Published : 24 Dec 2020 11:11 AM
Last Updated : 24 Dec 2020 11:11 AM
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பக்தர்களை அனுமதிக்கக் கூடாது என்ற வழக்கு தொடர்பாக கலந்து ஆலோசித்து முடிவு தெரிவிக்குமா உயர் நீதிமன்ற உத்தரவின்படி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி காரைக்காலுக்கு இன்று காலை புறப்பட்டார். அங்கு இது தொடர்பாக கூட்டம் நடத்தி முடிவுகள் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட உள்ளது.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில், சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் கூடிய தர்பாரண்யேஸ்வரர் கோயிலில், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி வரும் டிச.27-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.
இதில் நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
சனிப்பெயர்ச்சிக்கு முந்தைய வாரமும், பிந்தைய 4 வாரங்களுக்கும் (சனி, ஞாயிற்றுக் கிழமைகளில்) ஆன்லைன் மூலம் தேவஸ்தான இணையதளத்தில் முன் பதிவு செய்தவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனாவால் சனிப்பெயர்ச்சி விழாவின்போது கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கக் கூடாது, விழாவுக்கு பிந்தைய 48 நாட்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், தர்பாரண்யேஸ்வரர் கோயிலின் பரம்பரை ஸ்தானிகர்கள் சங்கத் தலைவர் எஸ்.பி.எஸ்.நாதன்(எ)அமுர்தீஸ்வர நாதன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, முதல்வர் நாராயணசாமி, "இந்துக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம் இது. தனிப்பட்ட முறையில் நான் சனிப்பெயர்ச்சி விழாவுக்கு காரைக்கால் செல்வேன். அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவுப்படி செயல்படுவோம்" என்று தெரிவித்திருந்தார்.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று (டிச. 24) திடீரென்று காரைக்காலுக்கு புறப்பட்டுள்ளார். இது தொடர்பாக, கிரண்பேடி கூறுகையில், "உயர் நீதிமன்ற உத்தரவுப்படி காரைக்கால் செல்கிறேன். சனிப்பெயர்ச்சி தொடர்பாக கூட்டம் நடத்த நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இக்கூட்டத்தில் இந்து அறநிலையத்துறை செயலாளர், காரைக்கால் மாவட்ட ஆட்சியர், திருக்கோயில் செயல் அதிகாரி மற்றும் புதுச்சேரி நிர்வாகி என்ற முறையில் நானும் பங்கேற்கிறேன். இக்கூட்டத்தில் சனிப்பெயர்ச்சி விழாவை எம்முறையில் நடத்துவது என்று முடிவு எடுத்து தெரிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கூட்டம் நடத்தி முடிவு எடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT