Published : 21 Dec 2020 07:30 PM
Last Updated : 21 Dec 2020 07:30 PM
மதுரை அருகே 6 தலைமுறையாக ஒரு குடும்பம் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து, போட்டிகளை வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கிறது. தற்போது அந்த குடும்பத்தை சேர்ந்த எம்இ படித்த இளைரும் பாரம்பரியத்தை விடாமல் ஜல்லிக்கட்டு காளைளை வளர்க்கிறார்.
வீரத்திற்கும் பாரம்பரியத்திற்கும் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டி திருவிழா நெருங்கி கொண்டிருக்கிறது. மதுரையில் பொங்கல் பண்டிகை நாட்களில் நடக்கும் இந்த போட்டிகளுக்காக ஜல்லிக்கட்டு காளைகளை அதன் உரிமையாளர்கள் மும்முரமாக தயார் செய்துவருகின்றனர்.
இந்த காளைகளை அவர்கள் வேளாண்மைக்கு பயன்படுத்தமாட்டார்கள். ஆண்டிற்கு ஆயிரக்கணக்கான ரூபாய் முதல் பல லட்சம் வரை செலவு செய்து பராமரிக்கும் இந்த காளைகளை, அவர்கள் குடும்பத்தில் ஒருவராக கருதி வளர்ப்பார்கள். சிலர் நாட்டின காளைகளை பாதுகாக்கவும், இந்த ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கின்றனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு இந்த போட்டியும், அதன் காளைகளும் அனைவர் கவனத்தையும் ஈர்க்க ஆரம்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடந்தாலும் மதுரை அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடக்கும் போடிகள் உலகப் புகழ்பெற்றவை.
இந்த போட்டிகளுக்காக மதுரை அருகே எலியார்பத்தி கிராமத்தில் ஒரு குடும்பத்தினர் 6 தலைமுறையாக ஜல்லிக்கட்டு காளை வளர்க்கிறார்கள். தற்போது அந்த குடும்பத்தை சேர்ந்த பிடெக் படித்த இளைஞர் வீராராம் பராம்பரியத்தை விடாமல் வரவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக 4 காளைகளை வளர்க்கிறார்.
இவர்கள் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளைகளை ஒன்று கூட போட்டிகளில் ஜொலிக்காமல் போனதில்லை. மாடுபிடி வீரர்களிடம் பிடிப்பட்டதாக வரலாறும் கிடையது. போட்டிகளில் காளைகள் பெற்ற ப்ட்ரீஜ், வாஷிங் மிஷின், கட்டில், பீரோ போன்ற பரிசுப்பொருட்கள் வீடு முழுவதும் நிரம்பி இருப்பது பார்ப்போரை வியக்க வைக்கிறது.
இதுகுறித்து வீராராம் கூறுகையில், ‘‘நான் எம்இ படித்துவிட்டு விவசாயம் பார்க்கிறேன். சமீபத்தில் மதுரையில் ஒரு கம்பெனியும் தொடங்கியுள்ளேன். மற்ற எந்த தொழில்கள் செய்தாலும் விவசாயத்தையும், காளைகள் வளர்ப்பதையும் எங்கள் குடும்பத்தில் பராம்பரியமாக செய்து வருகிறோம்.
முன்பு ஆயிரத்திற்கு மேற்பட்ட கிடை மாடுகள் வளர்த்தோம். தற்போது 60 கிடை மாடுகள் வளர்க்கிறோம். அதில், ஒரு மாடு கூட கலப்பின மாடு கிடையாது. அனைத்து மாடுகளும் புளியங்குளம் வகை நாட்டின மாடுகள்தான் வளர்க்கிறோம்.
கிடைமாடுகளை காப்பாற்றினால்தான் நாட்டின மாடுகளை காப்பாற்ற முடியும். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப்போட்டிக்காக 4 காளைகளை தயார் செய்துள்ளோம். 1985 முதல் எங்க அப்பா, தாத்தா வளர்த்த காளைகள், ஜல்லிக்கட்டுப்போட்டிகளில் ஜாம்பவனாக திகழ்ந்தவை. முன்பு தொடர்ந்து 4, 5 ஆண்டுகள் பிடிப்படாமல் சிறப்பாக விளையாடும் காளைகளை ஜல்லிக்கட்டு விழாவில் கவுரவிப்பார்கள். அப்படி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் எங்கள் காளைக்கு பரிவட்டம் காட்டி சிறந்த காளையாக தேர்வு செய்து கவுரவிக்கப்பட்டது.
பொதுவாக ஜல்லிக்கட்டு காளைகள் அதிகப்பட்சமக 18 ஆண்டுகள் வரைதான் உயிர் வாழும். ஆனால், எங்கள் சிறப்பான பராமரிப்பால் 23 வயது வரையுள்ள ஜல்லிக்கட்டு காளைகள் கூட உள்ளது. நாங்கள் மற்றவர்களை போல் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவன முறைகள் வைப்பது இல்லை.
தோட்டம் இருப்பதால் காளைகளுக்கு தீவனம் கிடைத்துவிடுகிறது. மழை பெய்தால் பசும்புல் சாப்பிடும். தோட்டத்திற்கு வேலைக்கு செல்லும்போது கட்டிப்போட்டு மேய விடுவோம். காளைகளுக்காக நாங்கள் செலவிடுவது நேரசெலவுகள் மட்டுமே, ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT