Published : 21 Dec 2020 03:15 AM
Last Updated : 21 Dec 2020 03:15 AM
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நேற்று நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் 300-க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பங்கேற்றன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரேக்ளா பந்தயத்தைக் கண்டுரசித்தனர்.
பொள்ளாச்சி அருகேயுள்ள பொன்னாச்சியூர் கிராமத்தில் ரேக்ளா நண்பர்கள் அமைப்பு மற்றும் பொன்னாச்சியூர், சமத்தூர், பில்சின்னாம்பாளையம் கிராம விவசாயிகள் சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
நாட்டு மாட்டு இனங்களைப் பாதுகாத்தல், அவற்றை வளர்க்க வேண்டிய அவசியம் மற்றும் விவசாயத்தில் இயற்கை உரப் பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தல் ஆகியவற்றுக்காக, இரண்டாம் ஆண்டாக நேற்று ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
இதில், பொள்ளாச்சி, உடுமலை, பழனி, தாராபுரம், ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், கிணத்துக்கடவு, நெகமம், செஞ்சேரிமலை, பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, மயிலை, காரி, செவலை, மலையன், காங்கயன் இனக் காளைகள் பூட்டப்பட்ட 300-க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பங்கேற்றன. 200 மீட்டர், 300 மீட்டர் என இரு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. நீண்டநாள் இடைவெளிக்குப் பின் நடைபெற்ற ரேக்ளா போட்டியைக்காண, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், போட்டியில் பங்கேற்றவர்களை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.
இதுகுறித்து ரேக்ளா போட்டி விழாக் குழுவைச் சேர்ந்த பிரகாஷ் கூறியதாவது:
அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகளுடன் போட்டி நடத்தப்பட்டது. கரோனா பரவல் மற்றும் தைப் பொங்கல் நெருங்கும் காலம் என்பதால் அதிக அளவில் ரேக்ளா வண்டிகள் பங்கேற்கவில்லை.
இரண்டு பல், நான்கு பல் உள்ள காளைகள் குறைந்த தூரமும், நான்கு பல்லுக்கு மேல் உள்ள காளைகள் அதைவிட சற்று அதிக தூரமும் ஓட வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. போட்டிகளில் வென்ற ரேக்ளா வண்டி உரிமையாளர்களுக்கு கோப்பை, பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்டுதோறும் தமிழக அரசே ரேக்ளா போட்டிகளை நடத்த வேண்டும் என்பதே கொங்கு மண்டல விவசாயிகளின் கோரிக்கையாகும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment