Published : 22 Dec 2020 11:45 AM
Last Updated : 22 Dec 2020 11:45 AM

முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள்; நடவடிக்கை கோரி ஆளுநரை சந்தித்து மனு வழங்கினார் ஸ்டாலின்

ஆளுநரை சந்தித்து மனு வழங்கிய மு.க.ஸ்டாலின்.

சென்னை

முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் அடங்கிய மனுவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வழங்கினார்.

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று (டிச. 22) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி., திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. உள்ளிட்டோர் சந்தித்து முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை மீது 97 பக்க ஊழல் புகார்கள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.

ஆளுநரிடம் கொடுத்துள்ள தமிழ்நாடு அமைச்சரவை மீதான ஊழல் பட்டியலின் சுருக்கம்:

"1. முதல்வர் பழனிசாமி மீது தனது நெருங்கிய உறவினர்களுக்கு 6,133.57 கோடி ரூபாய் மதிப்பிலான 6 நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை கொடுத்தது; கரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு கூடுதலாக வழங்கிய இலவச அரிசியை வெளி மார்க்கெட்டில் விற்று முறைகேடாக பணம் சம்பாதித்து அரசுக்கு 450 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது; முதல்கட்டமாக 200.21 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக தனது உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெயரில் 19 சொத்துக்களை வாங்கி குவித்தது குறித்து ஊழல் புகார்.

2. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது 'காக்னிசன்ட்' நிறுவன கட்டுமான அனுமதி ஊழல் உள்ளிட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த ஊழல் புகார்.

3. உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது 9 பினாமி நிறுவனங்களை வைத்து, அதிக விலைக்கு கிராம ஊராட்சி மன்றங்களுக்கு எல்.இ.டி விளக்கு கொள்முதல் செய்து 875 கோடி ஊழல் புகார்.

4. மின்வாரியத்துறை அமைச்சர் பி.தங்கமணி மீது நிலக்கரி இறக்குமதி, தரமற்ற நிலக்கரி வாங்கியது, போலி மின்சாரக் கணக்கில் ஊழல் உள்ளிட்ட 950.26 கோடி ரூபாய் ஊழல் புகார்.

5. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிய இலவச அரசி மற்றும் வாங்கிய அரிசியை வெளிமார்க்கெட்டில் விற்று முறைகேடாக பணம் சம்பாதித்தது குறித்த ஊழல் புகார்.

6. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது அரசு அதிகாரிகள் மாறுதல்கள் மற்றும் நியமனங்களுக்கா 20.75 கோடி ரூபாய் லஞ்சம் பெற்று வைத்திருந்த கவர்கள் வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டது; புதுக்கோட்டையில் கல் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக கல் வெட்டியெடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி ஊழல் செய்தது உள்ளிட்ட ஊழல் புகார்கள்.

7. வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது 1,950 கோடி ரூபாய் பாரத் நெட் டெண்டர் ஊழல் புகார்.

8. மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் மீது மீனவர்களுக்கு வாக்கி டாக்கி கொள்முதல் செய்ததில் 30 கோடி ரூபாய் ஊழல்.

முதல்கட்டமாக முதல்வர் பழனிசாமி மீதான வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளிட்ட எட்டு அமைச்சர்கள் மீது தற்போது ஊழல் புகார் பட்டியல் தமிழக ஆளுநரிடம் கொடுத்து, 2018 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டிடுமாறு வலியுறுத்தப்பட்டிருக்கிறது".

இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x