Published : 22 Dec 2020 02:13 PM
Last Updated : 22 Dec 2020 02:13 PM
அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திமுகவுடன் மறைமுகக் கூட்டணி வைத்துள்ளார் என்று சாத்தூர் அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு விருதுநகர் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகா் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மாற்றத்துக்குப் பின் மீண்டும் அதிமுக உட்கட்சிப் பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜியின் அதிருப்தி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சாத்தூா் சட்டமன்ற உறுப்பினா் ராஜவா்மன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பதவி நீக்கம் செய்யபட்ட ஒன்றியச் செயலாளா்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் சாத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜவா்மன் பேசுகையில், "முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எதிர்க்கோட்டை சுப்பிரமணியன் அமமுக கட்சிக்கு ஆதரவு தெரிவித்தற்குக் காரணமே கே.டி.ராஜேந்திர பாலாஜி தான்.
கட்சிக்கு உழைப்பவா்களை வைத்து இயக்கம் நடத்த வேண்டும். ஆனால் மாற்றுg கட்சியில் இருந்து வந்தவா்களை வைத்து இயக்கத்தை நடத்தினால் நன்றாக இருக்காது என அண்ணா சொன்னார். ஆனால் தற்போது விருதுநகா் மாவட்டத்தில் அமைச்சர் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவா்களை வைத்து கட்சி நடத்துகிறார்.
என்னையும் மற்றும் என்னுடன் வந்தவா்களைப் பற்றியும் கட்சி நிர்வாகிகளிடம் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார். நான் கரோனா நேரத்தில் மக்களுக்குப் பணி செய்யவில்லை என பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் தெரிவித்தால் உடனே எனது பதவியை ராஜினாமா செய்யத் தயார்.
நான் பொதுமக்களை சந்தித்தது தவறு என்கிறார்கள். நான் வேலை செய்யாமல் இருந்தால் நிம்மதியாக இருக்கலாம் என்றார். நாங்கள் உண்மையான அதிமுகவினா். எனவே, மாற்றுக்கட்சிக்குச் செல்ல மாட்டோம். கட்சிக்குத் துரோகம் செய்பவா்களை விரட்டி அடிப்போம்.
அமைச்சர் என்னை சட்டமன்ற உறுப்பினா் ஆக்கினால் அவருக்கு நான் அடிமையாகத் தான் இருக்க வேண்டுமா? உருவாக்கிய அவரே என்னை அழிக்க நினைக்கிறார். மீ்ண்டும் அதிமுக ஆட்சிக்கு வர நாங்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அமைச்சர் மற்றும் அவரது ஆட்கள் எங்களைத் தடுக்கிறரா்கள்.
என்னைக் கொலை செய்து விடுவேன் என அமைச்சர் பேசிய ஆடியோவை கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுப்போம். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திமுகவுடன் மறைமுகக் கூட்டணி வைத்து விருதுநகா் மாவட்டத்தில் அதிமுகவை அழிக்க நினைக்கிறார். சமயம் வரும்போது தொண்டா்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.
அமைச்சர் விருதுநகா், சிவகாசி மற்றும் ராஜபாளையம் தொகுதிகளில் நின்றாலும் மக்கள் பாடம் புகட்டுவார்கள். என்னை எவ்வுளவு அவமானப்படுத்தினாலும் இந்த மக்களுக்காக என் உயிரைக்கூட கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.
உங்களுக்கு உழைக்கும் எனக்குப் பல இடையூறுகள் ஏற்படுத்துகிறார்கள். அதில் குறிப்பாக காவல்துறையை வைத்து என்னை மிரட்டுகிறார் அமைச்சர். அதிகாரிகள் நினைத்தால் நம்மை சவ குழிக்குள் கூட தள்ளி விடுவார்கள். அமைச்சருக்கு அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அமைச்சர் எங்களை மதித்ததால் நாங்களும் மதிப்போம்.
என்னைப் பல தடவை ரவுடிகளை வைத்து அமைச்சர் கொலை மிரட்டல் விடுக்கிறார். தேவைபட்டால் அந்த ஆடியோவை வெளியிடத் தயார். எனது தொகுதியில் நடைபெறும் அரசு விழாக்களுக்கு என்னை அழைப்பதும் இல்லை.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கட்சியை அழிப்பதைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்" என்றார்.
சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மனின் இப்பேச்சு அதிமுகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT