Published : 22 Dec 2020 10:01 AM
Last Updated : 22 Dec 2020 10:01 AM
டிசம்பர் 23-ம் தேதி தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (டிச. 22) வெளியிட்ட அறிக்கை:
"ஆண்டுதோறும் டிசம்பர் 23-ம் தினத்தை தேசிய விவசாயிகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம். இந்நாளில் விவசாயிகளின் கடின உழைப்பை போற்றுவோம். நன்றி கூறுவோம்.
மகளிர்; முன்னேற்றத்தை முன் நிறுத்தி, மகளிர் தினத்தை கொண்டாடுகிறோம். தொழிலாளர் தினம் கொண்டாடுகிறோம். ஆசிரியர் பணியின் அருமையையும் பெருமையையும் போற்றும் வண்ணம் ஆசிரியர் தினம் கொண்டாடுகிறோம். அதே வரிசையில், விவசாயிகளின் நலன் பேணவும், அவர்களின் உயர்வுக்கு வழிகாணவும், வாழ்க்கைத் தரம் உயரவும், விவசாயிகள் தினத்தை கொண்டாடுகிறோம்.
அடிப்படையில் இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயம் வளர்ந்தால் தான் தேசம் வளரும். 'விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கைவைக்க முடியும்'. ஆகவே, நாம் அனைவரும் விவசாயிகளின் கடின உழைப்பை போற்ற வேண்டும். அவர்களுக்கு உயர்வுக்கு நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும்.
கரோனா காலத்தில் உலகமே முடங்கி இருந்த போது விவசாயிகள் மட்டும் தான் தங்கள் விவசாயப் பணியை தொடர்ந்து செய்து அனைவரது பசியை போக்கினர் என்பதை இந்னாளில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.
'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்றார், திருவள்ளுவர். 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்றான் பாரதி. அப்பெருமக்கள் போற்றிய வேளாண்மையை நாம் போற்றுவோம். விவசாயிகள் துயரம் நீக்கவும், தொழில் உயரவும், வருமானம் பெருகவும், வழிகாணவும் மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் வளர்ச்சி பணிகளுக்கு துணைநின்று விவசாயிகள் வாழ்வு வளம் பெற என்றும் துணை நிற்போம். இந்நாளில் விவசாயிகள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகளை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்".
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT