Published : 24 Dec 2020 07:06 PM
Last Updated : 24 Dec 2020 07:06 PM
மத நம்பிக்கையில் யாரும் தலையிடக் கூடாது என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் தேசிய நுகர்வோர் விழா இன்று நடந்தது. துறை அமைச்சர் கந்தசாமி விழாவுக்குத் தலைமை வகித்தார். ஜான்குமார் எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசும்போது, ''இந்துக்கள், முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு மத நம்பிக்கை உள்ளது. அந்தந்தச் சமுதாயத்தினர் அவர்களது விழாக்களைக் கொண்டாடுகிறார்கள். கரோனா தொற்றுநோய் என்றால் வியாபாரம், தொழிற்சாலை, விவசாயம், கல்லூரிகள் இயங்கவில்லையா? தொற்று பாதிப்பு இல்லாத வகையில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும். இது இந்துக்களின் நம்பிக்கை. ஒரு மதத்தின் நம்பிக்கையில் யாரும் தலையிடக் கூடாது. மக்கள் அவர்களது மத நம்பிக்கையைக் கடைப்பிடிக்க உரிமை உள்ளது.
ஆனால், ஆளுநர் கிரண்பேடி அந்த விழா நடத்தக் கூடாது, இந்த விழா நடத்தக் கூடாது எனச் சொல்ல அதிகாரம் கிடையாது. புத்தாண்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு கொண்டாடுமாறு கூறியுள்ளேன். அது தவறில்லை. மக்களுக்காகத்தான் நாம் ஆட்சி செய்கிறோம். இதனை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில்துறை அமைச்சர் கந்தசாமி தலைமை வகித்துப் பேசும்போது, "ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்று பிரதமர் கூறுகிறார். ஆனால், புதுவையில் ஒரு ரேஷன் கடையாவது இருக்கிறதா? பிரதமருக்கு எதிரான செயல்களில் ஆளுநர் கிரண்பேடி செயல்பட்டு வருகிறார்.
புத்தாண்டு, கிறிஸ்துமஸ், பொங்கல், திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா என எதையும் கொண்டாடக் கூடாது என எல்லாவற்றுக்கும் கிரண்பேடி தடை போடுகிறார். ஆனால், பாஜகவினர் பிரச்சாரத்தில் கூட்டமாக வேனில் சுற்றி வருகின்றனர். அதற்கு மட்டும் அனுமதி கொடுக்கிறார்.
ஆட்சியராக இருந்த அருணுக்குக் கரோனா வந்தவுடனே பயிற்சிக்கு வந்த ஐஏஎஸ் அதிகாரி பூர்வா கார்க்கை, ஜன.20-ம் தேதி வரை ஆட்சியர், சுகாதாரத் துறைச் செயலர் பதவிக்கு நியமித்துள்ளார். புதுச்சேரியில் தற்போது ஆளுநர், நிதித்துறைச் செயலர், ஆட்சியர் ஆகியோர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். தமிழ் அதிகாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர். இந்திக்காரர்களுக்கும், பஞ்சாப்காரர்களுக்கும் புதுச்சேரி அடிமையாக உள்ளது" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT