Published : 21 Dec 2020 06:29 PM
Last Updated : 21 Dec 2020 06:29 PM

விவசாயிகள் போராட்டத்தை ஆர்எஸ்எஸ்ஸின் அங்கமான பாரதிய கிஷான் சங் ஆதரிக்கிறதே; மத்திய அரசின் பதில் என்ன?- கி.வீரமணி கேள்வி

சென்னை

டெல்லியில் கடந்த 25 நாள்களாக நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்திற்குத் தீர்வு காண முன்வராத மத்திய பாஜக அரசை மக்கள் மன்றமும், உலகமும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுள்ளன. தன்முனைப்பைக் கைவிட்டு கீழே இறங்கி வராவிட்டால், வரலாறு ஒருபோதும் மன்னிக்கவே மன்னிக்காது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

“டெல்லி தலைநகரை முற்றுகையிட்டு கடந்த 25 நாள்களாக கட்டுப்பாட்டுடன் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் - பல்லாயிரக்கணக்கான மக்கள், குழந்தைகள், பெண்கள் உள்பட உணர்வுடன் ஈடுபட்டு அறவழியில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய அனுமதிக்காத நிலையில், சுற்றுப்புற புறநகர் எல்லைப் பகுதிகளின் சாலைகளில், தாங்கள் வந்த டிராக்டர்களிலும், டென்ட் அமைத்தும், உணவுகளை அங்கேயே தயாரித்தும், வாட்டும் மைனஸ் டிகிரி கடுங்குளிரிலும், கட்டுக்கோப்பாக வன்முறைக்குத் துளியும் இடந்தராமல், மிகவும் அறவழியில், சட்டம் - ஒழுங்கு, பொது அமைதிக்குச் சிறிதும் கேடு ஏற்படுத்தாத வகையிலும் நடைபெற்று வருவதைக் கண்டு உலக நாடுகள் மூக்கில் விரலை வைத்து அதிசயப்படுகின்றன.

அதன் காரணமாக, அனைத்துத் தரப்பினரும் அறவழிப்பட்ட ஆதரவினைத் தந்து, அவர்களது கோரிக்கையின் நியாயத்தின்பால் நிற்கின்றனர். விவசாயிகளின் நலனைப் பாதிக்கும் மூன்று சட்டங்களை அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய முறையேகூட தெளிந்த ஜனநாயக முறைக்கு எதிரானது.

வேளாண் சட்டங்கள் பிறக்கும்போதே சிக்கல்

மாநிலங்களவையில் நடந்த அமளி துமளிக்கிடையே குரல் வாக்கெடுப்பில் அம்மசோதாக்களை நிறைவேற்றியதாக அதன் துணைத் தலைவர் அறிவித்த முறை ஜனநாயக, நாடாளுமன்ற முறைக்கு விரோதமானது என்று அத்தனை எதிர்க்கட்சியினரும் குடியரசுத் தலைவரைச் சந்தித்து, அம்மசோதாக்களுக்கு ஒப்புதல் தரக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்த நிலையில்தான், இது சட்டமானது. எனவே, பிறக்கும்போதே சிக்கல்.

இந்தச் சட்டங்களை எதிர்த்து ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.)யிலிருந்து பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்மித் கவுர்பாதல் தன் பதவியை ராஜினாமா செய்தார் - தனது எதிர்ப்பைப் பதிவு செய்ய SAD என்ற சிரோன்மணி அகாலிதளக் கட்சி கூட்டணியிலிருந்து விலகியது.

பாஜகவினரும் - பாரதிய கிஷான் சங் அமைப்பும் எதிர்ப்பு

பாஜகவினர் பலரும், முக்கியப் பொறுப்பாளர்களும்கூட எதிர்ப்புத் தெரிவித்து, விவசாயிகளின் பக்கம் நிற்கின்றனர். அவ்வளவு தூரம் போவானேன், ஆர்எஸ்எஸ்ஸின் ஓர் அங்கமான பாரதிய கிஷான் சங் (BKS) அமைப்பு இந்தச் சட்டம் விவசாயிகளின் நலனை முழுமையாகப் பாதுகாக்கவில்லை என்று கூறி, திருத்தப்படவேண்டும் என்று பகிரங்கமாகவே கூறுகிறது.

78 முக்கிய ஓய்வுபெற்ற மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், நிர்வாகப் பிரமுகர்கள் இதில் உள்ள ஓரவஞ்சனை, குறைபாடு, அரசமைப்புச் சட்ட விரோத, ஜனநாயக விரோதப் போக்கு பற்றி விரிவாக விளக்கி, அறிக்கை வெளியிட்டுள்ளனர். பஞ்சாப்பில் வாங்கிய அரசு விருதுகளைத் திருப்பித் தருவது தொடர்கிறது. இதைவிட மத்திய மோடி அரசுக்கு மிகப்பெரும் அவமானம் வேறு இருக்க முடியாது.

விவசாயிகளுக்கு ஆதரவாக முன்னாள் போர் வீரர்கள் விருதுகளைத் திருப்பி அளித்துள்ளனர்

25 ஆயிரம் முன்னாள் போர் வீரர்கள் (War Veterans) தங்களது விருதுகளைத் திருப்பி அளித்து - தாங்கள் விவசாயிகளின் பக்கம் நிற்கிறோம் என்று பகிரங்கமாக அறிவிப்பு விடுத்துள்ளனர்.

இதுவரை சுமார் 30 பேருக்கு மேல் இந்தப் போராட்டத்தில் களத்தில் நின்று, கடும் பனி போன்றவற்றால் பாதிக்கப்பட்டும், இவர்களுக்கு ஆதரவாக ஒரு சிலர் தற்கொலை செய்துகொண்டும் தங்களது உயிர்களைப் பணயம் வைத்து - மத்திய அரசின் கல் மனத்தைக் கரைக்க முயன்றுள்ளனர்.

இதுவரை அவர்களது பிரதிநிதிகளை நேரில் அழைத்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து வைத்து, ஜனநாயகத்திற்குப் பெருமை சேர்க்கத் தயாராக இல்லாதது மிகவும் வருந்தத்தக்கது.

நாட்டில் நடைபெறுவது மக்களாட்சிதானே, மக்களாட்சி, மக்களின் குறைகளைக் கேட்டு, அதனைத் தீர்ப்பதுதானே நியாயம்? மக்கள் வாக்களித்துதானே பதவிக்கு வந்துள்ளனர். அந்த மக்களை இப்படி நடுத்தெருவில் 25 நாள்களாக அவர்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றப் போராடுவதிலிருந்து வேறு வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளலாமா?

‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ என்பதில் விவசாயின் பங்கும் பணியும், வாழ்வும் இல்லாவிட்டால், மக்கள் - அரசியல்வாதிகள் உள்பட வாழ முடியுமா? அப்படி இருக்கையில், அவர்கள் தாங்கள் விளைவிக்கும் பொருளுக்குரிய குறைந்தபட்ச ஆதார விலைக்கான (MSP - Minimum Support Price) உத்தரவாதம் இல்லாத ஒரு சட்டம் - தங்கள் நலனைக் கார்ப்பரேட் முதலாளிகளிடம் அடகு வைத்து, நாளடைவில் தாங்கள் வெறும் விவசாயக் கூலிகளாகும் நிலைக்குக் கொண்டு போய் நிறுத்திவிடும் என்று அச்சம் தெரிவிக்கும் நிலையில், அதனைப் போக்கி, அவர்கள் நெஞ்சில் பால் வார்த்து உத்தரவாதம் தந்து, இந்தச் சட்டங்களைப் பின்வாங்கினால் என்ன கேடு ஏற்பட்டுவிடும்?

தன்முனைப்பிற்கோ, வீண் வறட்டுப் பிடிவாதத்திற்கோ இடம் ஏது?

ஜனநாயகத்தில் தன்முனைப்பிற்கோ, வீண் வறட்டுப் பிடிவாதத்திற்கோ இடம் ஏது? சர்வாதிகாரத்தில் இதைக் கடைப்பிடித்தவர்கள் சரித்திரத்தில் பெற்றுள்ள இடம் எது? எங்கே? என்பதை இன்றைய பாஜக ஆட்சியாளர்கள் புரியாதவர்களா?

சட்ட அறிஞர் சாய்நாத்

அவசரக் காலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்று மார்தட்டும் இவர்கள், அதைவிட மோசமான மூன்று சட்டங்களை விவசாயிகளுக்கு மட்டும் எதிராக அல்ல, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளையே பறிக்கும் வகையிலும், எந்த நிலையிலும் இந்த ஒப்பந்தம்பற்றி எந்த ஒரு நீதிமன்றத்திற்கும் சென்று நியாயம் கேட்கும் உரிமை கிடையாது என்பதைவிட மிகப்பெரிய மனித உரிமை, அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைப் பறிப்பு உண்டா?’’ என்று சாய்நாத் என்ற ஒரு சட்ட அறிஞர் கேள்வி கேட்டு, விவசாயிகளை மட்டும் இது பாதிக்கவில்லை, குடிமக்களின் மனித உரிமைகளையும் பாதிக்கிறது என்று விரிவாக எழுதியுள்ளார் - உச்ச நீதிமன்றத்திலும் விளக்கியுள்ளார்.

எரியும் நெருப்பை அணைக்கவேண்டிய நேரத்தில், அதற்குப் பெட்ரோல் ஊற்றுவதுபோல, பாகிஸ்தானும், சீனாவும் போராட்டத்தைத் தூண்டி விடுகின்றன என்று சில பாஜகவினர் பொறுப்பற்று பேசிவருவது ‘‘வெந்த புண்ணில் வேலைச் சொருகும்‘’ கொடுமையாகும்.

அல்லற்பட்டு ஆற்றாத விவசாயிகளுக்காக மக்கள் அழுதிடும் கண்ணீருக்கு எவ்வளவு சக்தி என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும்; வீண் பிடிவாதத்தைக் கைவிட்டு, இறங்கிவந்து, விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டும். மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் தமிழக முதல்வர் சரியாகப் புரிந்துகொண்டுள்ளாரா?

நாட்டில் உள்ள இத்தனை அறிஞர்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து கூறுகின்றனர். தான் ஒரு விவசாயி என்று கூறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் தமிழக மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று பேசுவது, அவர் சரியானபடி சட்டங்களைப் புரிந்துகொண்டுள்ளாரா? அவருக்கு விளக்கியவர்கள் அதுபற்றி சரியான தகவல்களைத் தரவில்லை என்பது புரிகிறது.

விவசாயம், மாநில அதிகாரத்தின்கீழ் உள்ளது. அதில் சட்டம் செய்யும்முன் மாநில முதல்வர்களைக் கலந்து ஆலோசித்ததா மத்திய அரசு? மாநில உரிமைப் பறிப்புக்கு இது ஒன்றே போதுமே! இதைவிடப் பெரிய பாதிப்பு வேறு வேண்டுமோ. ரேஷன் கடை நீடிக்குமா? என்ற கேள்வியும், பதில் பெற முடியாததாக உள்ளது.

வரலாறு இவர்களை ஒருபோதும் மன்னிக்காது

எனவே, மக்கள் மன்றமும், உலகமும் இந்த அதிகார ஆணவத்தினைப் பார்த்துக் கொண்டுள்ள நிலையில், உடனடியாக விவசாயிகளின் கோரிக்கைளை ஏற்று, அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறாமல் காலம் தாழ்த்தினால், வரலாறு இவர்களை ஒருபோதும் மன்னிக்காது.

ஜனநாயகம் இத்தகைய கார்ப்பரேட் காவலர்களை எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்பது போகப் போகபுரியும். இனியும் காலந்தாழ்த்தாது, விவசாயிகளின்அரசியல் கலவாத இந்த அறப்போரின் நியாயத்தினை உணர்ந்து, சரியான முடிவு எடுக்கத் தவறக்கூடாது - மத்திய பாஜக அரசு.

பிரதமரின் பேச்சுக்குத் தக்க பதிலடி

கடந்த வெள்ளியன்று (18.12.2020) பிரதமர் மோடி மத்தியப் பிரதேச விவசாயிகளின் காணொலிக் கூட்டத்தில் உரையாற்றுகையில், புதிய வேளாண் சீர்திருத்தங்கள் ஒரே நாளில் உருவானதல்ல. விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண இருபதாண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் முயற்சி இது. ஆனால், டெல்லியில் போராடும் விவசாயிகளை அரசியல் ஆதாயங்களுக்காக எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன’’ என்று கூறினார்.

இதற்குத் தக்க பதிலளித்து, மறுப்புத் தெரிவித்து- 40 தொழிற்சங்கங்களில் ஒன்றான அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு (AIKSCC) பிரதமருக்கும், மத்திய வேளாண்துறை அமைச்சர் தோமருக்கும் தனித்தனியே இந்தியில் எழுதியுள்ள கடிதத்தில், ''டெல்லி எல்லைகளில் நடந்துவரும் விவசாயிகளின் போராட்டப் பின்னணியில் எந்த அரசியல் கட்சியும் இல்லை. உண்மை என்னவென்றால், அரசியல் கட்சிகளின் கருத்துகளை மாற்றிக் கொள்ளும்படி விவசாயிகளின் போராட்டம் அவர்களைக் கட்டாயப்படுத்தியுள்ளது.

எந்த ஓர் அரசியல் கட்சியுடனும், எந்த ஒரு கோரிக்கையும் இணைக்கப்படவில்லை என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று தெளிவுபடுத்தியுள்ளனர். பாஜகவிலிருந்து சிலர் இதற்கு ஆதரவு தருவதும் மற்றொரு சான்றாகும்”.

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x