Published : 24 Dec 2020 05:38 PM
Last Updated : 24 Dec 2020 05:38 PM
ஜி.கே.மூப்பனாரின் நாடாளுமன்ற நிதியில் கட்டப்பட்ட அரங்க மேடையில் அவரது பெயர் எழுதப்பட்டிருந்த நிலையில், உதயநிதியின் வருகைக்காக அழிக்கப்பட்டது அராஜகச் செயல். இது கண்டிக்கத்தக்கது என்று தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
''அரியலூர் மாவட்டம் திருமானூரில் மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் நாடாளுமன்ற நிதியில் அரங்க மேடை அமைக்கப்பட்டு பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கிராமப் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டது. மேலும் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்துக்கு இந்த இடத்தைத்தான் பயன்படுத்த வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் இன்று 24.12.2020 அத்தகைய அரங்க மேடையை, உதயநிதி வருகிறார் என்ற ஒரு காரணத்திற்காக அவசர அவசரமாக யூனியன் சேர்மன் நிதியில் வேலை பார்த்துக் கட்டியதுபோல் அரங்க மேடையின் பெயரான "G.K.மூப்பனார் அரங்கம்" என்ற பெயரை அழித்துவிட்டார்கள். எனவே, ஆட்சிக்கு வரும் முன்பே அராஜகச் செயலில் ஈடுபடும் திமுகவைக் கண்டித்து, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி வாகனத்தை தமாகா மாணவரணி மாநிலத் துணைத்தலைவர் மனோஜ் மற்றும் ஜோதிமணி ஆகியோர் தலைமையில் மறித்து தமாகாவினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் இதுபோன்ற அராஜகச் செயலில் ஈடுபடும் திமுகவை தமாகா இளைஞரணி சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்''.
இவ்வாறு யுவராஜா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT