Published : 23 Dec 2020 07:19 PM
Last Updated : 23 Dec 2020 07:19 PM
ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டம் தொடர்பாகத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் முதல்வர் நாராயணசாமியும் கடிதத்தில் மோதியுள்ளனர்.
தமிழகத்தைச் சுட்டிக் காட்டிப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தைத் தடை செய்ய கிரண்பேடி வலியுறுத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் பொங்கல் பரிசு ரூ.2500 தருவதுபோல் புதுச்சேரியில் ஒப்புதல் தர நாராயணசாமியும் கோரியுள்ளனர்.
புத்தாண்டு, கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகளில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புதுவைக்கு வருவார்கள். விடுதிகளில் அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டு விடும். ஆனால் இந்த ஆண்டு கரோனா பரவல், மது பானங்கள் விலை உயர்வு, கேளிக்கை நிகழ்ச்சிகள் ரத்து உள்ளிட்ட காரணங்களால் சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்யவில்லை.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதுவை கடற்கரை சாலையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இல்லை என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடந்த வாரம் தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து கொண்டாட்டங்கள் நடத்த அனுமதியில்லை என்று ஆட்சியர் பூர்வா கார்க் உத்தரவிட்டார். இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி, கடற்கரை மற்றும் ஹோட்டல்களில் புத்தாண்டு கொண்டாடத் தடையில்லை என்று நேற்று தெரிவித்தார்.
இதற்குப் பதிலாக ஆளுநர் கிரண்பேடி இன்று வெளியிட்டுள்ள வாட்ஸ்அப் பதிவில், "பிரிட்டனில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தவர்களில் ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விமானத்தில் அவருடன் பக்கத்து இருக்கையில் பயணித்த புதுவை மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கண்டறியப்பட்டு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் ரத்து செய்யப்பட்டு கடற்கரைச் சாலை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுவையில் விழாக்களைக் கொண்டாடவும், கடற்கரைச் சாலையில் பொதுமக்கள் கூடவும் தடை இல்லை என அரசு தெரிவித்துள்ளது. தற்போது புதுவையில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், கொண்டாட்டங்கள் நிகழ்ந்தால் சுற்றுலாப் பயணிகள், வெளிமாநிலத்தினர் மூலம் தொற்றுப் பரவ அதிக வாய்ப்புள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து முதல்வருக்குக் கிரண்பேடி கடிதம் அனுப்பினார். அதில், "மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு புத்தாண்டுக் கொண்டாட்டத்தைத் தமிழகத்தைப்போல் ரத்து செய்யவேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி கிரண்பேடிக்கு இன்று மாலை அனுப்பிய பதிலில், "புதுச்சேரியைப் போன்று சுற்றுலாத் தலமான கோவாவில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குத் தடையில்லை. பொதுமக்கள் பாதுகாப்பில் புதுச்சேரி அரசு கவனம் செலுத்துகிறது. கரோனாவிலிருந்து 97.4 சதவீத மக்கள் குணமடைந்துள்ளனர். கடற்கரைச் சாலையில் புத்தாண்டைக் கொண்டாடும்போது மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கிறார்களா என்பதைப் போலீஸார் கண்காணிப்பார்கள். அன்றாட நிகழ்வுகளில் தலையிடுவதே உங்கள் வழக்கமாக உள்ளது.
தற்போதைய பொருளாதார சூழலில் பல மாநிலங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குத் தடையில்லை. தமிழகத்தைச் சுட்டிக்காட்டிப் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குத் தடை கோருகிறீர்கள். தமிழகத்தில் பொங்கலுக்கு ரூ.2,500 பரிசு அறிவித்ததுபோல் புதுச்சேரியில் தர ஒப்புதல் தரவேண்டும்.
கரோனா காலத்தில் மக்கள் வசிப்பிடம் சென்று அவர்கள் பிரச்சினை அறிந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பணியாற்றினோம். நீங்களோ கரோனா தொடங்கியதிலிருந்து இன்று வரை 9 மாதங்களாக ராஜ்நிவாஸை விட்டு வெளியே வரவில்லை. முழுக்கப் பாதுகாக்கப்பட்ட வாழ்வையே வாழ்கிறீர்கள். ஆனால், குற்றம் சாட்டுவதை மட்டுமே செய்கிறீர்கள். சமூகத்தில் என்ன நடக்கிறது என்ற உண்மையான நிலவரமே தெரியவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT