Published : 22 Dec 2020 04:41 PM
Last Updated : 22 Dec 2020 04:41 PM
ஊழலில், மானுட உரிமைகளை மத்திய அரசிடம் விட்டுக்கொடுப்பதில், மாணவர்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகும் மாநிலங்களில், மணல் கொள்ளையில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தனது பிரச்சாரப் பயணத்தை நடத்தி வருகிறார்.
அந்தவகையில், இன்று (டிச. 22) விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்றுப் பேசியதாவது:
"செங்கல் சூளையில் கொத்தடிமையாக வாழ்பவர்களைப் போலவே வாழும் நிலை தற்போது உள்ளது. கந்துவட்டிக் கொடுமையும் அரங்கேறி வருகிறது. தென்பெண்ணையாற்றுப் படுகை உங்களுடையது. இதற்கு வெள்ளைக்காரன் ஆட்சியே பரவாயில்லை என்றால் எனக்குக் கோபம் வரும். என் அப்பாவும் இதற்காக கோபப்பட்டார். வெள்ளைக்காரர்களை விடச் சிறந்த தலைவர்கள் வருவார்கள் என்று நம்பினேன். வந்தார்கள், அவர்கள் கொள்ளைக்காரர்களாக மாறிவிட்டார்கள்.
உங்கள் அருகே உள்ள தாளகிரீஸ்வரர் கோயில் மகாபலிபுரத்திற்குப் பின் கட்டிய கோயில். அது பாதுகாக்கப்படாமல் சீரழிகிறது. இங்குள்ள தலைவர்கள் நாளை உங்கள் தொண்டர்கள். உங்களைத் தாக்கும் விஷயத்தைச் சொன்னால் அதைத் திட்டமிட்டு நாங்கள் நிறைவேற்றுகிறோம்.
இந்தியாவின் முதல் மாநிலம் என்ற விருது வாங்கி இருக்கிறோமே என்கிறார்கள். மற்ற ஊழல் மாநிலங்களுடன் ஒப்பிட்டுக்கொண்டு தமிழகம் முதல் மாநிலம் என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. உங்களுக்கு முதலிடம் வேண்டும் என்ற ஆசை இருந்தால் நான் கொடுக்கிறேன் முதலிடம். ஊழலில், மானுட உரிமைகளை மத்திய அரசிடம் விட்டுக்கொடுப்பதில், மாணவர்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகும் மாநிலங்களில், மணல் கொள்ளையில் தமிழகம் முதலிடம். அதை இந்த இடத்தில்தான் சொல்ல வேண்டும்.
நான் வருமான வரி கட்டினேனா என்று வருவாய்த்துறை அலுவலகத்தில் கேட்டுவிட்டார்கள். சரியாக வரி கட்டுபவர்களுக்கு பரிசு கொடுக்க வருமான வரித்துறையே அழைத்தது. இதுதான் எனக்கான சான்று.
எங்கள் திட்டங்களை யாரும் காப்பி அடிக்கக்கூடாது என்பதால் தாமதமாக வெளியிட்டுள்ளோம். இனி வார வாரம் திட்ட அறிக்கைகள் வெளியாகும். பெட்ரோல் விலை என்னவாக இருந்தாலும் அது இந்தியாவுக்கு நன்மை அளிக்காது. பெட்ரோல் விலை நமக்கு ரூ.84க்குக் கொடுத்துவிட்டு, வெளிநாட்டுக்கு ரூ.34.க்குக் கொடுக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய துரோகம்?
கிழக்கிந்திய நிறுவனம் போல ஆட்சி நடத்தும் இவர்கள் மேலும் கோபம் உள்ளது. சின்ன எழுத்து மாற்றம்தான். அவர்கள் வெள்ளைக்காரர்கள். இவர்கள் கொள்ளைக்காரர்கள். வெள்ளையனே வெளியேறு என்றதுபோல கொள்ளையனே வெளியேறு என்ற கோஷம் தொடங்கிவிட்டது.
பிரதமர் இன்று மாலை தொலைக்காட்சியில் தோன்றுகிறார் என்றாலே குலைநடுங்கும் குடிமக்கள் நிலை ஜனநாயக வரலாற்றில் இருந்ததாக நினைவில் இல்லை. அப்படிப்பட்ட ஆட்சி நடக்கிறது. அப்படி மக்களுக்கு வகுக்கப்பட்ட திட்டங்களை திரும்பிப் பார்க்க விருப்பமில்லை. விவசாயிகள், நெசவாளர்கள், நேர்மையாளர்களைப் புறக்கணிக்கிறார்கள்.
இதை எதிர்த்து, தமிழகத்தில் ஒலிக்கும் குரல் மக்களின் குரல். நீங்களும் சேர்ந்து குரல் கொடுங்கள். இங்கு எழுச்சி, புரட்சி எல்லாம் ஆரம்பித்துவிட்டது. அதை நீங்கள் முன்னின்று நடத்துங்கள். ஜனநாயகத்தில் என்னைப் பொறுத்தவரை மக்கள்தான் நாயகர்கள். நாங்கள் அவரின் சேவகர்கள்.
நாங்கள் எம்எல்ஏ வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுபவர்கள் எல்லோரும் ஒருவேளை கடமையைச் செய்யத் தவறினால், மக்களிடமிருந்து புகார் வந்தால் உடனே ராஜினாமா கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு, தார்மீக குற்ற உணர்வுடன் விலகவேண்டும் என்று ஒப்புதல் பெறுகிறோம். அது நடக்கத்தான் போகிறது.
இது ஒரு எழுச்சி, புரட்சி. இதில் நீங்கள் இணைந்தால் நாளை பெருமைப்படுவீர்கள். நீங்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும், இக்கட்சியில் இணைவீர்கள். வெற்றி பெறுவதற்காக அல்ல. இந்த நேர்மை எனக்கும் வேண்டும். 'ஸ்டாம்ப்' கலெக்ஷன் போல நாணயஸ்தர்களைச் சேகரித்து வருகிறோம். இதனால் அவர்கள் தூக்கம் கலைந்துள்ளது. மக்கள் நிம்மதியாகத் தூங்குவார்கள்.
நீங்கள் இக்கட்சியில் சேருங்கள். என் உரையைவிட உங்கள் உரை வலிமையாக இருக்கும். உங்கள் குழந்தைகள் உங்களைப் பெருமையாகப் பார்ப்பார்கள். அந்த விதையை இன்றே தூவிவிடுங்கள். விவசாயத்தைத் தொடங்கிவிடுங்கள். ஊர்கூடி தேர் இழுத்தால் நாளை நமதே".
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT