Published : 23 Dec 2020 05:50 PM
Last Updated : 23 Dec 2020 05:50 PM
கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தைச் சீரழித்த 'அதிமுகவை நிராகரிப்போம்' எனத் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் திமுக ஆட்சியில் தீர்த்து வைக்கப்படும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச. 23) காலை, காஞ்சிபுரம் மாவட்டம் - திருப்பெரும்புதூர் தொகுதியில் உள்ள குன்னம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:
"ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. எத்தனை வருடம் ஆகி விட்டது.
கிட்டத்தட்ட பத்து தடவை விசாரணைக் கமிஷனை நீட்டித்து இருக்கிறார்களே தவிர, இதுவரைக்கும் அதற்கு ஒரு முடிவு வரவில்லை.
எடப்பாடி பழனிசாமி நான் ஒரு விவசாயி என்று தொடர்ந்து சொல்கிறார். ஒரு பச்சைத் துண்டைப் போட்டுக்கொண்டு, பெரிய விவசாயி என்று சொல்லிக் கொண்டு பச்சை துரோகம் செய்து கொண்டிருப்பவர்தான் எடப்பாடி பழனிசாமி.
3 வேளாண் சட்டங்கள் என்ன ஆகின? விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தை அழிக்கக் கூடிய சட்டங்கள். அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய பாஜக அரசு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் கொண்டு வந்தபோது அதிமுக அதைக் கண்மூடித்தனமாக ஆதரித்தது.
ஆதரித்தது மட்டுமல்லாமல், ஓட்டுப் போட்டது மட்டுமல்லாமல், இப்போது எடப்பாடி பழனிசாமி அதில் எந்தத் தவறும் இல்லை என்று வாதம் செய்து கொண்டிருக்கிறார்.
ஏறத்தாழ ஒருமாத காலமாக டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் குளிரைக் கூடப் பொருட்படுத்தாமல் தங்கள் குழந்தைகளோடு அங்கேயே போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஒருபக்கம் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்; இன்னொரு பக்கம் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதுவரைக்கும் பிரதமர் மோடி, அந்த விவசாயிகளை அழைத்துப் பேசினாரா? அதைத் தீர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டாரா? இல்லை. அவர்கள் வைக்கிற கோரிக்கைகள் என்ன? அந்த மூன்று வேளாண் சட்டங்களை உடனே மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைக்கிறார்கள். அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத ஒரு சூழ்நிலையில் பாஜக அரசு இருந்துகொண்டிருக்கிறது. அதையும் எடப்பாடி பழனிசாமி ஒத்துக் கொண்டிருக்கிறார்.
நேற்று ஆளுநரைச் சந்தித்தேன். 97 பக்கங்கள் கொண்ட ஒரு ஊழல் பட்டியலைக் கொடுத்திருக்கிறோம். முதல்வர் செய்திருக்கக்கூடிய ஊழல்களை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறியிருக்கிறோம். 6,133 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு நெடுஞ்சாலைத்துறை காண்ட்ராக்டில் ஊழல் செய்திருக்கிறார்கள், என்று அதனுடைய ஆதாரத்தை நாங்கள் வெளியிட்டோம். எந்த பதிலும் இதுவரை இல்லை.
உயர் நீதிமன்றத்திற்குச் சென்றோம். சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டது. எடப்பாடி பழனிசாமி, சிபிஐ அல்ல எந்த விசாரணை வந்தாலும் நான் சந்திக்கத் தயார் என்று சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அவர் என்ன செய்தார்? அவர் ஒரு தடை வாங்கினார். அதை விசாரிக்கக் கூடாது என்று.
அதே மாதிரி துணை முதல்வர் வருமானத்திற்கு மீறி சொத்து வாங்கியிருக்கிறார். பல்வேறு வெளிநாடுகளில், எங்கெங்கோ தீவுகளில் எல்லாம்கூட வாங்கி இருக்கிறார் என்ற விவரம் கிடைத்திருக்கிறது. அதையெல்லாம் தொகுத்து ஆளுநரிடத்தில் கொடுத்திருக்கிறோம்.
இன்னும் அமைச்சர்களின் பல ஊழல்கள் வந்துகொண்டிருக்கிறது. இந்த நாட்டை குட்டிச் சுவராக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கரோனா நோயைப் பயன்படுத்தி அதற்கு வருகிற நிதியைக் கூட கொள்ளை அடித்துக் கொண்டிருக்கக் கூடிய ஆட்சிதான், இந்த அதிமுக ஆட்சி. இதற்கெல்லாம் தயவு செய்து விசாரணை வைக்க வேண்டும் என்று ஆளுநரிடத்தில் புகார் மனு கொடுத்திருக்கிறோம், ஆதாரங்களோடு கொடுத்திருக்கிறோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி இருக்கிறார்.
ஒருவேளை அவர் நடவடிக்கை எடுப்பதற்குத் தயங்கினால் நிச்சயமாக, உறுதியாக நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம். நீதிமன்றத்தை நாடுவது மட்டுமல்லாமல், விரைவிலேயே திமுக ஆட்சிக்கு வரப்போகிறது. வந்த பின்பு முதன் முதலாக இந்தப் பணியைச் செய்வோம்.
இது யாருடைய பணம். அரசாங்கத்தினுடைய பணம், உங்களுடைய வரிப்பணம். அதைக் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை சும்மா விடக்கூடாது என்ற உணர்வோடுதான் நாங்கள் இருக்கிறோம்".
இவ்வாறு அவர் பேசினார்.
இதன்பின்னர், கிராம சபைக் கூட்டத்தை நிறைவு செய்து ஸ்டாலின் பேசியதாவது:
"மினி கிளினிக் என்று முதல்வர் ஆரம்பித்தார்? என்ன ஆயிற்று? இருக்கிற ஆரம்ப சுகாதார நிலையங்களைச் சீர்படுத்தினாலே போதும். இங்கு கிளினிக் என்று ஒன்று தேவை இல்லை. கொள்ளையடிப்பதற்காகக் கொண்டுவந்த திட்டம் அது. அதை வைத்துக்கொண்டு, இருப்பதை சுருட்டிக் கொண்டு போக அவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். அது மக்களுக்குப் பயன்படவில்லை. அது முறையாக நடத்தப்படவில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள் யாரும் அங்கு இல்லை.
இப்போது, இதுதான் ஆரம்ப சுகாதார நிலையம், இதுதான் கிளினிக் என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கரோனா காலத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கக் கூடிய தொற்று நோய் மருந்து மாத்திரைகளை தரவேண்டும்.
பிளீச்சிங் பவுடர் மற்றும் துடைப்பத்தில் ஊழல் செய்த ஆட்சி, இந்த ஆட்சி. இப்படி ஒரு மோசமான நிலையில் இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தைச் சீரழித்த 'அதிமுகவை நிராகரிப்போம்' எனத் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் திமுக ஆட்சியில் தீர்த்து வைக்கப்படும்".
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT