Published : 22 Dec 2020 04:39 PM
Last Updated : 22 Dec 2020 04:39 PM
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே குடும்பப் பிரச்சினையில் மனைவியை கணவன் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.
ராமநாதபுரம் வ.உ.சி நகரைச் சேர்ந்த தனியார் வாகன ஓட்டுநர் சரவணன் (35). இவரது மனைவி சிவபாலா (32). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.
சிவபாலா ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கணவன், மனைவியருக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் குடும்ப நல வழக்கு நடந்து வருகிறது.
இதனால் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் இன்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகினர்.
அதனையடுத்து நீதிமன்றத்திலிருந்து பள்ளிக்கு சிவபாலா நடந்து சென்றார். அப்போது பின்தொடர்ந்து சென்ற சரவணன் நீதிமன்றத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கு நுழைவுவாயில் அருகே தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிவபாலாவை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். பின்னர் அரிவாளுடன் சென்று அருகிலிருந்த கேணிக்கரை காவல்நிலையத்தில் சரவணன் சரணடைந்தார்.
சம்பவ இடத்தின் அருகிலேயே டிஐஜி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் அமைந்துள்ளன. அதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், டிஎஸ்பி வெள்ளைத்துரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தார். அதன்பின் ஆசிரியை சிவபாலாவின் உடலை உடற்கூறு ஆய்விற்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவியைக் கொலை செய்த சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நீதிமன்றம் அருகிலேயே கொலை நடந்ததால் அப்பகுதியில் இருந்த மக்கள் பதட்டம் அடைந்தனர்.
போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குழந்தைகள் உள்ளதால் குடும்பப் பிரச்சினையை பேசித்தீர்த்துக் கொள்ளலாம் எனக்கூறியும் ஏற்க மறுத்து மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டது. அதனால் மனைவியை வெட்டிக் கொலை செய்ததாக கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT