Published : 23 Dec 2020 02:18 PM
Last Updated : 23 Dec 2020 02:18 PM

கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்துவது சாத்தியமா?- குறைவான காளைகளும், வீரர்களுமே அனுமதிக்கப்படுவதால் ஆர்வலர்கள் ஏமாற்றம்

மதுரை

ஆண்டுதோறும், 900-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும், காளைகளும் பங்கேற்று வந்த புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் தற்போது 150 வீரர்களுடன் மட்டுமே போட்டியை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் காளைகளும் குறைவாகவே அனுமதிக்கும்படும் என்பதால் முன்பிபோல் இல்லாமல் போட்டியின் சுவாரசியமும், விறுவிறுப்பும் குறையும் என்பதால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை நாட்களில் நடக்கும் தமிழர்களின் பராம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் வெகு விமரிசையாக நடக்கும்.

இங்கு நடக்கும் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை காண உள்ளூர் பார்வையாளர்கள் உலக சுற்றுலாப்பயணிகள் வரை மதுரையில் திரள்வார்கள்.

இந்த ஆண்டு கரோனா தொற்று பரவலால் ஜல்லிக்கட்டு போட்டி நடக்குமா? நடக்காததா? என்ற கேள்வியும், விவாதமும் போய்க் கொண்டிருந்தது. ஆனாலும், காளைகளை அதன் உரிமையாளர்கள் வழக்கம்போல் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தயார் செய்து கொண்டிருந்தனர். வீரர்களும் காளைகளை அடக்கும் பயிற்சியைத் தொடங்கினர்.

இந்நிலையில் தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் 2021ம் ஆண்டு ஜல்லிக்கட்டுப்போட்டிகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. அதில், ‘‘ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்கள் 300 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும். திறந்த வெளியில் அரவிற்கேற்ப சமூக இடைவெளியைக் கடபிடிக்கும் வகையில் அதிகப்பட்சம் 50 சதவீதம் அளவிற்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.

பார்வையாளர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்தப்பிறகே அனுமதிக்கப்படுவார்கள். வீரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக் கூடத்தில் கரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்று சான்று பெற்றிருக்க வேண்டும்.

பார்வையாளர்கள் முகக்கவசம் அணிந்து தனிமனித இடவெளியைக் கடைபிடிக்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளனர். வழக்கமாக 900-க்கும் மேற்பட்ட வீரர்களும், காளைகளும் ஜல்லிக்கட்டுப்போட்டிகளில் பங்கேற்பார்கள். இதில், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள், போட்டி ஏற்பாட்டாளர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அதிகார மட்டங்களில் இருந்து பரிந்துரையின் பேரிலே 300-க்கும் மேற்பட்ட காளைகளுக்கு போட்டிகளில் பங்கேற்க டோக்கன் வழங்கப்படும்.

மிக நேர்மையாக 500 காளைகளுக்கு மட்டுமே டோக்கன் கிடைக்கும். இந்த டோக்கனை பெறுவதற்கு காளை உரிமையாளர்கள் பெரும் சிரமப்படுவார்கள்.

ஆண்டுதோறும் காளைகளுக்கு டோக்கன் வழங்குவதில் பல்வேறு சர்ச்சைகளும், பிரச்சினைகளும் ஏற்படும். போட்டி முடிந்ததும் அந்தப் பிரச்சனை அமுங்கிவிடுவது வழக்கமான ஒன்றாக நடக்கிறது. ஆனால், இந்த ஆண்டு 300 வீரர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவதால் காளைகளும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 300 காளைகளிலும் அதிகார மட்டங்களில் இருந்து சிபாரிசு பெற்று அனுமதிக்கப்படும் காளைகள் கண்டிப்பாக வரக்கூடும். அதனால், கிராமப்புறங்களில் உருக்கமாக ஜல்லிக்கட்டுப் போட்டியை நேசிக்கும் சாமாணிய மக்கள் வளர்க்கும் காளைகளுக்கு டோக்கன் கிடைக்குமா? என்பது கேள்விகுறியாகத்தான் இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x