Published : 23 Dec 2020 07:32 PM
Last Updated : 23 Dec 2020 07:32 PM
நீதிமன்றத்தை நாடி வரும் மக்களின் நம்பிக்கையை வழக்கறிஞர்கள் வீணடிக்கக்கூடாது என நீதிபதி என்.கிருபாகரன் பேசினார்.
உயர் நீதிமன்ற கிளை எம்பிஎச்ஏஏ, எம்பிஏ மற்றும் பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இளம் வழக்கறிஞர்களுக்கு பைக் வழங்கும் நிகழ்ச்சி உயர் நீதிமன்றக் கிளையில் நடைபெற்றது.
வழக்கறிஞர் சங்கத் தலைவர்கள் துரைப்பாண்டியன், ராமமூர்த்தி, ஆனந்தவள்ளி ஆகியோர் தலைமை வகித்தனர். நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் 8 வழக்கறிஞர்களுக்கு பைக் வழங்கினர்.
நீதிபதி என்.கிருபாகரன் பேசுகையில், "இந்தியாவிலேயே மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்களுக்கு இருசக்கர வாகனம் வழங்குவது இது தான் முதல் முறை. இதை பாராட்டுகிறோம். வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலில் சம்பாதிப்பதை மட்டும் நோக்கமாக வைத்திருக்கக்கூடாது.
தங்களைத் தேடி வரும் மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும். மக்கள் இறுதி நம்பிக்கையாகவே நீதிமன்றத்தை நாடி வருகின்றனர். அவர்களின் நம்பிக்கையை வீணடிக்கக்கூடாது.
மூத்த வழக்கறிஞர்கள் தங்கள் வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை இளம் வழக்கறிஞர்களுக்கு உதவி செய்ய பயன்படுத்த வேண்டும்" என்றார்.
அப்போது, வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வெங்கடேசன், மகேந்திரபதி, சிவசங்கரி, கிருஷ்ணவேனி, மூத்த வழக்கறிஞர்கள் அஜ்மல்கான், லஜபதிராய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT