Published : 24 Dec 2020 08:42 PM
Last Updated : 24 Dec 2020 08:42 PM

'கிராம சபை' பெயரில் அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்த அனுமதி இல்லை; மீறி நடத்தினால் நடவடிக்கை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை

கிராம சபைக் கூட்டங்கள் அரசியல் சார்பற்றவை. அதற்குத் தனிச்சட்டம் உண்டு. கிராம சபைத் தலைவரால் மட்டுமே கூட்டப்பட வேண்டிய கிராம சபைக் கூட்டங்களை சில அரசியல் கட்சிகள் கூட்டுவதை மாவட்ட ஆட்சியர் அனுமதிக்கக் கூடாது. மீறி நடத்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கிராம சபைக் கூட்டங்கள் என்கிற பெயரில் பிரச்சார இயக்கத்தைத் தொடங்கிய திமுக, 200 தொகுதிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவித்தது. நேற்று முதல் திமுக தலைவர்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். மக்கள் நீதி மய்யமும் கிராம சபை குறித்துப் பேசி வருகிறது. இந்நிலையில் கிராம சபையின் பெயரால் கூட்டங்கள் நடத்த அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு இன்று அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

''தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன்படி ஒவ்வொரு கிராம ஊராட்சியும் 18 வயது நிரம்பிய வாக்களிக்கும் உரிமை கொண்ட மக்களை உள்ளடக்கிய கிராம சபை அமைக்கப்பட்டுள்ளது. கிராம சபை தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்படி அமைக்கப்படும். ஒரு நிர்வாக அமைப்பாக கிராம சபைகள் ஊராட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து முடிவு செய்யும் அதிகாரம் பெற்றவை.

கிராம சபைகள் செயல்படும் முறைகள் குறித்த தெளிவான விதிமுறைகள் அரசால் தொடங்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் குறைந்தபட்சம் நான்கு முறை அல்லது ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, மற்றும் அக்.2 ஆகிய நாட்களில் கிராம சபை நடத்த அரசு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. உள்ளாட்சி நிர்வாகத்தில் மிக முக்கியப் பங்காற்றும் கிராம சபைகள் ஊரகப் பகுதி மக்களின் குறைகளைக் களைந்து கிராம முன்னேற்றம் காண வழிவகுக்கிறது. இத்தகைய கிராம சபைகள் அரசியல் சார்பற்றவை.

இந்நிலையில் சில அரசியல் கட்சிகள் கிராம சபை என்ற பெயரில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் குழப்புவதற்காக அரசியல் சார்ந்த பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இது ஊராட்சிகள் சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணானது மட்டுமல்லாமல் அந்த அமைப்பின் நடவடிக்கையைக் கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது. கிராம சபை என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் உருவாக்கப்பட்ட ஒரு நிர்வாக அமைப்பாக மேற்படி ஊராட்சி சட்டத்தின் பிரிவு 3(2-ஏ)-ன் படி கிராம சபைக் கூட்டம் அதிகாரம் ஊராட்சித் தலைவருக்கு மட்டுமே உள்ளது.

அவர் கிராம சபைக் கூட்டம் தவறும்பட்சத்தில், ஊராட்சிகளின் ஆய்வாளர் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர், கிராம சபைக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். எனவே, மேற்படி சட்ட அதிகாரம் பெற்றவர்கள் தவிர கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில் தனி நபரோ அல்லது அரசியல் கட்சிகள் கூட்டணி வைப்பது சட்டத்திற்கு எதிரானது. எனவே சட்டத்தை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வழிவகைகள் உள்ளன.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ல் கிராம சபைக் கூட்டம் முடிவெடுக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி மன்றத் தலைவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் ஆதாயம் தேடுவதற்காக கிராம சபை என்ற பெயரில் அரசியல் கட்சி அல்லது தனிநபர் கூட்டங்களை நடத்துவது பொதுமக்களைப் பெரும் குழப்பத்திற்கு உள்ளாக்கும் என்பதால் இத்தகைய நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்கு அரசு அனுமதிக்கப்படாத நிலையில், அரசியல் கட்சிகள் கிராம சபை என்ற பெயரைத் தவறாகப் பயன்படுத்தி இதுபோன்ற அரசியல் பொதுக்கூட்டம் கூட்டினால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்''.

இவ்வாறு ஆட்சியர்களுக்கு அரசு கூடுதல் தலைமைச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x