Published : 24 Dec 2020 05:47 PM
Last Updated : 24 Dec 2020 05:47 PM

திருவாரூர் வழக்கறிஞர் கொலை; சிபிஐ விசாரணை கோரி மனைவி வழக்கு: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை

திருவாரூர் மாவட்டத்தில் வழக்கறிஞர் ஒருவர் மர்ம நபர்களால் கொல்லப்பட்ட விவகாரத்தில், போலீஸாரின் விசாரணை முறையாக நடக்கவில்லை என சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனைவி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் நிலை குறித்து பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா அரித்துவாரமங்கலம் அருகே உள்ள முனியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (35). இவரது மனைவி சந்தியா (34). இருவரும் வழக்கறிஞர்கள். நீடாமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாகப் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் கடந்த அக்.12-ம் தேதி முனியூரில் தனது வீட்டின் அருகே உள்ள வாய்க்கால் கட்டையில் இரவு ராஜ்குமார் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதன் பின்னர் கிளம்பிச் சென்ற ராஜ்குமார் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பின்னர் முனியூர் வாய்க்காலில் சடலமாக வெட்டுக் காயங்களுடன் ராஜ்குமாரின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து அரித்துவாரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். திருவாரூர் எஸ்.பி. துரை உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி, கொல்லப்பட்ட வழக்கறிஞர் ராஜ்குமாரின் மனைவி சந்தியா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது வழக்கு இன்று நீதிபதி ரவீந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கறிஞரின் மனைவி சந்தியா தாக்கல் செய்த மனுவில், “கொலையில் ஈடுபட்ட நபர்களைக் காப்பாற்றுவதற்தாக அனைத்து ஆதாரங்களையும் காவல்துறையினர் அழித்துள்ளனர். கொலைக்குச் சம்பந்தமில்லாத மூன்று பேரைத் தற்போது சிறையில் அடைத்துள்ளனர். உரிய விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். எனவே, இந்த விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்” எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவீந்திரன், இந்தக் கொலை வழக்கின் விசாரணையின் தற்போதைய நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய மாவட்டக் காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 3 வாரத்திற்குத் தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x