Published : 21 Dec 2020 03:40 PM
Last Updated : 21 Dec 2020 03:40 PM
சட்டப் பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தேர்தல் பிரச்சார தொடக்கப் பொதுக்கூட்டம் வரும் 27-ம் தேதி சென்னை ஒய்எம்சிஏ அரங்கில் நடக்க உள்ளதாக ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிமுக தலைமை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
“அதிமுகவின் கொள்கைகளையும், ஏழை, எளிய மக்களுக்கு ஆற்றிவரும் மகத்தான சேவைகளையும், நிறுவனர் எம்.ஜி.ஆர், நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோரது ஆட்சிக் காலங்களில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனைகளையும், அதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் சாதனைகளையும் மக்களிடத்திலே முழுமையாகக் கொண்டு சேர்த்திடும் வகையில்.
தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிரந்தரமாய் வீற்றிருக்கும் எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சியின் செயல் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தவும், ஜெயலலிதா உருவாக்கிய அமைதி, வளம், வளர்ச்சி என்னும் தாரக மந்திரத்தின்படி நடைபெறும் ஆட்சியை மீண்டும் மலரச் செய்து, தமிழ் நாட்டை தொடர்ந்து வெற்றிப் பாதையில் நடைபோடச் செய்திடும் வகையில், வருகின்ற டிச.27 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, ஒய்எம்சியே மைதானத்தில்,ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி மு.பழனிசாமி ஆகியோர் பங்கேற்று, தேர்தல் பிரச்சாரப் பணிகளைத் துவக்கி வைக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
2021-ல் நடைபெற உள்ள சட்டப் பேரவை பொதுத் தேர்தல் களத்தில் அதிமுக மகத்தான வெற்றிபெற, நாம் நிகழ்த்த இருக்கும் போர் முழக்கம் தான் இப்பிரச்சாரப் பொதுக்கூட்டம். இப்பொதுக்கூட்டத்தில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய நம் இருபெரும் தலைவர்களை நெஞ்சில் சுமந்து, பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கட்சி நிர்வாகிகளும், கட்சி உடன்பிறப்புகளும், பொதுமக்களும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும், இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் பங்குபெறுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி மு. பழனிசாமி, ஆகியோரின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது”.
இவ்வாறு அதிமுக தலைமை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT