Published : 21 Dec 2020 01:14 PM
Last Updated : 21 Dec 2020 01:14 PM
'அண்ணாத்த' படப்பிடிப்பில் ரஜினி மும்முரமாக உள்ளார். மேலும், கட்சி தொடங்கும் தேதி குறித்தும் விவாதம் நடத்தி வருகிறார்.
டிசம்பர் 31-ம் தேதி, கட்சி தொடங்கவுள்ள நாள் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார் ரஜினி. அன்றைய தினத்தில் எங்கு முதல் பொதுக்கூட்டம், எப்போது கட்சி தொடக்கம் உள்ளிட்டவை குறித்து ரஜினி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், ரஜினியின் அரசியல் வருகை மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
'அண்ணாத்த' படத்தில் ரஜினி மும்முரம்
தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் ரஜினி. கட்சிப் பணிகள் இருப்பதால், முதலில் தனது காட்சிகளை முடித்துவிடும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார் ரஜினி. இதனால் முழுமையாக ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் தற்போது படமாக்கி வருகிறது படக்குழு.
காலையில் 7 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ச்சியாகப் படப்பிடிப்பில் இருக்கிறார் ரஜினி. இந்த ஒத்துழைப்பினால் எதிர்பார்த்ததைவிட மிக வேகமாகவே படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 29-ம் தேதி சென்னை திரும்புகிறார் ரஜினி.
31-ம் தேதி கட்சி தொடங்கும் தேதி உள்ளிட்ட சில முக்கியமான விஷயங்களை அறிவித்துவிட்டு, மீண்டும் 'அண்ணாத்த' படப்பிடிப்புக்காக ஹைதராபாத் செல்லவுள்ளார். ஜனவரி 12-ம் தேதிக்குள் 'அண்ணாத்த' படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிட வேண்டும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது.
கட்சியின் முதல் பொதுக்கூட்டம்
ரஜினி கட்சியின் முதல் பொதுக்கூட்டம் எங்கு இருக்கும் என்பதுதான் அனைவருடைய ஆவலாக இருக்கிறது. இதற்காகத் தங்களுடைய ஊரில் முதல் பொதுக்கூட்டம் வைத்தால் நன்றாக இருக்கும் என்று ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் பலர் கூறியுள்ளனர். ஆனால், ரஜினியோ மதுரை அல்லது திருச்சி இரண்டில் ஒன்றை டிக் செய்வார் என்கிறார்கள். மதுரையாக இருக்க வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன. ஏனென்றால், மதுரையில்தான் தனக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால், அங்கு நடத்தலாம் என்பதுதான் ரஜினியின் எண்ணவோட்டமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
கட்சி தொடங்கும் தேதி
பொங்கலுக்கு முன்னதாக 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது. அதனைத் தொடர்ந்து முழுக்க கட்சிப் பணிகளிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவுள்ளார் ரஜினி. ஜனவரி 17-ம் தேதி கட்சி தொடங்குவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், அந்தத் தேதி மட்டுமின்றி ஜனவரி 20 மற்றும் ஜனவரி 24 ஆகிய தேதிகளும் பரிசீலனையில் உள்ளன. எந்தத் தேதியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறதோ, அன்றைய தினத்தை ரஜினி டிக் செய்யவுள்ளார்.
பொங்கல் பண்டிகை முடிந்தவுடன், தமிழக அரசியல் களம் மேலும் சூடு பிடிக்கும் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT