Published : 24 Dec 2020 12:40 PM
Last Updated : 24 Dec 2020 12:40 PM
பட்டாசு தொழிலாளர்கள் பிரச்சினைக்கு திமுக ஆட்சி அமைந்ததும் நிரந்தரத் தீர்வு காணப்படும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் திமுகவினர் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக எம்.பி. கனிமொழி இன்று (வியாழக்கிழமை) காலை சிவசாசியில் அச்சுத் தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்தார்.
அச்சுத் தொழிலாளர்கள் மத்தியில் பேசிய அவர், மக்களுக்கான சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் திமுக ஆட்சியில் அமைத்துக் கொடுக்கப்படும் என்றும் தமிழகத்தில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களை சந்தித்து கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
அப்போது பட்டாசு உற்பத்தியாளர்கள் கனிமொழி எம்.பி.,யிடம், உலக அளவில் சீனப்பட்டாசுகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்திய பட்டாசுகள் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்திய பட்டாசுகளை ஏற்றுமதி செய்ய அனுமதி பெற்றுத் தர வேண்டும். பட்டாசு வெடிப்பதற்கு உள்ள கால நேரத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து பேசிய கனிமொழி எம்.பி., "பட்டாசுத் தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து எடுத்துக் கூறினீர்கள். அரசாங்கம் ஒரு கொள்கை முடிவை எடுக்கும்போது அதில் தெளிவாக இருக்க வேண்டும். அனைத்து விவகாரங்களையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், புரிதல் இல்லாமல் எடுக்கும் முடிவு பல குடும்பங்களைப் பாதித்துவிடுகிறது. தமிழக அரசின் முடிவால் பட்டாசுத் தொழிலில் நேரடியாக ஈடுபட்டுள்ள 2 லட்சம் பேரும் அதைச் சார்ந்து தொழில் செய்யும் 8 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் ஆழ்ந்து சிந்திக்காது எடுத்த அவசர முடிவால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பசுமைப் பட்டாசு குறித்து தெளிவான முடிவு இல்லை. சிவகாசி பட்டாசு தொழிற்சாலை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் திமுக உறுதியாக இருக்கிறது.
அதேபோல், தூத்துக்குடி துறைமுகம் மூலம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கக்கோரி மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT