Published : 23 Dec 2020 08:43 PM
Last Updated : 23 Dec 2020 08:43 PM
விவசாயிகள் தங்கள் வாழ்க்கைப் பிரச்சினைக்காகப் போராடுகிறார்கள். தொடர்ச்சியாகத் தினமும் விவசாயிகள் டெல்லியை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள். இதை மத்திய பாஜக அரசு அலட்சியமாகப் பார்ப்பது கடுமையான கண்டனத்துக்குரியது என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாகத் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:
உழவர்கள் இல்லையென்றால் உலகம் இல்லை. ஆனால் இன்று உழவர்களை இல்லாமல் ஆக்குவதற்கான அத்தனைச் செயல்களையும் மத்திய பாஜக அரசு செய்துக் கொண்டிருக்கிறது. தலைநகர் டெல்லியை உழவர்கள் உலுக்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அசைந்து கொடுக்காமல் இருக்கிறது மத்திய பாஜக அரசு.
வாழவைக்கும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்ததன் மூலம் வேளாண்மையை வேரறுக்கத் துடிக்கிறது பாஜக அரசு. அந்த வேளாண் சட்டங்களை விழுந்து விழுந்து ஆதரிக்கிறார் பழனிசாமி. விழுந்து விழுந்து ஆதரிப்பது என்றால் அதனைக் கூசாமல் செய்வார் பழனிசாமி.
விவசாயிகளின் கோரிக்கை ஒன்றே ஒன்று தான், இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான். அதில் கருத்துச் சொல்லாமல் காலம் கடத்தி வருகிறது மத்திய அரசு. இப்படியே காலம் தாழ்த்தினால் விவசாயிகள் சோர்ந்து போய் பின்வாங்கி விடுவார்கள் என்று மத்திய அரசு நினைக்குமானால் அவர்கள் நிச்சயம் ஏமாந்து போவார்கள் என்று எச்சரிக்கை செய்கிறேன்.
விவசாயிகள் தங்கள் வாழ்க்கைப் பிரச்சினைக்காகப் போராடுகிறார்கள். தொடர்ச்சியாகத் தினமும் விவசாயிகள் டெல்லியை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள். இதை மத்திய பாஜக அரசு அலட்சியமாக பார்ப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.
அப்படிப் போராடுபவர்களைத் தேச விரோதிகள், அந்நியக் கைக்கூலிகள், மாவோயிஸ்ட்டுகள், தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவார்களேயானால் பாஜக அரசு தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறது என்று அர்த்தம்.
மூன்று வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்வதால் பயனில்லை. அந்த மூன்றையும் திரும்பப் பெற வேண்டும் என்பது தான் விவசாயிகளின் கோரிக்கை. நமது கோரிக்கையும் அதுதான். இதுதான் மக்களின் கோரிக்கையும். இதனை இந்தியா முழுவதும் இருக்கிற அனைத்து விவசாயிகளும் எதிர்க்கிறார்கள். ஒரே ஒரு விவசாயி மட்டும் தான் ஆதரிக்கிறார். அவர் பெயர் எடப்பாடி பழனிசாமி.
எத்தனையோ துரோகங்களை பழனிசாமி செய்திருந்தாலும் விவசாயிகளுக்குச் செய்தது தான் மாபெரும் துரோகம். அந்தத் துரோகத்துக்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் தரத் தயாராகி வருகிறார்கள். நானும் ஒரு விவசாயி என்று சொல்லும் எடப்பாடி அவர்களே, நீங்களும் ஒரு விவசாயியா? நீங்களும் ஒரு விவசாயியா? - என்று தான் தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்.
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு - மக்களுக்கு உடனடியாக இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தமிழக அரசை நான் கேட்டிருந்தேன். இன்னும் ஏன் வழங்கவில்லை? எத்தனை நாட்கள் ஆகிவிட்டன? அதை உடனடியாக வழங்கவில்லை என்றால் திமுக விவசாய அணி சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்பதை எச்சரிக்கையாகவே தெரிவித்துக்கொள்கிறேன்.
வாழும் தெய்வங்களாம் விவசாயிகளை வேதனைப்பட வைக்கலாமா? மக்களைக் காக்கும் விவசாயிகளை மரணக்குழிக்குள் தள்ளலாமா? - என்று தான் தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்.
அதனால் தான் 'அதிமுக ஆட்சியை நிராகரிப்போம்' என்ற முழக்கத்தை ஒலிக்கத் தொடங்கி இருக்கிறோம். இது திமுகவின் முழக்கம் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களின் முழக்கம்.
இன்றைய தினம் காலையில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்னம் ஊராட்சியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் 'அதிமுகவை நிராகரிப்போம்' என்ற தீர்மானத்தை நிறைவேற்றினோம். காலையில் குன்னம் கிராமத்துக்கு நான் சென்றிருந்தேன்.
அதிமுக அரசின் மீதான கோபத்தையும் பார்த்தேன். திமுக விரைவில் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற அவர்களது ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் நேரில் பார்த்தேன்.
இரண்டும் நடக்கத்தான் போகிறது. தமிழகம் விடியத்தான் போகிறது. இருள் விலகத்தான் போகிறது.
இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT