Published : 22 Dec 2020 09:56 AM
Last Updated : 22 Dec 2020 09:56 AM
விவசாயிகளின் போராட்டம் குறித்து குஷ்பு தவறான புரிதலில் இருப்பதாக கமல் குறிப்பிட்டுள்ளார்.
மதுரையில் பாஜக சார்பில் விவசாயிகளின் நண்பர் மோடி என்ற விவசாயிகள் சந்திப்புக் கூட்டங்கள் நேற்று (டிசம்பர் 21) நடைபெற்றன. இதில் குஷ்பு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்தக் கூட்டத்தில் குஷ்பு பேசும் போது, "மத்திய அரசின் வேளாண் மசோதாக்கள் விவசாயிகளைப் பாதுகாக்கும், விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தும். ஒன்றரை லட்சம் விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கருத்துக் கேட்ட பிறகே வேளாண் மசோதாக்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் எதிர்க்கட்சிகள், இடைத்தரகர்களின் தூண்டுதலால் விவசாயிகள் போராடுகின்றனர்.
தற்போது விவசாயிகளைப் பயன்படுத்தி இடைத்தரகர்கள் ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் இடைத்தரகர்கள் சம்பாதிக்க முடியாது. விவசாயிகள் நேரடியாகப் பலனடைவார்கள். இதனால் இடைத்தரகர்கள் போராட்டத்தைத் தூண்டி வருகின்றனர்” என்று பேசினார். மேலும், எதிர்க்கட்சியினரையும், வேளாண் மசோதாவை எதிர்ப்பவர்களையும் கடுமையாகச் சாடியும் பேசினார் குஷ்பு.
இந்நிலையில், செஞ்சி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களச் சந்தித்தார். அப்போது குஷ்புவின் பேச்சு குறித்து கமலிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு கமல் கூறியதாவது:
"டெல்லியில் இடைத்தரகர்கள் தான் போராடுகிறார்கள் விவசாயிகள் போராடவில்லை என்று குஷ்பு கூறியது தவறான புரிதல். அங்கு இருப்பவர்கள் அனைவருமே விவசாய உபகரணங்களுடன், தாங்கள் விவசாயிகள் என்ற ஆதாரங்களுடன் போராடி வருகிறார்கள். அவர்கள் இடைத்தரகர்கள் அல்ல. சேற்றில் கால் பதித்தவர்கள். இங்கிருந்து போய் அவர்களுக்காக ஆதரவு குரல் கொடுப்பவர்களும் விவசாயிகள். மண்ணின் மைந்தர்கள்"
இவ்வாறு கமல் பேசினார்.
கமல் - குஷ்பு இருவரும் நெருங்கிய நண்பர்கள். பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். தற்போது அரசியல் களத்தில் குஷ்புவின் கருத்துக்கு முதன்முதலாக கமல் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT