Published : 24 Dec 2020 07:23 AM
Last Updated : 24 Dec 2020 07:23 AM
தமிழக ஆளுநரிடம் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் புகார் அளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் வகையில் நேற்று தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆவடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
அதிமுக அரசுக்கு எதிராக பொய்கள் அடங்கிய ஆவணத்தை திமுக வெளியிட்டுள்ளது. இதில், அதிமுக அரசு பற்றி 41 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. எந்தத் துறைகளில் எல்லாம் அதிமுக அரசு சாதனை புரிந்துள்ளதோ, அந்த துறைகளைப் பற்றியெல்லாம் பொய் பிரச்சாரம் செய்கிறது திமுக.
விவசாய கூலிகளின் சம்பள வளர்ச்சி வீதம் 2006 முதல் 2010-ம்ஆண்டு காலகட்டத்தில் 13 சதவீதமாக இருந்தது. தற்போது 3.4 சதவீதமாக சரிந்துள்ளது என ஒரு தவறான தகவலை திமுக பரப்புகிறது. உண்மையில் 2014-ல் ரூ.334.30ஆக இருந்த விவசாயத் தொழிலாளர்களின் சம்பளம் தற்போது ரூ.410 ஆக உயர்ந்துள்ளது.இத்தகவலை தொழிலாளர் பணியகம் வெளியிட்டுள்ளது. அதேபோல், கடந்த 9 ஆண்டுகளில் விவசாயத்தில் உற்பத்தி திறன் பன்மடங்கு உயர்ந்துள்ளது. நிலங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்த கட்சி திமுக என்பது அனைவருக்கும் தெரியும்.
அதிமுக அரசு நீர்நிலைகளைத் தூர்வாரி பராமரித்து வருகிறது. இதன்விளைவாக தற்போது பாலாறு மும்மடங்கு மழைநீரால் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர் மேலாண்மையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
பண்பாட்டுத் தளத்தில் தமிழகத்தின் எந்த உரிமையையும் அதிமுக அரசு விட்டுக் கொடுக்க வில்லை. ஆனால் வேலைவாய்ப்பு, கல்வி, தண்ணீர், சட்டம் - ஒழுங்கு, கரோனா, பண்பாடு உள்ளிட்டவை தொடர்பாக, தவறான புள்ளிவிவரத்தை சேகரித்து, தொடர்பில்லாத பிரச்சினைகளோடு ஒப்பீடு செய்கிறது திமுக. தவறான புள்ளிவிவரங்களோடு திமுக செய்யும் கோயபல்ஸ் பிரச்சாரம்கண்டிப்பாக தமிழக மக்களிடம் எடுபடாது. கமல், சீமான் போன்றோர் எம்.ஜி.ஆர் ஆட்சி அமைப்போம் என்கிறார்கள். யாராவது சொல்கிறார்களா கருணாநிதி ஆட்சியை அமைப்போம் என்று? இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT