Published : 24 Dec 2020 01:18 PM
Last Updated : 24 Dec 2020 01:18 PM
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊழல் ஆட்சி நடத்துகிறார் என, திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்பதை முன்னிறுத்தி இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிச. 24) அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். புறவழிச்சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள திமுக மாவட்ட அலுவலகத்தைத் திறந்துவைத்த உதயநிதி ஸ்டாலின், அங்கு கருணாநிதி சிலையைத் திறந்துவைத்து கட்சிக்கொடி ஏற்றினார்.
பின்னர், பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு பேருந்து நிலையம் எதிரேயுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், "மத்திய அரசுக்கு அடிமையாக உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தற்போது செயல்படாத ஆட்சியை நடத்துகிறார். தன்னை அமைச்சராக்கிய ஜெயலலிதாவுக்கும், முதல்வராக ஆக்கிய சசிகலாவுக்கும் உண்மையாக இல்லாதவர் பழனிசாமி.
நெடுஞ்சாலைத்துறையில் தனது சம்பந்திக்கு 6,000 கோடி ரூபாய் டெண்டர்விட்டு ஊழல் செய்துள்ளார். அப்பணத்தை தனது சம்பந்தி மூலம் தனது 'பாக்கெட்'டுக்கு எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்து ஊழல் ஆட்சி நடத்தி வருகிறார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியை விமர்சித்ததற்காக என் மீது வன்முறையைத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்கத் தயார். பொதுமக்கள் அனைவரும் நான்கு மாதங்களில் வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்" என்றார்.
இதனையடுத்து, திமுகவின் மறைந்த முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் வீட்டுக்குச் சென்று அவரது திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின், மார்க்கெட் தெருவில் திமுக வணிகர் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
அதற்குப் பிறகு வணிகர்கள், சிறுவியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர், தனியார் திருமண மண்டபத்தில் அரியலூர் மாவட்ட திமுக பூத் கமிட்டி உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT