Published : 23 Dec 2020 03:16 AM
Last Updated : 23 Dec 2020 03:16 AM
ஆயத்த ஆடை தயாரிப்பு சந்தையில் சர்வதேச கவனம் பெற்ற திருப்பூர் பின்னலாடைத் துறையில், ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வரை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இதில் ஏற்ற, இறக்கங்கள் நிகழ்கின்றன. நேரடியாகவும், மறைமுகமாகவும் 9 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளித்து வந்த இத்துறை, தற்போது கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மெல்ல, மெல்ல மீண்டு வருகிறது. ஏற்கெனவே அண்டை நாடுகளுக்கு இணையானவிலை கொடுக்க இயலாமை, மூலப்பொருட்கள் விலை உயர்வு, பொருளாதார மந்த நிலை உள்ளிட்டவற்றால் சிக்கி தவித்து வந்த திருப்பூர் பின்னலாடைத் துறைக்கு, கரோனா வைரஸ் பரவலால் உற்பத்தி நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டது, தொழிலாளர் பற்றாக்குறை ஆகியவை பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இதையடுத்து பிரிட்டன், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் இருந்து வரப்பெற்ற ஆர்டர்களாலும், இந்தியாவில் கரோனா பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வடமாநில தொழிலாளர்கள் வருகையாலும் நம்பிக்கை பெற்று, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் உற்பத்தி அதிகரிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். மேற்கூறப்பட்ட நாடுகளில் இருந்த வரப்பெற்ற ஆர்டர்களின் உற்பத்தியானது நடைபெற்றுவரும் சூழலில், தற்போது பிரிட்டனில் புதிய வகை கரோனா வைரஸ் பரவலால், கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் 2-ம் அலையாக தீவிரமடையும் கரோனா பரவலால் ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதே நிலை தொடர்ந்தால், திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி பாதிப்பை சந்திக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
நிச்சயம் பாதிக்கும்
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் (டீமா)எம்.பி.முத்துரத்தினம் கூறும் போது, "பின்னலாடை ஏற்றுமதி தற்போது மீண்டுவரும் நிலையில்,மீண்டும் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரிட்டனில் கரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இதுதொடர்ந்தால், திருப்பூர் ஏற்றுமதி நிச்சயம் பாதிப்பை சந்திக்கும். ஏற்கெனவே குறைந்த அளவிலான ஏற்றுமதி ஆர்டர்களே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடினமான சூழலில், உள்நாட்டு உற்பத்தி மட்டுமே தற்போது கைகொடுத்து வருகிறது. நாட்டில் தற்போதுள்ள சூழலில் பொது வெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து, பின்னலாடைகளுக்கு தேவை ஏற்பட்டுள்ளது. இதை உற்பத்தியாளர்கள் பயன்படுத் திக்கொள்ள வேண்டும். உள்நாட்டுக்குள் மீண்டும் கரோனா வைரஸ் பரவல் தீவிரமடையாமல் மத்திய, மாநில அரசுகள் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்றார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க (டிஇஏ) தலைவர் ராஜா எம்.சண்முகம் கூறும்போது, "ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆர்டர்கள் வரப்பெற்று, நல்ல முறையில் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் கரோனா வைரஸ் தாக்கம் அந்நாடுகளில் நீண்ட நாட்களுக்கு இருக்காது என நம்புகிறோம். அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங் கால், சிறு, சிறு சிக்கல்கள் ஏற்படலாம். அது தொடர வாய்ப்பில்லை. ஏற்றுமதியாளர்கள் கவலை கொள்ள வேண்டாம். ஏற்றுமதியில் தற்போது ஏற்பட்டுள்ள வளர்ச்சி தொடரும் என நம்புகிறோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT