Published : 06 Oct 2015 10:10 AM
Last Updated : 06 Oct 2015 10:10 AM
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில், ஒரே நேரத்தில் இரண்டு கூடுகளைக் கட்டி வசிக்கும் சாம்பல் நிற அணில்கள் அரிதாகக் காணப்படுகின்றன.
சாதாரண அணில்கள் மரங்கள், வீடுகளின் இடுக்குகளில் கூடு கட்டி வசிக்கும். சாம்பல்நிற அணில்கள் விசித்திரமானவை. உலகில் உள்ள சாம்பல் நிற அணில்களில், 75 சதவீதம் மேற்குத் தொடர்ச்சி மலையில்தான் உள்ளன. இவற்றில் பாதிக்கும் மேல், தமிழகத்தின் சில இடங்களில் மட்டும் உள்ளதாகக் கூறப்படுகிறது. மற்ற இடங்களில் அரிதாகவே காணப்படுகின்றன. இந்த சாம்பல் நிற அணில்கள், கர்நாடக மாநிலம் காவிரி வன உயிரினச் சரணாலயத்திலும், விருது நகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியிலும் மட்டுமே இருப்ப தாக ஆரம்பத்தில் கூறப்பட்டது.
இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் இந்த அணில் களை பாதுகாக்க, 1988-ம் ஆண்டு வன உயிரின சரணாலயம் தொடங் கப்பட்டது. இதன் மூலம், தற்போது அங்கு சாம்பல் நிற அணில்களும், அதன் வாழ்விடங்களும் அழிவது தடுக்கப்பட்டுள்ளது. தற்போது கொடைக்கானல், திண்டுக்கல், ஓசூர், அமராவதி மற்றும் மேகமலை வனப்பகுதியில் இந்த சாம்பல் நிற அணில்கள் வசிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் டி.வெங் கடேஷ் ‘தி இந்து’விடம் கூறிய தாவது: சாம்பல் நிற அணில்கள், மிகவும் அடர்த்தியான வனப்பகுதி யில் மட்டுமே வசிப்பவை. ஆற்றுப் படுகையை ஒட்டியுள்ள பெரிய, உயரமான மரங்களில் இந்த அணில்கள் வாழ்கின்றன. பழங் கள், விதைகள், பூச்சிகள், பறவை களின் முட்டைகள் மற்றும் சில குறிப்பிட்ட மரங்களின் பட்டைகளை உண்ணுகின்றன.
இந்த அணிலின் வால் சாம்பல் நிறத்தில் இருப்பதாலோ, என்னவோ இதற்கு சாம்பல் நிற அணில்கள் எனப் பெயர் வந்துள்ளது. வாலின் நுனிப் பகுதி வெண்மை நிறத்தில் காணப்படும். கோம்ரீட்டா எனும் கொடியைச் சார்ந்த பழங்களை இந்த அணில்கள் விரும்பிச் சாப்பிடும். அதனால், கோம்ரீட்டா கொடி இருந்தால் அந்த பகுதியில் இந்த அணிகள் இருப்பதை உறுதி செய்யலாம். பொதுவாக, இந்த அணில்கள் தனித்தே காணப்படும். சில நேரங்களில் துணையுடன் காணப்படும். பகலில் அனைத்து வேலைகளையும் செய்யும். இரவில் கூடுகளிலோ அல்லது மரக்கிளைகளிலோ உறங்கும்.
இரண்டு கூடுகள்
ஒவ்வொரு அணிலும் இரண்டு கூடுகளைக் கட்டுவது வியப்புக் குரிய விஷயமாகும். ஒரு கூடு பழுதடைந்தால், மற்றொரு கூட்டில் வசிக்கத் தொடங்கும். முதலில் கட்டும் கூட்டுக்கு ‘நெஸ்ட்’ என்றும், மற்றொரு கூடு ‘டிரே’ என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக காடுகளில் உள்ள ஆலமரம், புளிய மரம், மா மரங்களில் வசிக்கும்.
அதிகபட்சமாக 8 ஆண்டுகள் வரை உயிர் வாழும். ஆண்டுக்கு ஒரு குட்டியை மட்டுமே ஈனும். புலிகளைப் போலவே, இந்த அணில் களும் தனக்கென்று, எல்லையை வகுத்துக் கொண்டு வாழும். எனவே, இந்த அணில்கள் வசித்து வரும் வாழ்விடங்களை பாதுகாத் தால்தான், அவற்றை அழிவில் இருந்து காப்பாற்ற முடியும். ஆற்றங்கரைகளில் உயரமான மரங்களை வளர்த்தால், இந்த அணில்களை பாதுகாக்க முடியும் என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT