Published : 19 Oct 2015 03:53 PM
Last Updated : 19 Oct 2015 03:53 PM
மதுரை அருகே ஜவுளிக்கடை உரிமையாளர் ஒருவர், தனது கடை முன் மரத்தடி கரும்பலகையில் தினமும் ஒரு பொன்மொழியை எழுதிவைத்து இளைஞர்கள், மாணவர்கள் மனதில் சத்தமில்லாமல் நல்லெண்ண கருத்துகளை விதைத்து வருகிறார்.
ஒரு காலத்தில் ஒவ்வொரு நாள் அதிகா லையிலும் வானொலி நேயர்க ளுக்கு எளிய கதைகள் மூலம் தென்கச்சி கோ.சுவாமிநாதன் வழங்கிய ‘இன்று ஒரு தகவல்’, தமிழர்களிடையே மிகப் பிரபலமானது. அந்த நிகழ்ச்சி பொதுமக்களிடம் மாற்றத்தையும், நம்பி க்கையையும் ஏற்படுத்தியது.
அதுபோல, மதுரை அருகே திருநகரில் ஜவுளிக்கடைக்காரர் ஒருவர் தனது கடையின் முன் மரத்தடி கரும்பலகையில் எழுதும் ‘தினமும் ஒரு பொன்மொழி’ தகவல் அப்பகுதியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
திருநகரைச் சேர்ந்தவர் எஸ்.சேவியர் ப்ரீஸ் ஒயிட். இவர், அப்பகுதி 5-வது பஸ் நிறுத்தத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜவுளிக்கடை வைத்துள்ளார். தனது கடை முன் மரத்தில் கரும்பலகை ஒன்றைத் தொங்கவிட்டுள்ள அவர் தினமும் அதில் ஒரு பொன்மொழியை எழுதி வருகிறார். சர்வதேச முக்கிய தினங்கள், விடுதலைப் போராட்டத் தலைவர்கள், முக்கியத் தலைவர்கள் பிறந்தநாளில் அந்த நாளின் முக்கியத்துவத்துக்கு தகுந்தாற்போல பொன்மொழியை எழுதுகிறார். திருநகர் 3-வது பஸ் நிறுத்தத்துக்கு வரும் அப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பொதுமக்கள் சுமார் ஆயிரம் பேராவது இந்த பொன்மொழிகளை படித்து செல்கின்றனர்.
இதுகுறித்து எஸ்.சேவியர் ப்ரீஸ் ஒயிட் கூறியது: “2003-ம் ஆண்டு முதல் பொன்மொழிகளை எழுதி வருகிறேன். தினமும் எனது மனதில் சிந்தனையில் உதிக்கும் சிறந்த கருத்துகள், படித்தவற்றில் சிறந்த பொன்மொழிகளை எழுதுவேன். ஆரம்பத்தில் இந்த கரும்பலகையில் நான் எழுதிய தினம் ஒரு தகவலை பார்த்து பலர் ஏளனம் செய்தனர். தற்போது அவர்களே பாராட்டிச் செல்கின்றனர். இதைப் படிக்கும் ஒரு சிலரிடமாவது மாற்றம் ஏற்பட்டாலும் போதும் என எழுதத் தொடங்கினேன்.
இப்போது இளைஞர்கள் என்னுடைய தினம் ஒரு பொன்மொழி தகவலை புகைப் படம் எடுத்து பேஸ்புக், ‘வாட்ஸ் அப்’பில் பகிர்கின்றனர். இந்த பொன்மொழிகள் எழுதுவதற்கு சில நிமிடங்கள் மட்டுமே செலவிடுகிறேன். அது மக்களிடம் மனமா ற்றத்தை ஏற்படுத்துகிறது என்கிறபோது, தினமும் ஒரு நல்ல காரியம் செய்கிறோம் என்ற ஆத்ம திருப்தி ஏற்படுகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT