Published : 23 Dec 2020 05:38 PM
Last Updated : 23 Dec 2020 05:38 PM
சென்னை மாநகராட்சியின் குப்பைக்கொட்டும் கட்டணத்தை ரத்து செய்து முதல்வர் உத்தரவிடவேண்டும். அதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கட்டுப்படாவிட்டால், திமுக ஆட்சி அமைந்தவுடன், குப்பை கொட்டக் கட்டணம் ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:
“சென்னை மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம், 2021 ஜனவரி முதல் சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும்- அதாவது குப்பை கொட்டக் கட்டணம் வசூலிக்கப்படும்” என்று அறிவிப்பு வெளியிட்டுள்ள அதிமுக அரசுக்குத் திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“குப்பை கொட்டக் கட்டணம்” என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள கட்டணங்கள், கரோனா பேரிடரில் சிக்கிய மக்கள், அதன் அவதிகளில் இருந்து மீள வகையறியாது தவித்துக் கொண்டிருக்கும் போது, அவர்களின் அடிவயிற்றில் சுக்குமாந்தடியினால் சுழற்றித் தாக்குதல் தொடுத்திருக்கிறது.
கரோனாவில் மின்கட்டண வசூல், கரோனாவில் சொத்து வரிக்கு அபராதம், இப்போது அதே கரோனாவில் குப்பை கொட்டக் கட்டணம்- என அதிமுக அரசின் நிர்வாக அலங்கோலங்கள் அடுத்தடுத்து வந்து படமெடுத்தாடி சந்தி சிரிக்க வைக்கிறது.
வாழ்வாதாரத்தைத் தொலைத்த மக்களும்- பொருளாதார இழப்புகளைச் சந்தித்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் இன்னும் முறையாகவோ முழுமையாகவோ மூச்சு விடத் தொடங்கவில்லை. பல தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வரும் வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள், உணவகங்கள் அனைத்தும் இப்போதுதான் “மெல்ல மெல்ல” உயிரோட்டப் பாதைக்கு நகர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
தனி மனித வாழ்வாதாரத்தையும்- தொழில் நிறுவனங்களின் எதிர்காலத்தையும், மீண்டும் ஒரு “பேரிடருக்குள் குப்புறத் தள்ளுவது” போல, குப்பைக் கட்டணத்தை அறிவித்திருப்பது, அதிமுக அரசினர் மனம் குப்பை மேடாக மாறி விட்டதையே காட்டுகிறது. புத்தாண்டிலிருந்து வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த கட்டணம், சென்னை வாழ் குடும்பங்களிடமும், வணிகர்களிடமும், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் புரிவோரிடமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி நிலைகுலைய வைக்கும்.
திறந்த வெளி பொது இடங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு ஒரு தனிக் கட்டணம் வேறு விதிக்கப்பட்டுள்ளது. 500 பேருக்குக் குறைவான கூட்டம் என்றால் 5000 ரூபாய், 501 முதல் 1000 பேர் வரை கூட்டம் என்றால் 10 ஆயிரம் ரூபாய், 1000 பேருக்கு மேல் கூட்டம் என்றால் 20 ஆயிரம் ரூபாய் என்று அறிவித்திருப்பது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் பேரபாயம் நிறைந்தது. இந்தக் கட்டணம் - ஆர்ப்பாட்டம், விழாக்கள், கொண்டாட்டங்கள் அனைத்திற்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் எண்ணிலடங்காத சிறு சிறு வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. அனைத்து மதத்தினரும் இது போன்ற வழிபாட்டுத் தலங்களின் விழாக்களைத் திறந்த வெளியில்தான் கொண்டாடுகிறார்கள். நாம் சென்னை மாநகர வீதிகளில் அந்த கொண்டாட்டங்களைக் காண முடியும்.
இனி அவர்கள் எல்லாம் 5000 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை குப்பை கொட்டக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றால்- அவர்கள் எல்லாம் எப்படி அதைச் செலுத்த முடியும்? தொழிலாளர் உரிமைகளுக்காக- மக்களின் பிரச்சினைகளுக்காக, போராட்டம்- ஆர்ப்பாட்டம் நடத்துவோர் அனைவருமே அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் அல்ல. சிறு சிறு சமூக நல அமைப்புகள்- குடியிருப்பு வாசிகளின் சங்கங்கள் எல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
அவற்றுக்கு எல்லாம் எப்படி அவர்கள் கட்டணம் செலுத்த முடியும்? குடிநீரே கிடைக்கவில்லை - தெருவிளக்கு எரியவில்லை -, மின்சாரம் வரவில்லை என மக்கள் கூடிப் போராடினால்- அதற்கும் இந்த மாதிரி கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கடும் கண்டனத்திற்குரியது, ஜனநாயக விரோதமானது.
அறவழியிலான போராட்டங்களின் மூலம் ஜனநாயகத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமையை, இது போன்ற அமைப்புகளிடமிருந்து மட்டுமின்றி- அரசியல் கட்சிகளிடமிருந்தும் பறிக்கும் ஆணவ, அடாவடிப் போக்காகும்! சென்னை மாநகராட்சியில் தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை. அந்த மாநகராட்சி எப்படி தான்தோன்றித் தனமாக மக்களின் உரிமையைப் பறிக்க முடியும்?
மாநகராட்சித் தேர்தலையும் நடத்தி மேயரை- மாநகர மன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்ய முதலமைச்சர் பழனிச்சாமிக்கும்- உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கும் நேரமுமில்லை, நினைப்புமில்லை. ஏனென்றால் அவர்கள் எல்லாம் சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் உள்ள நிதியை எப்படிச் சுரண்டிக் கொழுப்பது என்பதில் மட்டுமே முழுக் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
உள்ளாட்சித்துறை அமைச்சர் பினாமி கம்பெனிகளை உருவாக்கி- மாநகராட்சி பட்ஜெட்டை “கமிஷனுக்காக” திட்டமிட்டு காலி செய்து கொண்டிருக்கிறார். அதனால்தான் மாநகராட்சித் தேர்தலை நடத்தாமல்- தனி அலுவலர்களை வைத்துக் கொண்டு- மாநகராட்சி ஆணையர்களை வைத்துக் கொண்டு, இப்படி அட்டூழியமும்- அராஜகமும் அரங்கேற்றி, “கலெக்ஷன்”, “கமிஷன்” “கரப்ஷன்” என்று நடமாடுவதோடு- சொத்து வரி உயர்வு, சொத்து வரியைத் தாமதமாகக் கட்டினால் அபராதம், திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் என்று மேலும் மேலும் சென்னை மாநகர மக்கள்மீது சுமையை அடுக்கடுக்காக ஏற்றி வருகிறார். உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் ஊழல்களுக்குத் தண்டனையாகச் சென்னை மாநகராட்சி மக்கள் அபராதம் கட்ட வேண்டுமா?
சென்னை மாநகரத்தில்- தனியார் நிறுவனத்திற்குக் குப்பை அள்ள கான்டிராக்ட் கொடுத்து (எப்படிக் கொடுத்துள்ளார்கள் என்பது தனிக்கதை) சில வீதிகளில் குப்பை அள்ளும் ரிக்ஷாக்களை தெருவில் ஓட விட்டு மாநகர மக்களை ஏமாற்ற ஒரு “ஃபிலிம்” காட்டிவிட்டு- அடுத்த சில நாட்களில் அந்த குப்பையைக் கொட்ட மக்களிடமே கட்டணம் வசூலிக்கிறோம் என்று கூறியிருப்பது கேடுகெட்ட அதிமுக அரசின் நிர்வாகத்திற்குச் சாட்சியமாக இருக்கிறது. மாநகராட்சி பட்ஜெட்டை அமைச்சர் கபளீகரம் செய்வார், அதற்கு மக்கள் வரி செலுத்த வேண்டும் என்பது மகாபாதகமான செயல்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மாநகராட்சிக்கு, “புதுப்புது வரிகள்” போடும் அதிகாரத்தை யார் கொடுத்தது? ஒரு வரியை விதிக்கும் முன்பு மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டாமா? மாநகர மன்றத்தில் வைத்து விவாதிக்க வேண்டாமா? இது எதையும் செய்யாமல் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை விட்டு மக்களைப் பெருமளவில் பாதிக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பதும் மிகக் கொடுமையானது, கொடுங்கோல் தன்மையிலானது.
இது சென்னை மாநகராட்சிக்கு மட்டுமான அறிவிப்பா? அடுத்தடுத்து மற்ற மாநகராட்சிகளுக்கும் வரப்போகின்ற அறிவிப்பிற்கு முன்னோட்டமா? என்ற சந்தேகம் எழுகிறது. ஒரு பக்கம் பொங்கல் பரிசு என்று 2500 ரூபாய் அறிவித்து விட்டு- அதை விட இரண்டு மடங்கு பணத்தை “குப்பை கொட்டும் கட்டணம்” என்று ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும் பறித்து, பகல் கொள்ளைபோல் ஒரு மாநகராட்சி செயல்படுவது அராஜகமானதாகும்.
எனவே, சென்னை மாநகர மக்களுக்கும்- சிறு குறு நடுத்தர வியாபார நிறுவனங்களுக்கும்- திறந்த வழி பாட்டுத்தலங்களின் விழாக்களுக்கும் மற்றும் கொண்டாட்டங்களுக்கும் விரோதமான அதிமுக அரசின் இந்த “குப்பை கொட்டக் கட்டணம்” என்ற அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற முதல்வர் பழனிசாமி உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒரு வேளை முதல்வரின் உத்தரவுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கட்டுப்படா விட்டால், மக்களின் பேராதரவுடன் திமுக ஆட்சி அமைந்தவுடன், இந்தக் குப்பை கொட்டக் கட்டணம் ரத்து செய்யப்படும்.
சென்னை மாநகராட்சியின் நிதி முறைகேடு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, தவறு செய்தோர் யாராக இருந்தாலும் தக்கபடி தண்டிக்கப்படுவர் என்று எச்சரிக்க விரும்புகிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT