Published : 23 Dec 2020 03:16 AM
Last Updated : 23 Dec 2020 03:16 AM
சென்னையில் ஓடும் பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் 52 இணைப்பு நீர்வழி கால்வாய்களில் பொதுப்பணித் துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.1,282 கோடியில் சுற்றுச்சூழல் மீட்டெடுப்பு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
சென்னை மாநகரின் முக்கிய வெள்ளநீர் வடிகாலாக கூவம், அடையாறு ஆறுகள், பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவை உள்ளன. பக்கிங்ஹாம் கால்வாயுடன் 21, அடையாற்றுடன் 23, கூவம் ஆற்றுடன் 8 என 52 நீர்வழிக் கால்வாய்கள் இயற்கையாகவே இணைந்துள்ளன. இவற்றில் 30 கால்வாய்களை சென்னை மாநகராட்சியும், இதர கால்வாய்களை பொதுப்பணித் துறையும் பராமரித்து வருகின்றன. வெள்ள நீர் வடிய உலகின் வேறு எந்த மாநகரத்துக்கும் இத்தகைய இயற்கை வடிகால்கள் அமைப்பு இல்லை என சுற்றுச்சூழல் ஆர்வலர் எஸ்.ஜனகராஜன் தொடர்ந்து கூறி வருகிறார்.
ஆனால் இந்த நீர்வழித்தடங்கள் அனைத்தும் ஆண்டு முழுவதும் கழிவுநீர் ஓடி மாசடைந்துள்ளன. சென்னையில் நாள்தோறும் 1,000 மில்லியன் லிட்டருக்கு மேல் கழிவுநீர் வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் சென்னை குடிநீர் வாரியத்தில் அதிகபட்சமாக நாளொன்றுக்கு 727 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் அளவுக்கே கட்டமைப்புகள் உள்ளன. அதனால் மிகை கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்டவற்றில் விடப்படுகிறது.
முறையாக பராமரிக்கப்படாததால் தூர்ந்துபோய் இருப்பதாலும், பொதுமக்கள் குப்பைகளைகொட்டுவதாலும் மழைக்காலங்களில் கால்வாய்களின் வெள்ளநீர் கொள்திறன் குறைந்து மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்படுகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள மேற்கூறிய நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் மீட்டெடுப்பு பணிகளை மேற்கொள்ள அரசால் ‘சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை’ அமைக்கப்பட்டது.
இத்திட்டத்தை மேற்கொள்ள ரூ.5,440 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டது. முதல்கட்டமாக கூவம்,அடையாறு ஆகிய ஆறுகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றின் கரையோரம் வசிக்கும் குடும்பங்களை மறுகுடியமர்த்த ரூ.3,340கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் விடப்படும் கழிவுநீரை தடுத்து, சுத்திகரிக்க சென்னை குடிநீர் வாரியத்துக்கு ரூ.729 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அடுத்த கட்டமாக பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் 52 இணைப்பு நீர்வழி கால்வாய்களில் சுற்றுச்சூழல் மீட்டெடுப்பு பணிகளுக்காக டிசம்பர் முதல் வாரத்தில் தமிழக அரசு ரூ.1,282 கோடி ஒதுக்க நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. இப்பணிகளை விரைவாக தொடங்கி 2023-ம் ஆண்டுக்குள் முடிக்க சென்னை மாநகராட்சி மற்றும் பொதுப்பணித் துறை ஆகியவை திட்டமிட்டுள்ளன. இதன்மூலம் வரும் 2024-ம் ஆண்டில் மாநகரில் உள்ள கூவம், அடையாறு ஆறுகள், பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் இவற்றுடன் இணையும் 52 நீர்வழி கால்வாய்கள் அனைத்தும் கழிவுநீர் ஓடாத, கரைகள் முழுவதும் பசுமை போர்வை படர்ந்த எழில்மிகு தோற்றத்தை பார்க்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT