Published : 22 Dec 2020 06:38 PM
Last Updated : 22 Dec 2020 06:38 PM
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலரது மீதான ஊழல் வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன. அதை மறைக்கவே அதிமுக அமைச்சர்கள் மீது ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டுகளை கூறி ஆளுநரிடம் அறிக்கை அளித்துள்ளார் என தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி இன்று தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமணையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி விமானம் மூலம் இன்று மாலை 3 மணியளவில் தூத்துக்குடி வந்தார்.
விமான நிலையத்தில் முதல்வரை, அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து முதல்வர் கே.பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
கரோனா வைரஸ் தொற்று காரணமாகவும், நிவர் மற்றும் புரெவி புயல்களாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையிலும், அவர்கள் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் ரூ.2500 வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறான, பொய்யான குற்றச்சாட்டுகளை அரசு மீதும், அமைச்சர்கள் மீதும் சுமத்தி அறிக்கையாக ஆளுநரிடம் கொடுத்துள்ளார்.
நான் முதல்வராக பதவியேற்ற நாளில் இருந்தே திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவர் இன்றைக்கு கூறியிருப்பது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே சொல்லிக் கொண்டிருந்ததை இன்று ஆளுநரிடம் கொண்டு கொடுத்துள்ளார்.
திமுக ஆட்சி காலம் போல இப்பது இல்லை. இப்போது எல்லாமே இ-டெண்டர் தான். இந்த இ-டெண்டரை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். திமுக ஆட்சியில் யாரெல்லாமல் டெண்டர் எடுத்தார்களோ, அவர்கள் தான் இப்போதும் டெண்டர் எடுக்கிறார்கள். இப்போது ஆன்லைன் மூலம் தான் டெண்டர் போட வேண்டும். எங்கிருந்து வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் டெண்டர் போட்டுக் கொள்ளலாம். இதில் எப்படி தவறு நடக்கும். தவறு நடக்க வாய்ப்பே கிடையாது.
திமுக ஆட்சி காலத்தில் தான் ஏராளமான தவறுகள் நடந்துள்ளன. அதற்கு ஆதாரங்கள் உள்ளன. புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு எஸ்டிமேட் போட்ட தொகை ரூ.200 கோடி. ஆனால், ரூ.425 கோடி பில் தொகை கொடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 130 மடங்கு அதிகம். இதைத்தான் நாங்கள் ஊழல் என்று சொல்கிறோம்.
மேலும், ஆற்காடு முதல் திருவாரூர் வரையிலான சாலை 373.36 கி.மீ., இந்த சாலைக்கு ஒப்பந்த மதிப்பு ரூ.611.7 கோடி. ஆனால் கொடுத்தது ரூ.773 கோடி. 26.43 சதவீதம் அதிக தொகை கொடுத்துள்ளனர். நாகப்பட்டினம் முதல் கட்டுமாவடி வரையிலான 117.40 கி.மீ., சாலைக்கு ஒப்பந்த தொகை ரூ.198.77 கோடியாகும். ஆனால் ரூ.271.26 கோடி கொடுத்துள்ளனர். வேலை செய்ய, செய்ய கூடுதலாக 72.49 கோடி அதிகரித்து கொடுத்துள்ளனர். இது 36.47 சதவீதம் அதிகமாகும்.
ராமநாதபுரம் முதல் கட்டுமாவடி வரையிலான 140.43 கி.மீ., சாலையை மேம்படுத்த அசல் ஒப்பந்த தொகை ரூ.141.41 கோடியாகும். ஆனால் கொடுத்தது ரூ.254.80 கோடி. இதில் 77.67 சதவீதம் அதிகமாக கொடுத்துள்ளனர். இது தான் ஊழல். ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரையிலான 114.67 கி.மீ., சாலைக்கு ஒப்பந்த தொகை ரூ.119.26 கோடி. ஆனால் கொடுத்தது ரூ.203.98 கோடி. 71 சதவீதம் கூடுதலாக கொடுத்துள்ளனர்.
டெண்டர் எடுக்க வைப்புத் தொகையை வங்கி உத்திரவாதம் மூலம் செலுத்தினால் போதும் என முதலில் உலக வங்கி தெரிவித்திருந்தது. ஆனால் திடீரென உலக வங்கி வைப்பு தொகையை வங்கி உத்தரவாதம் மூலம் செலுத்தக் கூடாது. ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் என ஒரு நிபந்தனையை போட்டது. இதன்படி தான் எனது உறவினர் என கூறும் நபர் ஆன்லைன் மூலம் டெண்டர் போட்டுள்ளார். ஆன்லைனிலே பணமும் கட்டியுள்ளார். அது எனக்கு தெரியாது, யாருக்கும் தெரியாது. டெண்டர் போட்டவருக்கு மட்டுமே தெரியும். டெண்டரை திறக்கும் போது தான் இவருக்கு வருகிறது. இதில் எப்படி ஊழல் நடைபெற்றிருக்கும்.
இந்நிலையில் ஒப்பந்தக்காரர்கள் அனைவரும் இணைந்து ஆன்லைன் மூலம் பணம் செலுத்த முடியாது. வங்கி உத்தரவாதம் அடிப்படையிலேயே மீண்டும் டெண்டர் வழங்க வேண்டும் என உலக வங்கிக்கு கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று மீண்டும் வங்கி உத்தரவாதம் மூலமே டெண்டர் எடுக்கலாம் என உலக வங்கி மாற்றியுள்ளது. அந்த ஒரு டெண்டர் மட்டுமே ஆன்லைனில் பணம் கட்டியுள்ளனர். அதில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்று, இது அரசியலுக்காக போடப்பட்ட வழக்கு என உச்சநீதிமன்றமே தெரிவித்துவிட்டது. இது தான் நடந்தது.
அதிமுக அரசு மீது பொய்யான, அவதூறான குற்றச்சாட்டுகளை கூறி ஸ்டாலின் மலிவான விளம்பரம் தேடுகிறார். இது திமுகவுக்கு கைவந்த கலைதான். திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழல்கள் அம்பலத்துக்கு வரப்போகிறது. திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சுப.தங்கவேலன், கே.என்.நேரு, பொன்முடி, துரைமுருகன், அன்பரசு, சுரேஷ் ராஜன், கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், என்.கே.பி.ராஜா, தமிழரசி, பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் மீது நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ளன.
முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம், தனி நீதிமன்றங்களை அமைத்துள்ளது. எனவே, இந்த வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வர உள்ளன. அப்போது மக்கள் மன்றத்தில் அவர்கள் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும். எனவே தான் அதனை மறைக்க முன்கூட்டியே அதிமுக அமைச்சர்கள் மீது தவறான புகார்களை கூறி, ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி ஒரு பொய்யான அறிக்கையை ஆளுநரிடம் அறிக்கை அளித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் எத்தனை தொகுதி வேண்டுமானாலும் இலக்கு வைத்துக் கொள்ளட்டும். ஆனால் ஓட்டு போடுவது மக்கள் தான். அதனை அவர் மறந்து விட்டார். நாங்கள் மக்களை நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அவர் தனது வீட்டு மக்களை நினைத்துக் கொண்டு இருக்கிறார். மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி தனது மகன் ஸ்டாலின் வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். மு.க.ஸ்டாலின், தனது மகன் உதயநிதி வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கடுகளவும் கிடையாது. திமுக கூட்டணியில் கூட்டணி கட்சியினரே பேச முடியவில்லை. எங்கள் கூட்டணியில் ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை இருக்கும். அவர்கள் சுயமாக செயல்பட்டு வருகின்றனர். எங்கள் கூட்டணி தொடரும் இவ்வாறு முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.
உணவுத்துறை அமைச்சர் விளக்கம்:
முதல்வருடன் இருந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அளித்த விளக்கம்: உணவுத் துறையில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. அரசு மீது களங்கம் சுமத்த வேண்டும் என்பதற்காக எதிர்கட்சித் தலைவர் வேண்டுமென்றே ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். கரோனா காலத்தில் ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை குடும்ப அட்டையில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. அந்தியோதயா அன்ன யோஜனா கார்டு வைத்திருப்பவர்கள் மற்றும் முன்னுரிமை கார்டு வைத்திருப்பவர்களுக்கும் மட்டுமே இந்த அரிசி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி 13.9 லட்சம் மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கப்பட்டது. இது அனைத்து அட்டைதாரர்களுக்கும் 5 கிலோ அரிசி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்கள் உள்ளன. இதனை யார் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.
ஆனால், தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நவம்பர் மாதம் வரை ஒவ்வொருநபருக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்க தமிழக அரசின் சொந்த நிதியில் ரூ.1351.5 கோடி நிதியை முதல்வர் ஒதுக்கினார். இதன் மூலம் 6.05 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை வாங்கி எல்லோருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கும் அரசு ஆவணங்களில் சாட்சியுள்ளது. இதனை ஒளித்து, மறைத்துவிட முடியாது. எந்த நேரத்திலும் பார்க்கலாம். தவறான தகவலை ஸ்டாலின் கூறி வருகிறார். அதனை எங்கும், எப்போதும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார் அமைச்சர் காமராஜ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT