Published : 23 Dec 2020 09:18 PM
Last Updated : 23 Dec 2020 09:18 PM
புதுச்சேரியில் தமிழ் அதிகாரிகள் பந்தாடப்படுவதாகப் பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் நகரமெங்கும் ஆட்சியர் அருண் மாற்றத்துக்கு வெள்ளை அறிக்கை கோரி திடீர் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியர் அருண் மாற்றப்பட்டு பூர்வா கார்க் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டார். பின்னர் அருண் விடுப்பில் சென்று விட்டார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அக்குற்றச்சாட்டை கிரண் பேடி மறுத்தார். இதுதொடர்பாகத் தேர்தல் ஆணையத்துக்கும் புகார் தரப்பட்டுள்ளது.
இச்சூழலில் புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ இன்று வெளியிட்ட அறிக்கை:
"புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் வட இந்திய அதிகாரிகள், தென் இந்திய அதிகாரிகள் என்று மிகப்பெரிய பிரிவுச் சுவர் எழுந்துள்ளது, வட மாநில அதிகாரிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால் தமிழ் தெரிந்த ஐஏஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து பழிவாங்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
கரோனா நோய்த் தொற்றுக் காலகட்டத்தில், புதுச்சேரியில் நன்கு பணியாற்றிய ஆட்சியர் அருணிடமிருந்து அவரது ஆட்சியர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் ஆட்சியர், சுகாதாரத்துறைச் செயலர் பொறுப்பையும் அவர் வகித்து வந்தார். கரோனா கட்டுக்குள் வந்தது.
இடையில், அவரது உடல் நிலை மோசமடைந்தது . தீவிர சிகிச்சைக்குப் பின் குணமடைந்து இந்த மாதத்தின் தொடக்கத்தில் பணிக்குத் திரும்பிய அருணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது . அவர் வகித்து வந்த ஆட்சியர் பதவியானது பூர்வா கார்கிடம் ஒப்படைக்கப்பட்டது பின்னர் அருண் கட்டாய விடுமுறையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
அரசு தன் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது வழக்கமான நடைமுறையாக இருப்பினும், அவரைப் பணியில் சேர விடாமல் முட்டுக்கட்டை போட்டதில் ஆளும் கட்சியின் அரசியல் சதி இருக்கிறது. தமிழ் தெரிந்த, தமிழ் பேசும் தென்னக அதிகாரிகள், தொடர்ந்து பழிவாங்கப்படுவதால், ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் மனம் நொந்து, இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர். தமிழ் அதிகாரிகளைப் பழிவாங்கும் போக்கைக் கைவிட வேண்டும்."
இவ்வாறு சாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
நகரெங்கும் போஸ்டர்கள்
இந்நிலையில் புதுச்சேரி ஆட்சியர் அருண் மாற்றத்துக்குக் காரணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை கோரி நகரெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவற்றில், ''புதுச்சேரி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள பூர்வா கார்க், தேர்தலைச் சரியாக நடத்துவாரா என்பதில் சந்தேகம் உள்ளது. அவர் பாஜக ஆதரவாளர். அதுதொடர்பாகத் தேர்தல் ஆணையத்துக்கு புகார் தாருங்கள்- மீண்டும் ஆட்சியராக அருணை நியமியுங்கள்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT