Published : 22 Dec 2020 03:16 AM
Last Updated : 22 Dec 2020 03:16 AM

டிச. 22 புயலால் அழிந்த 56-வது ஆண்டு நினைவு தினம்: யுனெஸ்கோ நினைவு சின்னமாக தனுஷ்கோடி அறிவிக்கப்படுமா?

ஆகாயப் பார்வையில் (ஏரியல் வியூ) தனுஷ்கோடி அரிச்சல்முனை.

ராமேசுவரம்

கடந்த 1964 டிசம்பர் 22-ம் தேதி வீசிய புயலில் தனுஷ்கோடி பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டது. ரயில் நிலையத்திலும் துறைமுகத்திலும் இருந்த ஆயிரக் கணக்கான மக்கள் சூறாவளிக் காற்றில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

சென்னையிலிருந்து இருந்து தனுஷ்கோடிக்கு வந்த போர்ட் மெயிலில் புயல் மிச்சம் வைத்திருந்தது வெறும் இரும்புச் சக்கரங்கள் மட்டுமே. இந்த ரயிலில் இருந்த 200-க்கும் மேற்பட்டோர் புயலுக்கு இரையாகினர்.

புயல் தாக்கி 50 ஆண்டுகளாகி விட்ட நிலையிலும்கூட தனுஷ் கோடியில் மருத்துவம், மின்சாரம், போக்குவரத்து, சாலை, குடிநீர் வசதி என்று எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் கடலை மட்டுமே நம்பி தனுஷ்கோடியைச் சுற்றி 500-க்கும் மேற்பட்ட கரைவலை இழுக்கும் மீனவ குடும்பங்கள் வாழ்கின்றனர்.

புத்துயிர் பெறும் தனுஷ்கோடி

2017-ல் ராமேசுவரம் முகுந்தராயர் சத்திரம் முதல் தனுஷ் கோடி அரிச்சல் முனை வரையிலும் அமைக்கப்பட்ட புதிய தேசிய நெடுஞ்சாலை திறக்கப்பட்டது. மேலும் தனுஷ்கோடி தபால் நிலையமும் திறக்கப்பட்டது. தனுஷ்கோடிக்கு ராமேசுவரத்தில் இருந்து 17.20 கி.மீ தொலைவுக்கு ரூ.208 கோடியில் புதிய ரயில் பாதை அமைக்க பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. கடல் வாணிப அமைச்சகத்தின் மூலம் தனுஷ்கோடிக்கு புதி தாக கலங்கரை விளக்கம் அமைக்கப் பட்டு வருகிறது.

புயலால் அழிந்த தனுஷ்கோடி யில் உள்ள மிச்சங்களைப் பார்ப் பதற்காகவே தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ராமேசுவரம் வந்து, செல்கின்றனர். கடந்த டிச.4 அன்று புரெவிப் புயலால் தனுஷ்கோடியில் உள்ள பழமையான தேவாலயத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

யுனெஸ்கோ நினைவுச் சின்னம்

தனுஷ்கோடியில் இடிந்த நிலையில் உள்ள கட்டிடங்களைப் பராமரித்துப் பாதுகாத்திடும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும், தொல்லியல் துறை மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றிட நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மொத்தம் ரூ.3 கோடி மதிப்பில் திட்ட வரைவு மேற்கொள்ளப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து தனுஷ்கோடி புயலில் மிஞ்சியுள்ள கட்டிடங்களைப் பாதுகாக்க வேண்டும். மேலும் தனுஷ்கோடியை யுனெஸ்கோ பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும் என்பதும் ராமேசுவரம் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்துவருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x