Last Updated : 24 Dec, 2020 07:55 PM

1  

Published : 24 Dec 2020 07:55 PM
Last Updated : 24 Dec 2020 07:55 PM

தவறாக எச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட சிவகாசி பெண் நிரந்தர அரசுப் பணியில் நியமனம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை

அரசு மருத்துவமனையில் தவறுதலாக எச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு வழங்கப்பட்ட தற்காலிக அலுவலக உதவியாளர் பணியிடம் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு 2018-ல் தவறுதலாக எச்ஐவி தொற்று ரத்தம் செலுத்தப்பட்டது. சிவகாசி அரசு மருத்துவமனையில் தானமாகப் பெற்ற ரத்ததத்தை முறையாக பரிசோதிக்காமல் அந்த பெண்ணுக்கு ஏற்றியது தெரியவந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2019 ஜனவரியில் அப்பெண்ணுக்கு எச்ஐவி பாதிப்பு இல்லாத பெண் குழந்தை பிறந்தது.

அந்தப் பெண்ணுக்கு அரசு வேலை, ரூ.25 லட்சம் இழப்பீடு, வீடு, இரு சக்கர வாகனம், சத்தான உணவு சாப்பிட மாதம் ரூ.7500 வழங்க வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் அந்தப் பெண் அலுவலக உதவியாளர் பணியில் உள்ளார். அவருக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப இளநிலை பணியாளர் பணி வழங்குவது தொடர்பாக அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் வாதிடுகையில், இளநிலை உதவியாளர் பணியிடம் டிஎன்பிஎஸ்சி மூலம் மட்டுமே நிரப்பப்படும்.

எனவே அவருக்கு இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்க வழியில்லை. அவரது அலுவலக உதவியாளர் பணியிடம் நிரந்தரம் செய்யபட்டுள்ளது. அவருக்கு தேவையான சித்த மருந்துகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார். இதையடுத்து விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x