பட்ட கரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வர வேண்டியது கட்டாயம்.

சனிப்பெயர்ச்சி விழாவின்போது கோயிலுக்குள் ஒவ்வொரு கட்டமாக 200 பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள். இந்த நடைமுறைகள் நாளை மறுநாள் (டிச.26) முதல் நடைமுறைக்கு வருகின்றன. பக்தர்களின் வசதிக்காக சனிப்பெயர்ச்சிப் பூஜை நிகழ்வுகள் ஆன்லைன், தூர்தர்ஷன் மற்றும் தனியார் தொலைக்காட்சிகள் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும்”.

இவ்வறு ஆட்சியர் அர்ஜூன் சர்மா தெரிவித்தார்.

துணை ஆட்சியரும், கோயில் நிர்வாக அதிகாரியுமான எம்.ஆதர்ஷ் கூறும்போது, ''ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களும் கரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு இது தொடர்பான தகவல்கள், செல்போன் மூலம் குறுந்தகவலாக அனுப்பப்படும். சனிப்பெயர்ச்சி விழா நாளில் கோயிலுக்கு வருவதற்கான முன்பதிவு செய்வது தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. டிச.26-ம் தேதி முதல் ஜன.24-ம் தேதி வரை இந்த ஏற்பாடுகள் நடைமுறையில் இருக்கும்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x