Published : 21 Dec 2020 06:43 PM
Last Updated : 21 Dec 2020 06:43 PM
சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக, சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் டிசம்பர் 21-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாநில மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினருமான கனிமொழி தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் கஸ்தூரி தங்கம், மகளிர் தொண்டரணி செயலாளர் உமாதேவி, தெற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெஸி பொன்ராணி, தொண்டரணி செயலாளர் வேலம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பெ.கீதாஜீவன் எம்எல்ஏ, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். மாநில மகளிர் அணி துணை செயலாளர் விஜயகுமாரி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன், மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் மகளிரணி, மகளிர் தொண்டரணியை சேர்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்பி பேசியதாவது: தமிழக மக்களுக்கு தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் துரோகம் செய்து வருகின்றன. 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் வேலை வாய்ப்பு வழங்கவில்லை.
அரசின் எந்த திட்டமும் மக்களுக்கு வந்து சேர்வதில்லை. மத்திய மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு நாட்டை நாசமாக்கி வருகின்றன. கல்வி, சுகாதாரம், பெண்கள் பாதுகாப்பு என பலவற்றில் முன்னேறிய மாநிலமாக இருந்த தமிழகம் கடந்த பத்தாண்டுகளில் தொடர்ந்து பின்தங்கி வருகிறது.
மத்திய அரசின் உத்தரவுகளை அப்படியே நிறைவேற்றும் அரசாக, அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் அரசாக தமிழக அரசு உள்ளது. மக்கள் விரோத சட்டங்களை முதல் ஆளாக எதிர்ப்பவர் திமுக தலைவர் ஸ்டாலின். சமையல் எரிவாயு விலை ஏற்றத்தால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு இதனை புரிந்து கொண்டு விலை ஏற்றத்தை திரும்ப பெற வேண்டும். இல்லை எனில் தொடர்ந்து போராட்டம் நடைபெறும்.
அவர்கள் சொல்வதற்கு தலையாட்டும் ஆட்சி நீண்ட நாள் தமிழகத்தில் நீடிக்காது. விரைவில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி ஏற்படும் என்பதை மத்திய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கரோனா, ஊரடங்கு போன்ற பல்வேறு நிலையில் தவித்து கொண்டிருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டிருப்பது கண்டத்திற்குரியது. விரைவில் திமுக ஆட்சி தமிழகத்தில் உருவாகும். அந்த ஆட்சி தலையாட்டி பொம்மையாக இருக்காது. தமிழகத்துக்கு இழைக்கும் துரோகங்களை எதிர்த்து கேள்வி கேட்போம். எதிர்த்து போராடுவோம். மறுபடியும் தமிழகத்தை மீட்போம். இது உறுதி இவ்வாறு கனிமொழி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT