Published : 23 Dec 2020 08:10 PM
Last Updated : 23 Dec 2020 08:10 PM
முத்தலாக் சட்டமா? ஆதரிக்கிறோம்! காஷ்மீருக்குச் சிறப்புரிமை ரத்தா? ஆதரிக்கிறோம். குடியுரிமைத் திருத்தச் சட்டமா? ஆதரிக்கிறோம், என்று எல்லாவற்றுக்கும் தலையாட்டிய பழனிசாமிக்கு இப்போது சிறுபான்மையினரைப் பற்றிப் பேச அருகதை உண்டா? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
- சிவகங்கை தமிழகம் மீட்போம் கூட்டத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.
சிவகங்கை மாவட்டக் திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாகத் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:
சில நாட்களுக்கு முன்னால் எடப்பாடித் தொகுதியில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி தொகுதியையே தமிழ்நாட்டின் முன் மாதிரித் தொகுதியாக மாற்றிவிட்டதைப் போல பழனிசாமி பேசி இருக்கிறார். சேலம் அவரது சொந்த மாவட்டம். அதையே ஏதோ சிங்கப்பூராக மாற்றியதைப் போல பேசி இருக்கிறார்.
சேலம் பொதுக்கூட்டத்தில் பேசும் போது, பழனிசாமிக்கு நான் சில கேள்விகளை எழுப்பினேன். பதில் சொல்லவில்லை. ஒரு முதல்வர், தான் கொடுத்த வாக்குறுதியைத் தனது தொகுதிக்கே செய்து கொடுக்காத போது தமிழ்நாட்டின் மற்ற தொகுதிகளை இவர்கள் எப்படிக் கவனித்திருப்பார்கள்?
வாய்க்கு வந்ததை அடித்து விடுகிறார் முதல்வர், நுழைவுத் தேர்வையே தலைவர் கருணாநிதிதான் கொண்டு வந்தாராம், ஜெயலலிதா அதை ரத்து செய்தாராம், முதல் நாள் பிரச்சாரத்திலேயே முழுப்பொய்யைச் சொல்லி இருக்கிறார் முதல்வர்.
தமிழகத்தில் நுழைவுத்தேர்வு முறையைக் கொண்டு வந்தவர் எம்ஜிஆர் நுழைவுத் தேர்வு முறை 1984-ஆம் ஆண்டுதான் வந்தது. அன்றைக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த எச்.வி.ஹண்டே, நுழைவுத்தேர்வு முறையைக் கொண்டு வரப்போவதாக 1982-ஆம் ஆண்டு சொன்னார். 1984-ஆம் ஆண்டு நுழைவுத்தேர்வு வந்தது.
இந்த நுழைவுத்தேர்வு முறையைச் சட்டம் போட்டுத் தடுத்து, ரத்து செய்தவர் முதல்வர் கருணாநிதி, 2005-ம் ஆண்டு நுழைவுத்தேர்வு ரத்து என்று முதல்வர் ஜெயலலிதா, ஒரு அரசாணை வெளியிட்டார். ஆனால் அதற்கு நீதிமன்றம் தடை போட்டு விட்டது. மறுபடியும் ஒரு அரசாணை போட்டார். அதையும் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. சட்டமாகப் போடுங்கள் என்று சொன்னபோது ஜெயலலிதா அதைக் கேட்கவில்லை, செய்யவில்லை.
2006-ஆம் ஆண்டு தலைவர் முதல்வர் வந்த பிறகுதான் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவை நியமித்து, அவரது அறிக்கையின் படி நுழைவுத்தேர்வு ரத்து என்ற சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்தார். அதற்குக் குடியரசுத் தலைவரிடம் ஒப்புதலையும் பெற்றார்.
இந்தச் சட்டத்தை எதிர்த்தும் சிலர் நீதிமன்றம் போனார்கள். தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. அதுதான் கலைஞர். தமிழகத்தில் 2007-2008 கல்வியாண்டு முதல்தான் நுழைவுத் தேர்வு இல்லை.
அதாவது 1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நுழைவுத்தேர்வை, 2007-ஆம் ஆண்டு சட்டபூர்வமாக ரத்து செய்த ஆட்சி திமுக ஆட்சி. இது எதுவும் தெரியாமல் வாய்க்கு வந்ததை உளறிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி.
திடீரென்று சிறுபான்மையினர் மீது இவர்களுக்குப் பாசம் வந்துள்ளது. 'சிறுபான்மையினர் அச்சப்படத் தேவையில்லை, அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக அதிமுக இருக்கும்' என்று முதல்வர் பழனிசாமியும், 'சிறுபான்மையின மக்களை அரவணைத்துச் செல்வோம்' என்று துணை முதல்வர் பன்னீர்செல்வமும் மாறிமாறிப் பொய் சொல்லி இருக்கிறார்கள்.
தேர்தல் வர இருப்பதால் சிறுபான்மையின மக்களை ஏமாற்றத் திட்டமிட்டுள்ளார்கள். இந்த நான்காண்டு காலத்தில் சிறுபான்மையினருக்கு என்ன செய்தீர்கள்? துரோகத்தை மட்டும்தான் செய்தார்கள்.
முத்தலாக் சட்டமா? ஆதரிக்கிறோம்! காஷ்மீருக்குச் சிறப்புரிமை ரத்தா? ஆதரிக்கிறோம். குடியுரிமைத் திருத்தச் சட்டமா? ஆதரிக்கிறோம், என்று எல்லாவற்றுக்கும் தலையாட்டிய பழனிசாமிக்கு இப்போது சிறுபான்மையினரைப் பற்றிப் பேச அருகதை உண்டா?
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு அதிமுக ஆதரவு அளித்தது. மாநிலங்களவை எம்.பி., நவநீதகிருஷ்ணன் ஆதரித்துப் பேசினார். “காஷ்மீருக்கான சிறப்புரிமையை ரத்து செய்வதை எதற்காக ஆதரித்தீர்கள்?'' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நிருபர்கள் கேட்கிறார்கள். இதுதான் ஜெயலலிதாவின் கொள்கை, அவரது கனவு இது என்று சொல்லி இருக்கிறார் பழனிசாமி.
"என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான். இனி அந்தக் கட்சியோடு கூட்டணி வைக்கவே மாட்டேன்" என்று கூடத்தான் ஜெயலலிதா ஒரு தடவை சொன்னார். அதுவும் ஜெயலலிதாவுடைய கனவுதான். எதற்காக பழனிசாமி மீறினார். ஜெயலலிதாவின் கனவை மீறிய பழனிசாமிக்கு, சிறுபான்மையினரைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது?
நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. ராமநாதபுரத்திலிருந்து தேர்வுபெற்ற அன்வர் ராஜா, முத்தலாக் தடை மசோதாவை 2018-ஆம் ஆண்டு எதிர்த்துப் பேசினார். துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் குமார் அதை ஆதரித்து 2019-இல் பேசியிருக்கிறார்.
“முத்தலாக் தடை மசோதாவை அதிமுக எதிர்க்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். முத்தலாக் விஷயத்தில் கண்மூடித்தனமாகச் செயல்படுகிறது மத்திய அரசு. வகுப்புவாத அரசியலைச் செயல்படுத்த நினைக்கிறது பா.ஜ.க'' - இது, 2018-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அன்வர் ராஜா ஆற்றிய உரை.
''முத்தலாக் தடை மசோதா மூலம் பெண்களுக்குச் சமூகத்தில் சம உரிமைகளையும், நல்வாய்ப்புகளையும் ஈட்டித்தரும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியுள்ள பாலினச் சமத்துவத்துக்கு, இந்த முத்தலாக் சட்டத் திருத்த மசோதா மேலும் வலுசேர்க்கும். சமூகச் சடங்குகளைப் பெண்கள்மீது திணிக்காமல், சம உரிமைகளை வழங்கிடும்'' - இது, 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ரவீந்திரநாத் குமார் ஆற்றிய உரை.
இதில் எது அதிமுகவின் கொள்கை? முத்தலாக் சட்டத்தை மகனை விட்டு ஆதரிக்கச் சொன்ன பன்னீர்செல்வத்துக்கு சிறுபான்மையினரைப் பற்றிப் பேச அருகதை உண்டா? பாஜக அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டமானது இசுலாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கும், ஈழத்தமிழர்களுக்கும் மட்டுமல்ல இங்குள்ள தமிழர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்போகும் சட்டம் ஆகும்.
அதனால் தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்த்தோம். மாபெரும் போராட்டங்களை நடத்தினோம். மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினோம். கோடிக்கணக்கான கையெழுத்துக்களுடன் குடியரசுத் தலைவரையே சந்தித்தோம்.
அந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரித்தார். அந்தச் சட்டத்தால் யாருமே பாதிக்கப்படவில்லையே என்று ஏதோ தீர்க்கதரிசி போலப் பேசினார் முதல்வர். அந்தச் சட்டம் அமலுக்கு வந்து கணக்கெடுப்பு எடுக்கப்பட்டால் பலரும் குடியுரிமை இழப்பார்கள். இந்த நடைமுறை கூடத் தெரியாமல், கேட்டார் முதல்வர்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு வருகின்ற ஜனவரி மாதம் மீண்டும் மத்திய அரசு உயிரூட்டப் போவதாக செய்திகள் வருகிறது. அந்த சட்டத்தால் லட்சக்கணக்கான சிறுபான்மையினர் பாதிக்கப்படுவார்கள். இதற்குக் காரணமான பழனிசாமிக்குச் சிறுபான்மையினரைப் பற்றிப் பேச உரிமை உண்டா?
கூட்டணி வேறு, கொள்கை வேறு என்று பழனிசாமி சொல்லி இருக்கிறார் பழனிசாமி. சபாஷ், இதுவரைக்கும் மத்திய அரசின் ஜனநாயக விரோதச் செயல்களை எதிர்த்துள்ளீர்களா? எதை எதிர்த்துள்ளீர்கள்? எல்லாவற்றுக்கும் தலையாட்டிய பிறகு, ஆட்சி முடியப் போகும் நிலையில் கொள்கை வேறு கூட்டணி வேறு என்று பாடம் எடுக்கிறீர்கள்?
பழனிசாமிக்கு உணர்ச்சி வந்துவிட்டது என்று யாரும் நினைத்துவிடாதீர்கள். இவர் தான் முதல்வர் என்று சொல்லி வருவதை பாஜகவினர் ஏற்கவில்லை. அதனால் அந்தக் கோபத்தை இப்படிக் காட்டுகிறார் பழனிசாமி. இந்த அரசியல் நாடகங்கள் எல்லாம் மக்கள் அறியாதது அல்ல. நானும் விவசாயி, நானும் விவசாயி என்று தினமும் சொல்லிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. அவருக்குத் தெரிந்த ஒரே விவசாயம், பண விவசாயம் தான், ஊழல் விவசாயம் தான்.
அவர் மீதும் அவரது அமைச்சர்கள் மீதும் தமிழக ஆளுநரிடம் ஊழல் பட்டியலைக் கொடுத்துள்ளோம். இது கூட முழுமையான பட்டியல் அல்ல. முதல் பட்டியல்தான். அடுத்தடுத்து பல்வேறு பட்டியல் வெளிவர இருக்கிறது. இந்த முதல் பட்டியலைப் பார்த்தே நடுங்க ஆரம்பித்துள்ளார் பழனிசாமி.
முதல்வர் பழனிசாமி தனது உறவினர்கள், பினாமிகள் மூலமாக அரசாங்க டெண்டர்களை எடுத்து கோடி கோடியாக கொள்ளை அடித்துள்ளார். அவரது உறவினர்கள் யார் யார் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்று அவர்களது பெயரைக் குறிப்பிட்டு நான் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினேன்.
ஆனால் அதற்கு பழனிசாமி இதுவரை பதில் சொல்லவில்லை. சுப்பிரமணியம், இராமலிங்கம், வெற்றிவேல் ஈஸ்வரமூர்த்தி, என்.ஆர்.சூரியகாந்த் ஆகிய தனது உறவினர்கள் பயன்பெறும் வகையிலும், அவர்களை வைத்து தனக்குப் பணம் வரும் வகையிலும் டெண்டர்களை வடிவமைத்துள்ளார் என்று ஆளுநருக்கு கொடுத்த அறிக்கையில் விரிவாகச் சொல்லி இருக்கிறோம்.
இப்படி நாங்கள் புகார் கொடுத்ததை அறிந்த பழனிசாமி, தன் மீது எந்தத் தவறும் இல்லை என்று மறுத்திருக்க வேண்டும். இவர்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி இருக்க வேண்டும். எனது ஆட்சியில் எந்த டெண்டரிலும் முறைகேடு இல்லை என்று சொல்லி இருக்க வேண்டும். அதை நிரூபித்தால் பதவி விலகத் தயார் என்று சொல்லி இருக்க வேண்டும்.
அப்படி அவரால் சொல்ல முடியவில்லை. 'எனது உறவினர் இ-டெண்டரில் போட்டிருக்கிறார். இ-டெண்டரில் போட்டால் யாருக்கும் தெரியாது. அதனால் அவர் டெண்டர் எடுத்தது எனக்குத் தெரியாது' என்று பதில் சொல்லி இருக்கிறார். இ-டெண்டரில் போட்டால் மற்றவர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்! இ-டெண்டரில் விண்ணப்பித்தவருக்கு அது தெரியுமல்லவா? அவர் பழனிசாமிக்குச் சொல்லி இருக்க மாட்டாரா? என்ன புத்திசாலித்தனமான பதில் சொல்லி இருக்கிறார் பழனிசாமி?
ஒருவன் தேங்காய் திருட தென்னை மரத்தில் ஏறினானாம். தோட்டக்காரன் பார்த்துவிட்டான். 'மாங்காய் பறிக்க வந்தேன்' என்று பொய் சொன்னானாம். 'தென்ன மரத்தில் மாங்காய் எப்படி இருக்கும்?' என்று தோட்டக்காரன் கேட்டதும், 'அதனால் தான் இறங்கிக் கொண்டு இருக்கிறேன்' என்றானாம். அதைப் போன்ற புத்திசாலிதான் பழனிசாமி.
தன் மீது வழக்கு இல்லை என்றும் பழனிசாமி சொல்லி இருக்கிறார். இவர் மீதான வழக்கில் சிபிஐ விசாரணைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு டெல்லி சென்று உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கி வைத்துள்ளார் பழனிசாமி.
இதையே மறைத்து, தான் ஏதோ யோக்கியன் போலப் பேட்டி அளித்துள்ளார். அந்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கினால் வழக்கை சிபிஐ எடுக்கும். அடுத்த நிமிடமே முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இது நம்மை விட அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால் தான் பாஜகவின் காலில் விழுந்து கிடக்கிறார் பழனிசாமி.
இதேபோல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளார். பன்னீர்செல்வத்துக்குப் பணம் கொடுத்ததாக ஒரு அமெரிக்க நிறுவனமே சொல்லி இருக்கிறது.
பழனிசாமிக்கு போட்டியாகப் பணம் சம்பாதித்து வருபவர் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி. அவரும் பல போலி கம்பெனிகள், பினாமி கம்பெனிகள் மூலம் டெண்டர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார். அந்தப் பணத்தை வைத்து முதலமைச்சர் ஆகிவிடலாமா என்ற கனவிலும் இருக்கிறார். இது பழனிசாமிக்கே தெரிந்துவிட்டது.
மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி, தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து லாபம் அடைந்துள்ளார். உதிரிப் பாகங்கள் கொள்முதலில் ஊழல் செய்துள்ளதற்கான ஆதாரத்தைக் கொடுத்துள்ளோம். இதில் இருந்து தப்புவதற்காக அவர் என்ன செய்து வருகிறார் என்பது அதிமுகவினருக்கே தெரியும். அதிமுகவின் ரகசியங்களை பாஜகவுக்கு பாஸ் செய்து வருவதே இவர்தான் என்று அவரது கட்சிக்காரர்களே பேசிக் கொள்கிறார்கள்.
உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மத்திய அரசு கரோனா காலத்தில் வழங்கிய அரிசியையே வெளிச்சந்தையில் விற்றுவிட்டார் என்பதற்கான முழு ஆதாரங்களைக் கொடுத்துள்ளோம். அமைச்சர் விஜயபாஸ்கரின் கரன்சி லீலைகள் மத்திய அரசுக்கே தெரியும். அவர்களே பல முறை ரெய்டு நடத்தி உள்ளார்கள். அதற்கு மேல் நடவடிக்கை எடுத்தால் அவரது தப்புவதே கஷ்டம்.
வருவாய் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் பாரத் நெட் டெண்டர் ஊழல் அனைவருக்கும் தெரியும். இரண்டு மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சலுகை காட்ட டெண்டர் படிவங்களில் மாற்றம் செய்தவர் அவர். மத்திய அரசே இதை தெரிந்து டெண்டரை கேன்சல் செய்தது. ஒரு ஐஏஎஸ் அதிகாரியே பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போகும் அளவுக்கு ஊழல் குடைச்சல் கொடுத்த உத்தமர் தான் உதயகுமார்.
அமைச்சர் ஜெயக்குமார் மீது வாக்கி டாக்கி ஊழல் புகார் கொடுத்துள்ளோம். சுமார் 30 கோடி வரைக்கும் அதில் ஊழல் நடந்துள்ளது என்று முதல் கட்டமாக சில புகார்களைத் தான் தந்துள்ளோம்.
இந்திய தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம், வெளிப்படை ஒப்பந்தப்புள்ளி விதிகள் - ஆகியவை எப்படி எல்லாம் மீறப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்களைக் கொடுத்துள்ளோம். இது எதையும் மறுக்க முடியாத பழனிசாமி, 'திமுகவின் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை' என்று பொத்தாம் பொதுவாகப் பதில் சொல்லி இருக்கிறார். பழனிசாமி பதில் சொல்லாவிட்டாலும் மக்கள் தண்டனைத் தரத் தயாராகி விட்டார்கள்.
இந்தியாவே இவரது ஆட்சியைப் பார்த்து ஆச்சரியப்படுகிறதாம். பழனிசாமி சொல்கிறார். சொந்தக் கட்சியிலேயே செல்வாக்கு இல்லாத ஒருவர், முதல்வராக இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். யாரோ ஒருவர் தரையில் ஊர்ந்து போனாரே, அவர்தான் முதல்வரா என்று பார்த்து ஆச்சரியப்படுவார்கள். அரசாங்க கஜானாவை இப்படி பில் போட்டு எடுக்க முடியுமா என்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.
ஒரு கேபினெட் மொத்தமும் கிரிமினல் மயமாகி இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். தலைமைச் செயலாளர் முதல் டிஜிபி வரை வழக்குகளில் சிக்கியதைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். அதிமுகவாக இருந்தாலும் பாஜக ஆட்சியாக நடப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். சிபிஐ வருமானவரித் துறை, அமலாக்கத்துறை என எதை வைத்து மிரட்டினாலும் பாஜக காலில் விழுந்து கிடப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.
இந்த வரிசையில் இந்தியாவுக்கு இன்னொரு ஆச்சரியத்தைத் தமிழ்நாட்டு மக்கள் தரப்போகிறார்கள். அதிமுக தேர்தல் களத்தில் துரத்தப்பட்டது என்ற அதிர்ச்சியைத் தமிழ்நாட்டு மக்கள் தரப்போகிறார்கள். தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் துரோகம் இழைத்தால் எத்தகைய தண்டனை கிடைக்கும் என்பதை தமிழக மக்கள் தங்கள் தீர்ப்பின் மூலமாக நிரூபித்து எடப்பாடி கூட்டத்துக்கும் இந்தியாவுக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தரப்போகிறார்கள்”.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT