Published : 23 Dec 2020 02:55 PM
Last Updated : 23 Dec 2020 02:55 PM
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு பொங்கல் பரிசாக ரூ.2,500-ஐ அதிமுக அரசு அறிவித்துள்ளது எனவும், இதற்கெல்லாம் மக்கள் ஏமாற மாட்டார்கள் எனவும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் திமுக சார்பில் 16 ஆயிரம் இடங்களில் 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற தலைப்பில் கிராம சபைக்கூட்டம் நடத்த வேண்டும் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் திமுக சார்பில் பல்வேறு ஊராட்சிகளில் இன்று (டிச. 23) கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மேல்பட்டி ஊராட்சியில், திமுக சார்பில் கிராமசபைக்கூட்டம் இன்று நடைபெற்றது.
அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் வரவேற்றார், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் முன்னிலை வகித்தார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை வகித்து பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.
இக்கூட்டத்தில் துரைமுருகன் பேசியதாவது:
"குடியாத்தம் தொகுதிக்கு எம்எல்ஏ இல்லாததால் இங்கு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த் இந்த தொகுதியை தத்தெடுத்து, பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை செய்ய திமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் அவருக்கு உத்தரவிடுகிறேன்.
திமுக ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை குறையில்லாமல் செய்து முடிப்போம். திமுக ஆட்சியில் இருந்த போது தமிழகத்துக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் பாக்கி இருந்தது. அதன் பிறகு, 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சி செய்தது. தற்போது, தமிழகத்தின் கடன் பாக்கி ரூ.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது தான் அவர்கள் செய்த சாதனை. அதிமுக ஆட்சிக்காலத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் பெருகியுள்ளது.
அதிமுக செய்த ஊழல் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத்துறையில் முறையிட்டுள்ளோம். நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக ஆளுநரை நேரில் சந்தித்தும் அதிமுக ஊழல் பட்டியலை வழங்கியுள்ளோம்.
கரோனா தொற்றை காரணம் காட்டி பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. கரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய அரசு தமிழக மக்களுக்காக வழங்கிய அரிசியை கூட அதிமுகவினர் விட்டுவைக்கவில்லை. அரிசியிலும் மெகா ஊழல் நடந்துள்ளது.
கரோனா ஊரடங்கின்போது மக்கள் வேலையில்லாமல் கஷ்டப்பட்டபோது ரூ.1,000 வழங்கிய அதிமுக அரசு தற்போது தேர்தல் வருவதால் பொங்கல் பரிசாக ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.2,500-ஐ வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கெல்லாம் மக்கள் ஏமாறமாட்டார்கள்.
அதிமுக அரசை விரட்டியடிக்கும் காலம் வந்துவிட்டது. இதன் காரணமாக தான் மாநிலம் முழுவதும் திமுக சார்பில் 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற தலைப்பில் கிராம சபைக்கூட்டங்கள் நடந்து வருகிறது.
இக்கூட்டம் ஒவ்வொரு கிராமத்திலும் தொடர்ந்து நடைபெறும். ஜனவரி 10-ம் தேதி வரை கிராம சபைக்கூட்டம் நடைபெறும். கிராம சபைக்கூட்டம் மூலம் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மனுகள் மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுப்போம்".
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய், ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன், வேலூர் முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT