Published : 21 Dec 2020 09:14 PM
Last Updated : 21 Dec 2020 09:14 PM
மதுரவாயல்-வாலாஜா சாலையில் பெயரளவிற்கே பணிகள் நடைபெறுவதாகவும், முழுமையாக முறையாக பராமரிக்கப்படாததால் மதுரவாயல் - வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் இரு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இரண்டு வாரம் விதித்த தடையை பொங்கல் வரை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான தேசிய நெடுஞ்சாலை முறையாக பராமரிக்கப் பட வில்லை என கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கி அமர்வில் டிசம்பர் 9-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சாலை முழுவதும் 10 நாட்களில் 50 கோடி ரூபாய் செலவில் சாலையை மீண்டும் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், தற்போதுள்ள பள்ளங்கள் விரைவில் பழுதுபார்க்கப்பட்டு சரிசெய்யப்படும் என் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் சாலைகளின் தரம் உலக தரத்துக்கு இணையாக இல்லை என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் 500-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடப்பதாக சுட்டிக்காட்டினர்.
பின்னர் மதுரவாயல் - வாலாஜா சாலை பழுது நீக்கம் செய்யும் வரை இரண்டு வாரங்களுக்கு அந்த சாலையில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆறு வழிச்சாலை பணிகள் நடந்து வருவதாகவும், சாலையில் குழிகள் நிரப்பப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி சத்தியநாராயணன், தான் வேலூர் சென்று வந்தபோது எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தார். பெயரளவிற்கே பணிகள் நடைபெறுவதாகவும், முழுமையாக முறையாக பராமரிக்கப்படாததால் மதுரவாயல் - வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் இரு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இரண்டு வாரம் விதித்த தடையை பொங்கல் வரை நீட்டிக்கப்படும் என எச்சரித்தனர்.
லோனாவாலா மற்றும் ஆக்ராவில் உள்ளதுதான் தேசிய நெடுஞ்சாலையா என்றும், மதுரவாயல் - வாலாஜா சாலை எப்போது முதலில் அமைக்கப்பட்டது? எப்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டது? முறையாக பராமரிக்காத சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க எந்த சட்டம் வகைவகை செய்கிறது? என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்விகளுக்கு பதிலளித்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பு, ஆறு வழிச்சாலை அமைக்க ஒப்பந்தம் செய்து, 2013-ம் ஆண்டு முடிக்க திட்டமிடப்பட்டது எனவும், ஒப்பந்ததாரருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, 650 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மீண்டும் புதிய நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, பணிகள் துரிதமாக நடந்து வருவதால், 50 சதவீத சுங்க கட்டணம் மட்டும் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை நீக்க வேண்டுமென வாதிட்டார்.
சென்னை - வேலூர் சாலையில் கண்துடைப்புக்காக மட்டுமே பராமரிப்பு பணி நடைபெறுவதாகவும், சாலையை பயன்படுத்துவோரின் பாதுகாப்பு மிக முக்கியம் என அறிவுறுத்தியதுடன், சாலை பராமரிப்பு பணி குறைந்தபட்ச தரத்துடனாவது நடைபெற வேண்டும் என அறிவுறுத்தினர்.
2013-ல் முடிக்க வேண்டிய பணி 7 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய நீதிபதிகள், வீணாக்கப்படுவது யாருடைய பணம், எப்போதுதான் முடிப்பீர்கள் என கேள்வி எழுப்பினர்.
இருங்காட்டுக்கோட்டை பகுதியில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இருந்து வரும் நிலையில், வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்த சாலையில் பயணித்தால் யாருக்கு அவமானம் எனவும் கேள்வி எழுப்பினர். அவசர உதவி வாகனங்களுக்காக தனி வழியே கிடையாது என சுட்டிக்காட்டிய நீதிபதிகள் அதுகுறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் முழுமையான சுங்கக்கட்டணம் வசூலித்து வருவதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டுமென்ற உத்தரவை ஜனவரி 18 வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.
அதேபோல நொளம்பூரில் மழை நீர் வடிகாலில் விழுந்து பலியான தாய் மற்றும் மகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவது தொடர்பாக விளக்கமளிக்கவும் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT