Published : 24 Dec 2020 04:51 PM
Last Updated : 24 Dec 2020 04:51 PM

மழைநீர் கால்வாயில் விழுந்து தாய்-மகள் உயிரிழந்த விவகாரம்: அதிகாரிகள் மீது நடவடிக்கைக் கோரி டிராபிக் ராமசாமி வழக்கு

சென்னை

சென்னை நொளம்பூர் அருகே மதுரவாயல் புறவழிச்சாலையில் மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகாலில் விழுந்து, தாய், மகள் உயிரிழந்த விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் ஏற்கெனவே உள்ள வழக்குடன் சேர்த்து விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நொளம்பூர் அருகில் மதுரவாயல் புறவழிச்சாலை ஓரம் மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகாலில் விழுந்து, தனியார் கல்லூரி பேராசிரியர் கரோலின் பிரெசில்லா மற்றும் அவரது மகள் இவாலின் ஆகியோர் பலியாகினர்.

சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்தில் உயிரிழந்த கரோலின் குடும்பத்தில் எஞ்சியுள்ள கடைசி மகளை அரசு காக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் வைத்திருந்தார்.

முதல்வர் தலா 2 லட்சம் இழப்பீடு அறிவித்திருந்தார். அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிர் பறிபோனதற்கு தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்த மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த விபத்து குறித்து உயர் நீதிமன்றமும் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து இழப்பீடு குறித்து நெடுஞ்சாலைத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த விபத்து சம்பவத்தை அடுத்து, மழைநீர் வடிகாலை மூடாமல் அஜாக்கிரதையாக செயல்பட்ட பொதுப்பணித்துறை, மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்த இருவருக்கும் கூடுதல் இழப்பீடு வழங்கவும் கோரியும் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x