Published : 21 Dec 2020 04:50 PM
Last Updated : 21 Dec 2020 04:50 PM
தமிழகத்தில் ஆதிதிராிவரட், பழங்குடியினர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பது தொடர்பாக வருவாய்த்துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் சென்னகரம்பட்டி அருகே நடுப்பட்டியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராமன்.
இவர் சமீபத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் நடுப்பட்டியில் உள்ள பட்டியல் பிரிவினருக்கான மயானத்துக்கு சாலை வசதி இல்லாததால் நெல் வயல் வெளி வழியாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்த செய்திகளின் அடிப்படையில் உயர் நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து பொதுநல வழக்கு ஒன்றை இன்று விசாரணைக்கு எடுத்தது.
இதனை நீதிபதிகள் என். கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தனர்.
பின்னர், தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புக்காக எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன? அந்த குடியிருப்புகளில் குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளதா? ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் இடங்களிலிருந்து மயானத்துக்கு செல்ல முறையான பாதை வசதி செய்யப்பட்டுள்ளதா?
மேலூர் நடுப்பட்டி கிராமத்தில் எப்போது சாலை வசதி செய்து தரப்படும்? ஆதிதிராவிடர் என்ற பெயரை பழங்குடியினர் அல்லது வேறு பெயர்களில் அழைப்பதற்கு வழிமுறைகள் உள்ளதா? என்பது குறித்து தலைமைச் செயலர், வருவாய்த்துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச. 23க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT