Published : 24 Dec 2020 06:23 PM
Last Updated : 24 Dec 2020 06:23 PM
‘‘தமிழகத்தில் போலியான நபர்கள் விவசாயிகள் போர்வையில் அரசுக்கு எதிராக செயல்படுகின்றனர்,’’ என கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் குற்றம்சாட்டினார்.
சிவகங்கையில் வருவாய், பள்ளிக் கல்வித்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார்.
எம்எல்ஏ நாகராஜன் முன்னிலை வகித்தார். அமைச்சர் ஜி.பாஸ்கரன் 311 பேருக்கு ரூ.4.09 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுகவினர் அதிமுக அரசு மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று கூறுகின்றனர். ஆனால் ஏதாவதொரு திட்டத்தைத் தொடங்கினால், ஊழல் செய்யவே தொடங்குவதாகக் கூறுகின்றனர். திமுக தாங்கள் செய்த ஊழல்களை மறைக்கவே ஆளும்கட்சியை குறை சொல்லி வருகிறது.
‘தமிழகத்தில் தொழிற்சாலைகள் வரவில்லை,’ என ஸ்டாலின் கூறுகிறார். இந்தியாவிலேயே தொழிற்துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் ஸ்டாலின் தமிழக அரசு மீது குறை கூற வேண்டும் என்பதற்காகவே குற்றம் சுமத்தி வருகிறார். சமீபகாலமாக தமிழகத்தில் போலியான நபர்கள் விவசாயிகள் என்ற போர்வையில் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். அதேபோல் ரவுடிகள் போராட்டங்களை தமிழக அரசிற்கு எதிராக திசை திருப்புகின்றனர், என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT