Published : 22 Dec 2020 02:15 PM
Last Updated : 22 Dec 2020 02:15 PM
ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால் அது அதிமுக, பாஜகவைத்தான் பலவீனப்படுத்தும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது தொடர்பாக, கோவையில் இன்று (டிச.22) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"தங்களின் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக பாஜக அரசு செய்யும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதிமுக அரசு துணைபோகிறது. மாநில உரிமைகளைப் பறிப்பது குறித்து எந்தவித எதிர்கேள்விகளையும் கேட்பதில்லை. மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களைக் கண்டிக்க வேண்டிய தமிழக முதல்வர், இதுபோன்ற சிறந்த சட்டம் இல்லை என ஆமோதிக்கிறார்.
எனவே, 'தமிழகத்தை வஞ்சித்துவரும் அதிமுக அரசை அகற்றுவோம், பாஜகவை நிராகரிப்போம்' என்ற முழக்கத்தை வலியுறுத்தி வரும் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்த உள்ளோம்.
இவ்வியக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10 ஆயிரம் குழுக்கள் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகள் குறித்துப் பிரச்சாரம் மேற்கொள்ளும்.
கரோனா காலத்தில் குடும்பங்களுக்கு மாதம் ரூ.5,000 அளிக்க வலியுறுத்தினோம். ஆனால், கருணையற்ற முதல்வர் கொடுக்கவில்லை. இப்போது ரூ.2,500 கொடுக்கிறார். சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டுதான் பொங்கலுக்குப் பணம் கொடுக்கும் திட்டத்தை முதல்வர் செயல்படுத்துகிறார்.
அதிமுக - பாஜக கூட்டணி கொள்கையற்ற கூட்டணி. ஒட்டுமொத்த தமிழக மக்களும் அதிமுக, பாஜகவுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலில் ஓட்டுகளைப் பிரிக்கத்தான் பயன்படும். அதனால்தான் அவரை பாஜகவின் 'பி' டீம் என்கிறோம்.
ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால் அது திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதிமுக, பாஜகவைத்தான் அது பலவீனப்படுத்தும். மேலும், சினிமா என்பது வேறு, அரசியல் என்பது வேறு என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள்".
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT